468 / அயோத்திதாசர் சிந்தனைகள்
பெருங்குடிகளையும் தங்களது மித்திரபேதப் பொய்யாலும் தந்திரத்தாலும் வசப்படுத்திக்கொண்டு, பெளத்த அந்தணர்களைப்போல் வேஷமிட்டுத் தாங்களே சகலசாதிகளுக்கும் உயர்ந்த சாதிகள் என்றும் தங்களது பஞ்சபாதகச்செயலைப் பொறுக்காது அடித்துத் துரத்தி வந்தவர்களைத் தாழ்ந்த சாதியோரென்றும் வகுத்து தங்கள் செல்வாக்குள்ள இடங்களிலெல்லாம் பௌத்த விவேகிகளைத் துன்பப்படுத்தியும், செல்வாக்கு இல்லாவிடங்களில் மித்திரபேதங்களால் கெடுத்தும் வந்தார்கள்.
இவ்வகையாக பெளத்த அந்தணர்களைக் கெடுத்தும், பௌத்த மடங்களைக் கெடுத்தும், பௌத்த நூல்களை அழித்தும், பௌத்த விவேகக் குடிகளைப் பாழ்படுத்தியும் வந்தவற்றுள் முதற்குடியேறி யித்தியாதி பாழ்படுத்திய வேஷப் பிராமணர்கள் மட்டிலும் இருந்திருப்பார்களாயின் பெளத்த விவேகிகள் யாவரும் ஒன்றுகூடி மிலேச்சர்களை ஊரைவிட்டு அகற்றிவிடுவதுடன் அவர்கள் பூண்டே இவ்விடமில்லாமற் செய்திருப்பார்கள். இதன் மத்தியில் சோம்பேறி பிராமண வேஷெத்தையுங் குடிகள் அவர்களுக்குப் பயந்து பிச்சை கொடுப்பதையும் பார்த்துவந்த இத்தேசத்திய ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதியோர்களில் சோம்பேறிகளும் வஞ்சினர்களுமாகியச் சிலர்களும் பிராமண வேஷமணிந்துக்கொண்டு, சோம்பேறி சுகசீவனஞ்செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். நாதனமாகக் குடியேறியவர்களின் பிராமணவேஷத்தோடு இத்தேசக்குடிகளும் பிராமணவேஷம் அணிந்துக் கொண்டு பௌத்த நூற்களின் மூலப்பெயர்களையும், தன்மகன்மங்களையும், சரித்திரங்களையுமே பீடமாகக்கொண்டு மாறுபாடாயப் பொய்வேதங்களையும், பொய்ப்புராணங்களையும், பொய் சரித்திரங்களையும் உண்டு செய்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளுக்குப் போதித்து வந்தபோது பூர்வம் செவிகளில் கேட்டுவந்தப் பழைய பெயர்கள் தானே என்று நம்பி மோசம் போனார்கள். பெளத்த விவேகக் குடிகளின் போதங்களும் முயற்சிகளும் குடியேறிய வேஷப்பிராமண பெருக்கத்தால் பௌத்தர்களின் படங்கள் அழிந்தும் நூல்கள் சிதலுண்டும் தன்மங்கள் மாறுபட்டும் அதன்மம் பெருகியும் வந்ததுடன் பலத்தொழிற் பெயர்களையும் சாதிப்பெயர்களாக மாற்றி வேஷப்பிராமணர்கள் யாவரும் உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு, தங்கள் பொய்வேஷங்களைக் கண்டித்து வந்த பௌத்தர்கள் யாவரைத் தாழ்ந்த சாதியென வகுத்து, அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துவந்ததுமன்றி விவேகிகளைப் பலவகையான உபத்திரவஞ்செய்தும் கழுவில் ஏற்றியும் வசிகளில் குத்தியுங் கற்காணங்களிலிட்டுக் கொன்று, மற்றும் பௌத்தர்களையும் பயமுறுத்தி வந்தார்கள்.
வேஷப் பிராமணர்களின் இத்தியாதி கொடுந்துன்பங்களுக்கும் பௌத்தர்கள் அஞ்சாது தங்கள் வித்தையாலும், விவேகத்தாலும், சோதிடத்தாலும், வைத்தியத்தாலும், விவசாயத்தாலும், கைத்தொழிலாலுமே கஷ்டசீவனங்களைச் செய்துக்கொண்டே தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றி வந்தார்கள். இவற்றுள் இச்சாதி பேதம் வகுத்துக் கொண்டுள்ளவர்களிலேயே அரசாங்கமும் இருந்திருக்குமாயின் தாழ்ந்த சாதியோரென வகுக்கப்பட்டுள்ள பௌத்தர்களின் பூண்டே இத்தேசத்தில் இல்லாமற்போயிருக்கும். மத்தியில் மகமதிய துரைத்தனமும்,
போர்ச்சுகீஸ் துரைத்தனமும், பிரஞ்சு துரைத்தனமும் வந்து தோன்றி கொண்டேயிருந்தபடியால் பிராணன் நீங்காத கஷ்டசீவனத்திலேயே காலங்கழித்து வந்தார்கள். அந்தந்த துரைத்தனத்தாரிடமும் தந்திரமாக உட்பிரவேசித்து தங்கள் சுயப்பிரயோசனங்களை வேஷப்பிராமணர்கள் பெற்று வந்ததுடன், பௌத்தர்களைமட்டிலும் சுட்டிக்காட்டி இவர்கள் தாழ்ந்தசாதியோர்கள், இவர்களை அருகில் சேர்க்கப்படாது, தீண்டப்படாதெனப் போதித்து, அவர்கள் மனதையும் மாறுபடுத்தி இழிவடையச் செய்துவந்தார்கள். ஏதோ இவர்கள் புண்ணியவசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்துதோன்றி சகலசாதியோரையும் சமரசமாகப் பாதுகாத்துவந்தபோதினும்