அரசியல் / 185
3. இக்குலத்தோரில் பிரவேச மெற்றிக்குலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கவேண்டியதென்றும்.
4. இங்ஙனங் கல்வியில் தேறினோர்களில் ஒவ்வொருவரை இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மெண்டாபீசுகளிலும் வைக்கவேண்டியதென்றும்,
5. இவர்கள் கல்வி நல்லொழுக்கத்துக்குத் தக்கபடி எவ்வகை உத்தியோகமுந் தடையின்றிக் கொடுக்கவேண்டியதென்றும்,
6. முநிசபில் சங்கத்திலும், கிராம சங்கத்திலும் இக்குலத்தோரின் கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து பேசுதற்குச் சகல டிஸ்டிரிகட்டுகளிலும் ஜில்லாக்களிலும் ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக்கூடாதவராயினும் கல்வி, நல்லொழுக்கத்தின்படி இவர்கள் யாரை நியமிப்பார்களோ அவரை அக்கிராசனாதிபதி ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டியதென்றும்,
7. ஜேயில் கோட் 464-வது சட்டடத்தில் பறையர்களைச் சகல தாழ்ந்த வேலையும் செய்விக்கலாமென்பதை எடுத்துவிடவேண்டியதென்றும்,
8. இத்தமிழ்நாட்டிலுள்ள சகல குளங்களிலும், கிணறுகளிலும் இவர்கள் தடையின்றி சலம் மொண்டுக்கொள்ள வேண்டியதென்றும்,
9.ஆங்கிலேய துரைமக்களிராது இந்துக்கள் உத்தியோகஞ்செய்யும் ஆபீசுகளிலும், கச்சேரிகளிலும் இக்குலத்தோர் உள்ளுக்கு வரப்போகாது, உட்காரப்போகாது என்று தடுக்குஞ் செய்கையை விடுத்து கஷ்டநிஷ்டூரங்களை உடனுக்குடன் விசாரித்து நீதியளித்தனுப்ப வேண்டியதென்றும்,
10. இவர்கள் வசிக்கும் கிராமங்களில் மணியகாரன், முனிசிப்பாக இக்குலத்தோருள் ஒவ்வொருவரை நியமிப்பதுடன் ஆங்கிலேய கலெக்டர் துரையவர்கள் கிராமங்களுக்கு வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதியளிக்க வேண்டும் என்னும் பத்தாவது கோரிக்கையும் குறிப்பித்திருந்தோம்.
- 3:14; செப்டம்பர் 15, 1909 -
நீலகிரியில் 1891 வருஷம் நிலைநாட்டிய திராவிட சபையோரால் சென்னை மகாசபைக்கு பிரதிநிதியை அனுப்பி அனுகூலம் பெற்ற விஷயங்கள்
அதாவது,
1892 வருஷம் ஏப்ரல் மீ சென்னையிற்கூடிய மகாஜனசபைக்கு நீலகிரியிலுள்ள திராவிட சபையோர் ஓர் பிரதிநிதியை அனுப்பி இக்குலத்து ஏழைகளுக்கு மேலுமேலுங் கலாசாலைகள் வகுத்து இலவச கல்வி கற்பிப்பதுடன் கிராமங்களிலுள்ள விவசாய ஏழைகளுக்கு பூமிகளுங்கொடுத்து ஆதரிக்கவேண்டுமென்று கேட்டு, மகாஜன சபையாருள் இராஜா சர் சவலை இராமசுவாமி முதலியாரவர்கள் அவற்றை ஏற்கவும், எல்லூர் சங்கரம் ஐயரவர்கள் ஆமோதிக்கவும், திராவிடபிரதிநிதி க. அயோத்திதாஸ் பண்டிதரவர்கள். உதவி ஆமோதகராகவும் விளங்கியதன்பின், சபாநாயகர் ஆனரெபில் பி, அரங்கைய நாயுடுகாரவர்களும், காரியதரிசி எம். வீரராகவாச்சாரியர், பி.ஏ. அவர்களும் சங்கத்தோருக்கு விளக்கி பெருந்தொகையார் சம்மதப்படி, கிராமங்கபோரும் இக்குலத்து சிறுவர்களுக்குக் கலாசாலைகள் ஏற்படுத்தவும், இக்குலத்து விவசாயிகளுக்கு பூமிகள் கொடுத்து ஆதரிக்கவும் வேண்டுமென்று கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு (ரெக்கமெண்டு) செய்தார்கள். அதனைக்கண்ட கருணை வள்ளலர்களாம் கவர்ன்மெண்டார் கிராமமெங்கணும் இக்குலத்து ஏழை சிறுவர்களுக்குக் கலாசாலைகள் நியமிக்கலாமென்று உத்திரவளித்ததுடன் கவர்ன்மெண்டாரும், லோக்கல் பண்டு போர்டாரும், முநிசிபாலிட்டியாரும் அதற்கு உதவிபுரிய வேண்டுமென்று கவர்ன்மெண்டு ஆர்டர் வெளியிட்டதுடன் பூமிகளுங் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென்று உத்திரவளித்துவிட்டார்கள்.
அவ்வுத்திரவின்பேரில் பல கிராமங்களிலும் கலாசாலைகள் ஏற்படுத்தி அனந்தமாயிரம் ஏழைச் சிறுபிள்ளைகள் வாசித்துவருவதுடன் இக்குலத்து விவசாயிகளில் அனந்தம் பட்டாதாரர்களுந் தோன்றினார்கள்.