பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 419

கண்கலக்கத்தையும் முநிசபில் கமிஷனரவர்களே தெரிந்து முக்கியமாக விதிக்கவேண்டிய வரிகளை விதித்து தவிர்க்க வேண்டிய வரிகளைத் தவிர்த்துக் குடிகளைக் கார்த்தல் வேண்டும். குடிகள் யாவரும் முநிசபில் அதிகாரிகளை நோக்கி நிற்பவர்களாதலின் முநிசபில் அதிகாரிகளின் அன்பும் நோக்கமும் குடிகள் மீது இறுத்தி சீர்திருத்தத்தில் யாதாமோர் ஆயாசமின்றி நிலைபெறச்செய்தல் வேண்டும். அப்போதே தேசமும் தேசக்குடிகளும் சுகச்சீர்பெற்று ஆனந்த நிலையடைவார்கள். அதுவே முநிசபில் சீர்திருத்தக்காரர்களின் பேருதவியுமாகும்.

தற்காலம் விதிக்க உத்தேசித்திருக்கும் வரிகளில் ஒன்றை சீர்தூக்கி ஆலோசிப்போம். அதாவது நாய்களுக்கென்று ஆறுமாதத்திற்கு நாலணாவென விதித்திருந்த வரியை பனிரண்டணாவாக உயர்த்தி வசூல் செய்துவருகின்றார்கள். அதே வரியை தற்காலம் இரண்டு ரூபாயாக உயர்த்தவேண்டுமென உத்தேசித்திருப்பதாகத் தெரிகின்றோம். இவ்வரியை உயர்த்துவதினால் எச்சீர்திருத்தத்திற்கு ஆதாரம். அல்லது நாய்களையே முநிசபில் எல்லைக்குள் வைக்கப்படாதென்னும் நோக்கமா, யாதும் விளங்கவில்லை. அவ்வகையாக நாய்களை அகற்றி விடுவதாயின் ஒவ்வோர் தோட்டமுள்ள இடங்களிலும், எளியக் குடிகள் வாசஞ்செய்யும் வீடுகளிலுங் கள்ளர்கள் தங்கள் தங்கள் சாவகாசம்போல் நுழைந்து பொருட்களை கொள்ளையடிப்பதுடன் குடிகளுக்கும் உபத்திரவங்கள் நேரிடுமென்றே விளங்குகின்றது.

எவ்வகையில் என்னில் தற்காலமுள்ள சிறு தோட்டங்களிலும், ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் சுத்துக்கட்டு அற்ற வீடுகளிலும் ஒவ்வோர் நாய்களிருந்தே சொத்துக்களைக் காபந்து செய்துவருகின்றது. அதனால் ஏழைக்குடிகள் பகலெல்லாம் உழைத்தும் இரவில் அயர்ந்து நித்திரை செய்து வருகின்றார்கள். அவ்வகையோர் இரண்டு ரூபாய் வரிக்கு பயந்து நாய்களை வளர்க்காமல் விட்டுவிடுவார்களாயின் கள்ளர்களுக்கு ஆனந்தமும் குடிகளுக்கு சுகக்கேடும் உண்டாமென்பது சொல்லாமலே விளங்கும்.

ஒவ்வோர் வீடுகளிலும் நாய்களை வளர்ப்பது தங்கள் தங்கள் வீட்டுக் காவலுக்கேயன்றி வேட்டைகளுக்கன்று. அந்நாய்களுக்கென்று சொற்ப வரிகளைவிதித்து ஜாக்கிரதையில் வளர்க்கும்படியான உத்திரவை அளிக்க வேண்டுமேயன்றி பெருந்தொகையான வரிகளை விதித்து நாய்களை வீடுகளில் வளர்க்கவிடாமலே செய்துவிடுவதாயின் உள்ள போலீசு உத்தியோகஸ்தர்களுக்கு மாறாக்கவலையும் ஓயா அலைச்சலும் உண்டாவதுடன் கத்துக்கட்டு இல்லா வீடுகளில் வாசஞ்செய்யும் எளியக் குடிகள் யாவரும் சுகச்சீர் கெட்டு தவிப்பார்களென்பது திண்ணமேயாம்.

அவைபோல் குதிரைவரிகளையும் வண்டிவரிகளையும் உயர்த்துவதினால் சில வண்டிகளையும் குதிரைகளையும் வரிகளுக்கு பயந்தே எடுத்துவிடும்படியாக நேரிடும். அதனால் வண்டிகளை வாடகைகளுக்கு விட்டு சீவிப்பவர்களுக்கும் நஷ்டம், வண்டியிலேறி ஆங்காங்கு செல்லுவோருக்குங் கஷ்டம். ஆதலால் கனமும் கருணையுந்தங்கியக் கார்ப்பரேஷன் கமிட்டியார் ஏழைக்குடிகளின் கஷ்டநஷ்டங்களை சீர்தூக்கி இப்போது இயற்றியுள்ள வரிகளையே இன்னும் குறைக்கத்தக்க முயற்சிகளைச் செய்து சீர்திருத்த செலவுகளையும் ஒடுக்கி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 6:8; சூலை 31, 1912 -


265. ஜப்பான் தேசச்சக்கிரவர்த்தியின் மரணதுக்கம்

ஆதியா யுலகி வருறை பயந்த / வண்ணலி னடியினைத் தொழுது
நீதியாஞ் செங்கோல் நெறிபிறழாது / நடாத்து ஜப்பானிய வேந்தன்
போதிய வரகம் புனித வில்லாளும் / புத்திரர் யாவரும் புலம்பக்
கோதிலாமரண மடைந்தவச்செய்தி / கேட்டுளங் கலங்கினா மம்மே.

ஜப்பான் தேசத்து சக்கிரவர்த்தி மிக்காடோ அவர்கள் 1912 ஜூலை 29 சோமவாரம் மரணமடைந்த செய்தியை அறிந்து மிக்க வியாகூலமடைந்தோம். அதாவது ஜப்பான் தேசத்து சக்கிரவர்த்தியின்