பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தோன்றுவதில்லை. மிருகாதிகளாம் வால்நரராம் வானரர்கள் தோன்றாவிடின் வாலற்ற நரராம் மக்கள் தோன்றுவதில்லை. தேவர்களும் முனிவர்களும் தோன்றுவதில்லை. தேவர்களும் முனிவர்களுந்தோன்றாவிடின் நல்லட்சேத்திரம் பெற்றுலாவும் ஒளிகளாம் நட்சேத்திர வானுலகுமில்லாமற்போம்.

ஆதலின் சீவராசிகள் தோற்றுவதும், சீவராசிகளை வளர்ப்பதும், சீவராசிகளை சுத்திகரிப்பதும் வானமுதென்னும் மழையாதலின் அம்மழையானது சருவ சீவராசிகளிடத்தும் யாதோர் கைம்மாறுமின்றி தானே சுகத்தை அளித்து வருகின்றது. அதன் கருத்தோவெனில் சருவ சீவராசிகளிடத்தும் யாதொரு (லஞ்சமும்) வாங்காமல் தானே சுகமளித்து வருதலாகும்.

இவ்வகை யாது கைம்மாறுமின்றி வானின்று பெரும்பலனால் தாங்களும் சுகித்து தங்களை அடுத்தோர்களையும் சுகிக்கச் செய்வார்களாயின் மாதம் மும்மாரி பெய்து வரப்பு முயர்ந்து நீரும் நிறம்பி பயிறும் ஓங்கி குடிகளும் சிறந்து கோனும் சிறப்புற்றிருக்கும்.

அங்ஙனம் யாது கைம்மாறுமின்றி பெய்யும் மழையின் பலனை தாங்கள் மட்டும் சுகித்து ஏனைய மக்கள் சுகிக்கலாகாதென்னும் பொறாமெயும், வஞ்சினமும், குடிகெடுப்பும் நிறைந்த குடிகள் பெருகி வானை நோக்குவதாயின் மழை பெய்யுமோ வரப்புயருமோ, நீர் நிறம்புமோ, பயிரோங்குமோ, குடிகள் சுகம் பெறுவரோ, கோன் ஆறுதலடைவரோ ஒருக்காலும் இராவாம்.

சீவராசிகளின் மீது அன்பும் காருண்யமும் அற்றவர்கள் மறுரூபிகளாயிருந்தும் மநுக்களாவரோ, மநுக்கள் என்னும் உருவந்தோன்றியும் உபகாரமற்றவர்கள் பெரியோர்களாவரோ, வானமுதென்னும் மழையானது பிராமணனுக்கு வேறென்று பிரித்துப் பெய்கின்றதோ, க்ஷத்திரியனுக்கு வேறென்று விரிந்து பெய்கின்றதோ, சூத்திரனுக்கு வேறென்று சுருங்கி பெய்கின்றதோ யாதுமில்லை. சருவ சீவர்களையும் தோற்று வைத்து போஷித்து வளர்த்துவரும் வானமுதிற்கே பேதமில்லாதிருக்க தோன்றி தோன்றி மடியும் தொத்தலாம் மறுக்களிற் சிலர் ஏனைய மக்களுக்கு சீர்கேட்டை உண்டுசெய்துக் கொண்டு அவர்களை தலையெடுக்கவிடாமல் நசிக்கும் துற்செயல் மிகுத்தவர்கள் தங்களை உயர்ந்தசாதிகளென்று உயர்த்திக் கொள்ளுவதால் உயர்வரோ. இத்தகைய சீவகாருண்ணியமற்று தங்களை யொத்த மநுக்களையே மநுக்களாக பாவியாது சீர்கெடுத்துவருவோர் மற்றய சீவராசிகளின் மீது அன்பு பாராட்டுவரோ, தங்களுடன் பூமிமீதுலாவும் ஏழை எளியோர்கள் மீது அன்புபாராட்டாது வானத்தை நோக்கி மழை பெய்யவேண்டும் என்றால் பொய்யுமோ ஒருக்காலும் பெய்யாலாம்.

எப்போது காலமழைபெய்து குடிகள் சீர்பெறுவார்களென்னில், உபகாரகுணமற்ற உலுத்தர் கூட்டங்களும், வஞ்சநெஞ்சமுண்டாய் லஞ்சம் வாங்கித் தின்டோர்களும் தங்கள் சுகத்திற்காக ஏனையோரை கெடுப்போர்களும் எக்காலும் சீவகாருண்யமென்பதற்று இடுக்கண் செய்து திரிவோரும், பொய்யை மெய்யாகச் சொல்லிப் புலம்பித் திரிவோர் குணங்கள் மாறுங்காலமே காலமழைக் கேதுவென்னப்படும். காலமழைப்பெய்து களிப்படைவதே இந்திரர் தேய அடையாளமாகும். வஞ்ச நெஞ்சம் வைத்து வானத்தை நோக்குவதால் யாது பயனுங் கிடையாவாம்.

- 3:42, மார்ச் 30. 1910 -


126. தனவான்கள் நோக்கம் ஏழைகளை நோக்கின் இராஜாங்க நோக்கம் தனவான்களின் வாக்கை நோக்கும்

தற்காலம் விவேகமும், பெருந்தண்மெயும் அமைந்த பெரியோர்கள் சிலர் கருணைதங்கிய இராஜாங்கத்தோரை நோக்கி இந்தியாவிலுள்ள சிறுவர்கள் யாவருக்கும் நான்காம் வகுப்புவரையில் (கம்பல்சரி எடிகேஷன்) எனும் பிடிவாதக் கல்வி அளிக்கவேண்டுமென்பதாய்க் கேட்டதற்கு அவை