470 / அயோத்திதாசர் சிந்தனைகள்
செய்து வருவதையறிந்த நூதன சாதி வேஷச் சத்துருக்களுக்கு மனஞ்சகியாது ஆ, ஆ, நாம் தாழ்த்திவைத்துள்ள கூட்டத்தோர்கள் யாவரும் பௌத்தர்களாகி விடுவார்களாயின் நமது சாதிவேஷச் செருக்கும் சமயவேஷக் கிருக்கும் மேலது கீழதாய் மாறுபட்டு மகத்துவங் குன்றிப்போம் என்னும் ரீதியால் தாழ்ந்த சாதியாரை உயர்த்தப்போகின்றோம் என்னுங் கூட்டங்கள் கூடி, கல்விக் கற்பிக்கின்றோம். அதில் இந்துமத பாடங்களைக் கற்பிக்கவேண்டுமென முயன்று நிற்கின்றார்கள். இவர்களது முயற்சிகள் யாவும் சுயநல முயற்சியே அன்றி பொதுதல முயற்சி அன்று. தாழ்த்தப்பட்டுள்ள ஏழைமக்களுக்கு மிஷனெரி துரைக்கள் செய்துவருங் கல்வி விருத்தியில் வீசபாகம் இவர்களது விருத்திநிலை பெறாது என்பது திண்ணம். காரணமோவென்னில் சாதிபேதமில்லாக் கூட்டத்தோருக்கு சாதிபேதமில்லா ஐரோப்பிய மிஷனெரிமார்கள் செய்துவரும் கல்வியின் விருத்தியே பேருபகாரமும் சிறப்புமாகும்.
சாதிபேதமுள்ளோர் சாதிபேதமில்லாருக்குக் கல்விவிருத்திச் செய்விக்கின்றோம் என்பது காலமெல்லாம் இவர்களைத் தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோர் என்றே சொல்லிக் கொண்டு சீரையழிப்பதற்கும் சிறப்பைக் கெடுப்பதற்குமேயாம்.
சாதிபேதமுள்ள மற்றொரு கூட்டத்தோர் தோன்றி சாதிபேதம் இல்லாதோர் வாழுஞ்சேரிக்குள் நுழைந்து, நீங்கள் சிவனைக்கும்பிட்டு வழக்கமாகி விட்டால் சிவனைக் கும்பிடுவதை விடாதீர்கள், விஷ்ணுவைக் கும்பிடுவது வழக்கமாகிவிட்டால் விஷ்ணுவைக் கும்பிடுவதை விடாதீர்கள். கூடிய சீக்கிரம் உங்களைக் கோவிலுக்குள் சேர்த்துக் கொள்ளுகிறோமென எய்த்து வருகின்றார்கள். அவ்வகையாக இவர்கள், அவர்கள் கோவிலுக்குள் போன போதிலும் அவ்விடம் இருட்டறையில் உள்ளக் கல்லை எட்டிப்பார்த்து துட்டு செலவாக வேண்டியகேடன்றி யாதொரு பயனுங்கிடையா. இவர்கள் அவர்கள் கோவிலுக்குப் போவதால் தேங்காய், பழம் தட்சணை, தாம்பூலம் அவர்களுக்குப் பயன்படுவதுடன் இந்துக்களென்னும் பெருந்தொகைக் கணக்குக்காட்டுவதற்கும் ஆளாவார்கள். சேரிக்குள் சென்று பிரசங்கிப்பது புத்ததன்மம் பரவலாகாது என்னும் உட்கருத்தும் தங்கள் சுயப்பிரயோசனம் பெருக வேண்டுமென்னும் வெளிக் கருத்துமேயாம்.
சாதிபேதமுள்ள இன்னுமோர் கூட்டத்தோர் புலியானது பசுமந்தையில் நுழைந்து பசுக்கூட்டங்கள் யாவையும் நாசப்படுத்த வேண்டும் என்பதாயின் பசுவின் தோலைப் போர்த்துக் கொண்டு, மந்தையிலுட் புகுந்த கதைபோல் இப்போது யதார்த்த பௌத்தர்களாகி வெளிதோன்றி சீர் பெற்றுவருவோரை தாங்களும் பௌத்தர்களெனக்கூறி வெளிவந்து தங்கள் பெண்டு பிள்ளைகளையுங் குடும்பத்தோர்களையும் பௌத்தர்களாக்கி புத்ததன்மம் போதிக்காது சாதிபேதமில்லாமற் சேரிகளிலும் பேட்டைகளிலும் வாழ்வோர்களையே சேர்த்துக்கொண்டு புத்ததன்மத்திற்கு எதிரடையாய அபுத்ததன்மத்தையே போதித்து வருகின்றார்கள். அதாவது நாங்கள் போதிப்பது இந்திய பௌத்தமல்ல, பர்மா பௌத்தமல்ல, தீபேத் பௌத்தமல்ல, ஜப்பான் பௌத்தமல்ல, சைனாபௌத்தமல்ல, சைன்ட்பிக் பௌத்தம், அதுவோ, பௌத்தசிலைகள் வைக்கப்படாது, பௌத்த குருக்களிருக்கலாகாது, மனிதனுக்கு கன்மத்திற்குத் தக்கப்பலனுங் கிடையாது, மனிதன் இறந்தப்பின் ஏதுங்கிடையாது. அதுவே மனிதனுக்கு முடிவு எங்கள் சைன்டிபிக்கின் மேலான ஆராய்ச்சியால் கண்டுபிடித்த பௌத்தம் இதுவே. ஆயினும், புத்தருக்கு முன்பே சாதிபேதம் இருந்திருக்கின்றதென வற்புறுத்திக் கூறுவார்கள். புத்தருக்கு முன்பே பிராமணர்களிருந்தார்கள் என்று கூறுவதற்கு மட்டிலும் அவர்கள் சைன்டிபிக் பௌத்தம் இடங்கொடுத்திருக்கின்றது. கன்மத்திற்குத் தக்க சுகதுக்கம், இறப்பு பிறப்புக்கு இடமில்லை. இவர்களது பௌத்த உட்கருத்து யாதெனில் புத்தருடைய காலத்திலேயே பிராமண பௌத்தனும் இருந்தான் பறபௌத்தனும் இருந்தானென சாதி பேத பௌத்தம்