உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 451


2-வது. தம்மெய் ஒத்த மனுமக்களை மக்களாகப் பாவிக்காது மிருகங்களினுந் தாழ்ச்சியாக நடத்துவது அறிவுள்ளோர் செயலா.

3-வது. தாங்கள் மட்டிலும் சுத்தநீரை மொண்டு உபயோகிக்கலாம் ஏனையமக்கள் அவற்றை உபயோகிக்கலாகாதென்பது அறிவுள்ளோர் செயலா.

4-வது. தாங்கள் மட்டிலும் தங்கள் அழுக்குவஸ்திரங்களை வண்ணானிடங்கொடுத்து வெளுத்துக்கொள்ளலாம் மற்றுமுள்ள அக்கிறாம ஏழைக் குடிகளின் வஸ்திரத்தை அக்கிறாமத்து வண்ணானை எடுத்துத் துவைக்கலாகாதென்று கட்டுப்பாடு செய்வது அறிவுள்ளோர் செயலா.

5-வது. தங்களுக்குமட்லும் அக்கிராமத்து அம்மட்டன் சவரஞ் செய்துவரல்வேண்டும். ஏனைய ஏழைமக்களுக்கு அவ்வம்மட்டனை சவரஞ்செய்யவிடாமல் கட்டுப்பாடு செய்வது அறிவுள்ளோர் செயலா.

6-வது. தாங்கள்மட்டிலுங் குளித்து உடுத்தி மூன்றுவேளை புசித்து சுகிக்கலாம் ஏழைமக்களுக்கு ஒருவேளைக் கூழையூற்றி ஒருநாள் முழுவதும் ஓயாது வேலை வாங்குவது அறிவுள்ளோர் செயலா.

7-வது. தங்களுக்குள்ள தடிச்சோம்பலால் ஏறும்பிடித்து உழலாகாது, பூமிகளையும் புண்படுத்தலாகாது. பூமியை அழுது பண்படுத்தி விவசாய விருத்திசெய்யும் உழைப்பாளிகளுக்குத் தகுந்த கூலி கொடாமலும் தகுந்த வழியில் நடத்தாமலும் நசித்துத் துன்பப்படுத்தி அவர்களை ஊரைவிட்டே ஓடிவிடும்படிச் செய்வது அறிவுள்ளோர் செயலா.

- 6:34; ஜனவரி 29, 1913 -

தேசத்துள் ஒற்றுமெய் இல்லாமல் ஒவ்வொரு கூட்டங்களாக வெவ்வேறு பிரிந்திருக்கவேண்டுமென்னும் பெருநோக்கமே அறிவுள்ளோர் செயலா.

உன்சாமி பெரிது, என்சாமி சிறிது, இந்தச்சாமி வருமானம் எங்களுடையது, அந்தசாமி வருமானம் உங்களுடையதென்று சண்டையிட்டுத் திரிவதே அறிவுள்ளோர் செயலா.

குறுக்குப்பூச்சுப் பூசுங் கூட்டத்தோரே மோட்சம் போவார்கள் நெடுக்குப்பூச்சுப் பூசுவோர் நரகம் போவார்களென்று பாட்டுகள் பாடியுங் கூத்துகளாடியுந் திரிவது அறிவுள்ளோர் செயலா.

மற்றுமுள்ளக் குறைகளைக் கூறுவதாயின் வீணேயென்று அஞ்சி வித்தையின் விருத்தியை ஆலோசிப்போமாயின் பழைய எலி கத்திரிக்குமேல் வேறு கத்திரிசெய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய ஏற்றத்திற்குமேல் வேறு ஏற்றஞ்செய்து நீர்பாய்ச்சும் அறிவின்விருத்தி உண்டா.

பழைய சம்மான்குடை தாழங்குடைக்குமேல் வேறு குடைகள்செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய கலப்பைக்குமேல் வேறு கலப்பைச்செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய மண்வெட்டிக்குமேல் வேறு மண்வெட்டிச்செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய கிணறுகளுக்குமேல் வேறு கிணறுகள் வெட்டும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய தராசுதட்டுகளுக்குமேல் வேறு தட்டுகள் தராசுகள் செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய ரெட்டைமாட்டு வண்டிகளுக்குமேல் வேறு வண்டிகள் செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய ஒற்றைமாட்டு வண்டிகளுக்கு மேல் வேறு வண்டிகள் செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய நெல், கேழ்வரகு, சோள முதலிய தானியங்களுக்குமேல் வேறு தானியங் கண்டுபிடித்து விளைவிக்கும் அறிவின்விருத்தி உண்டா.