332 / அயோத்திதாசர் சிந்தனைகள்
ஏழைமக்களும் தன்மப்பிரியர்களும் ஆரா துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். அவரது அழியா தன்மமே அவரது மனைவிமக்களுக்கு யாதொரு குறைவுமின்றி சுகசீரளிக்குமென நம்புகின்றோம்.
- 4:40; மார்ச் 15, 1911 -
198. கைத்தொழில் கைத்தொழில்
நமது தேசத்தில் மெய்க்குருக்கள் நிறைந்திருக்கும்வரையில் மக்களுக்குக் கலை நூற்களைக் கற்பித்து கைத்தொழில்களை மேலும் மேலும் விருத்திச்செய்து அறிவை வளர்த்துவந்தார்கள். அதனால் தேசமெங்குங் கைத்தொழில் சீவனமும் விவசாய சீவனமும் விருத்திப்பெற்று சகலமக்களுங் கவலையற்ற சுகவாழ்க்கைப் பெற்று கலை நூற்களைக்கற்று குருவிசுவாசம், இராஜ விசுவாசமுற்று சிற்ப நூற்களிலும், சோதிடநூற்களிலும், வைத்திய நூற்களிலும் நீதிநூற்களிலும், ஞானநூற்களிலும் சிந்தையை உடையவர்களாய் இருந்ததுமன்றி வித்தியாவிருத்தியிலும், விவசாயவிருத்தியிலுமே கண்ணோக்கமுங் கருத்துமாயிருந்து கால மும்மாரிபெய்யவும் பூமி நையவும் பயிர் செய்யவுமான சுகபோஷிப்பால் கைத்தொழில்களை நூதன நூதனமாகக் கண்டுபிடித்து வந்தார்கள்.
அத்தகைய விருத்திகளுக்கு ஆதாரமாகிய மெய்க்குருக்கள் நசிந்து இத்தேசமெங்கும் பொய்க்குருக்களே வந்து நிறைந்து விட்டபடியால் பொய்மதக்கடைகளைப் பரப்பி பொய்யை மெய்யெனக்கூறி பொருள் பறித்து தங்கள் சுதேசங்களுக்கு அனுப்புவதுடன் தங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகப்புசிப்பிலிருந்து கொண்டு பூர்வக் கைத்தொழில்கள் யாவையும் மறக்கச்செய்து நாளெல்லாங்கெட்டு நாசமடைவதற்கு அவர்களது சோம்பேறி வித்தைகளை இனிதாகக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.
அவ்வித்தைகள்யாதெனில், நெடுக நிமிர்ந்து நெற்றியில் வட்டை வட்டையாகக் குறுக்கே பூசிக்கொண்டு கண்ணாடியைக் குனிந்து நிமிர்ந்து பார்த்துக்கொள்ளுங்கோள் அதுவோர் வித்தை. நெற்றியில் பட்டைபட்டையாக நெடுகப்பூசிக்கொண்டு நெளித்து நெளித்து பார்த்துக் கொண்டிருங்கோள், அதுவோர் வித்தை. சாமிகளைக் கழுத்தில் கெட்டியாகக் கட்டிக்கொள்ளுங்கோள், நீங்கள் விழுந்து கும்பிடும்போது அவைகளும் விழுந்துவிழுந்து கும்பிடட்டும், அதுவோர்வித்தை. இந்தக்கொட்டைகளை முடிபோல் செய்து சிரசில் போட்டுக்கொள்ளுங்கோள், ஏகுமிடங்களிலெல்லாம் உங்களுக்கு சோறுகிடைக்கும், இதுவோர் வித்தை, ஒன்பது கீற்றுக்கொட்டையாகப்பார்த்துக் கட்டிக்கொள்ளுங்கோள், குருபத்தினியண்டைப் போனாலுமப்பாவந்தீர்ந்துபோகும் அதுவோர் வித்தை. பலவருண நூல்திரட்சிக் கயிறுகளுடன் கொட்டைகளும் வேறுக்கட்டிக்கொள்ளுங்கோள் போகுமிடங்களிலெல்லாம் பொருக்க சோறு கிடைத்துப்போம், அதுவொரு வித்தை. அந்த மந்திரத்தை இவரை வேண்டிக்கொள்ளச்சொல்லுங்கோள் இந்த மந்திரத்தை அவரை வேண்டிக் கொள்ளச் சொல்லுங்கோள். அவர்களால் ஆகாவிட்டால் நீங்களே வேண்டிக் கொள்ளுங்கோள். இது ஆப்பத்திற்குச் சொல்லும் மந்திரம் ஒன்று, சோற்றுக்குச்சொல்லும் மந்திரமொன்று, இதுவோர் பெரிய சோற்றுவித்தை பொய்க்குருக்களால் இத்தகைய சோம்பேறி வித்தைகளைக் கற்றுக்கொண்டு கவலைமிகுத்தக் கடைச் சோம்பேறிகளாகி விட்டபடியால் மக்களது பூர்வவித்தைகள் யாவுமழிந்து பிச்சையேற்குந் தொழிலால் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். தங்கள் பிள்ளைகளும் அத்தொழிலில் நின்று சோம்பேறி வித்தைகளுக்கான பொய்ப்புராணங்களை எழுதவும், பொய்ப்போதனைச் செய்யவுமாய ஏதுக்களால் அரியவித்தைகள் யாவுமழிந்து சோம்பேறிச் சோறுண்ணும் சூன்யவித்தைகள் பெருகி நாளுக்கு நாள் மக்கள் சீரழிந்து போவதுடன் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிற் கற்பிக்கும் வித்தைகளையும் கையாடாது விட்டு வீண்சோம்பலடைந்துவருகின்றார்கள்.