உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம், நாயின் வயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநிஷிவயிற்றிற் பிறக்கின்றோம், தவளை வயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம் என்னும் பொய்யைச்சொல்லி பொருள்பரித்து சீவிக்கும் பெருஞ்சோம்பேறிக் கூட்டத்தோர் பரவியும் அவர்களது பொய்யை மெய்யென நம்பித்திரியுங் கூட்டங்கள் அதிகரித்துவிட்டதுமன்றி மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் ஒற்றுமெயற்று பொய் வேஷங்களாகிய சாதிப்பிரிவினைகளையும், பொய் மதங்களாகிய சமயப் பிரிவினைகளையும் உண்டு செய்துக்கொண்டு தங்களது கண்ணையுங் கருத்தையும் சாதிபேதவிஷயத்திலும் சமயபேத விஷயத்திலும் ஊன்றி தாங்கள் அவற்றில் நிலைத்து சோம்பேறிகளானதுமன்றி தங்களை யடுத்தவர்களையும் சோம்பேறிகளாக்கிப் பின் சந்ததியோர்களுங் கெட்டழிவதற்கு பொய்சாதிகளுக்காயப் புத்தகங்களையும் பொய் மதங்களுக்காயப் புத்தகங்களையும் வரைந்துவைத்து அவைகளையே வாசிக்கவும் அவைகளையே கேழ்க்கவுமாக வைத்துவிட்டபடியால் அவைகளே வித்தைக்கும் விவசாயத்திற்கும் சத்துருவாகி தேசஞ் சீரழிவதுடன் தேசமக்களும் சீரழிவதற்கு ஏதுவாகிவிட்டது.

இத்தகையச் செயல்களே இதுகாருமிருக்குமாயின் தென்னிந்தியம் பாழடைந்திருப்பதுடன் தென்னிந்தியக்குடிகளும் பாழடைந்தே போயிருப்பார்கள்.

ஏதோ தென்னிந்தியக்குடிகளின் பூர்வ புண்ணியவசத்தால் கருணை நிறைந்த பிரிட்டிஷ் அரசாட்சியார் வந்து தோன்றி தென்னிந்தியாவும் தென்னிந்திய மக்களும் சுகச்சீர் பெற்று வருகின்றார்கள். அவ்வகை வந்தும் தேசத்தின் வித்தியா விருத்தியிலும் விவசாய விருத்தியிலுந் தங்கள் தங்கள் கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்தாது படிப்பதெல்லாம் இராஜாங்க உத்தியோகம் பெறுதற்கே படிக்கவேண்டுமென்னும் பேராசையுடன் கொடுத்த பாடத்தை உருபோட்டு ஒப்பித்து விடுவதிலேயே கண்ணுங்கருத்துமாகி விட்டதுமன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் சற்று களைப்பார்களாயின் இராட்சியத்தையே ஆண்டுக்கொள்ள வேண்டுமென்னுங் கருத்தையே மிகுபடப் பெருக்கி நிற்கின்றார்கள். இத்தகைய நோக்கத்தில் படிப்பதினால் வித்தியாவிருத்தியும் விவசாய விருத்தியுங் கெட்டு தேசமக்களும் பாழடைந்துபோவர்போல் காண்கின்றது.

ஆதலின் படிப்போர் யாவரும் தங்கள் கயபாஷையுடன் ஆங்கிலபாஷையை படிக்கினும் தங்களது கண்ணையுங் கருத்தையும் வித்தியா விருத்தி விவசாயவிருத்தியில் ஊன்றும்படி வேண்டுகிறோம்.

- 6:47: ஏப்ரல் 30, 1913 -


289. தற்காலம் இந்துக்களின் மநுதன்ம சாஸ்திரமே விவசாயத்திற்குக் கேட்டை உண்டாக்கிவிட்டது

மநுதன்ம சாஸ்திரம், பத்தாவது அத்தியாயம், 84-வது வசனம் “சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது.”

என்னும் இவ்வசனத்தை சாதிபேதம் வைத்துள்ளவர்கள் வாசிப்பதிலுங் கேட்பதிலும் இருந்தால் பயிரிடுந்தொழிலை நன்குமதிப்பார்களா, அதில் தங்கள் கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்துவார்களா இல்லை. அதனினும் இவ் வாக்கியத்தை வேதவாக்கியமென நம்பி நடக்கவேண்டுமென்பது விதி.

மநுதன்ம சாஸ்திரம், இரண்டாவது அத்தியாயம், 8-வது வசனம் “தெரிந்தவன் இந்த சாஸ்திரத்தை ஞானக்கண்ணினாலறிந்து இதிற் சொல்லியிருக்கிற தன்மங்களை வேதத்தினாற் சொல்லப்பட்டதாகவே எண்ணி தன்தன் தன்மத்தை நடத்தக்கடவன்”.

வேதத்தை நம்பி நடப்பவர்களே இந்துக்களாவார்களென்பதும், அன்னோர் முடிபு, விவசாயவிருத்திக் கேடாயுள்ள இத்தகைய சாஸ்திரத்தை எழுதினோரும் வாசிப்போரும் கேட்போரும் நம்பி நடப்போரும் இத்தகைய விவேகிகளென்று