பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அதுபோல் ஓரரசனுக்குள் அமைந்த குடிபடை அமைச்சு ஒற்றுமெயிலும் நன்மார்க்கத்திலுமிருந்து சகலரும் சுகமடையவிரும்பி வாழ்க்கைத் துணை நலம் நுகர்வார்களாயின் தாங்களும் தங்கள் குடும்பங்களும் சுகமடைவதன்றி அரசனும் இராட்சிய பாரத்தை யெளிதிற் சுமந்து தானும் ஆறுதலடைவான்.

அங்ஙனம் இராது ஆயிரங் குடிகளைக் கெடுத்து அரை முதலாளி களாகிறதும், மூவாயிரங் குடிகளை வஞ்சித்து முழுவேதாந்திகளாகிறதும், பத்தாயிரம் குடிகளைப் பாழாக்கி பெரிய சாதிகளாக்கிக் கொள்ளுகிறதுமாகிய ஒற்றுமெய்க் கேட்டினாலும் ஒருவருக்கொருவரை தாழ்த்தியும் வஞ்சித்தும் குடிகெடுத்துவரும் வாழ்க்கைப் பிரிவினாலும் அரசனுக்கு இராச்சியபாரம் அதிகமாகத் தோன்றி அதை குறைப்பதற்காய் மறக்கருணையால் குடிகளை தண்டிக்க ஆரம்பிக்கின்றான். அந்த தண்டனை நீதிமார்க்கக் குடிகளுக்கு செங்கோலாகவும், அநீதிமார்க்கக் குடிகளுக்கு கொடுங்கோலாகவும் விளங்கும்.

இவ்விருவகை நீதிகளை நன்குணராது செம்மறி ஒன்றன்பின் ஒன்று மடிவதுபோல் விழுவோமாயின் நஷ்ட பாகம் நம்முடையதே. தந்தையிடத்தில் மைந்தர்கள் சென்று தங்கள் விருத்திக்காம் எதுக்களை வாதிட்டும் வற்புறுத்தியுங் கேட்பார்களாயின் தந்தை விருத்திபேதங்களை நன்காராய்ந்து கேட்கும் பொருளைக் கொடுத்தே தீர்ப்பன்.

அதற்குப் பகரமாய் சிலகாலங்களுக்கு முன்பு நமது நாட்டுக் குடிகளுக்கு ஆளுகைக்காரரால் பலவகைத் துன்பங்கள் நேரிட்டு வருவதை நன்குணர்ந்த காங்கிரஸ் கமிட்டியார் குடிகளின் கஷ்ட நிஷ்டூரங்களைக் கவர்ன்மென்றாருக்கு எழுதி கலைக்டருக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்து விடவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

அதனை வாசித்த கவர்ன்மென்றார், குடிகளுக்கு நேரிடுந்துன்பங்கள் தங்களையொத்த இங்கிலீஷ் கலைக்கடர்களாலா அன்றேல் இச்சுதேச உத்தியோகஸ்தர்களாலா என உசாவுங்கால் இச்சுதேச உத்தியோகஸ்தர் தாசில்தார்களால் குடிகளுக்குத் துன்பம் நேரிடுகிறதென்று உணர்ந்து தாசில்தார்களுக்குக் கொடுத்திருந்த மாஜிஸ்டிரேட் அதிகாரத்தைப் பிரித்து விட்டதினால் குடிகளுக்கு நேரிட்டிருந்த துன்பங்களில் சிலது நீங்கி ஆறுதலடைந்தார்கள்.

மற்றுமுள்ள குறைகள் நீங்காது குடிகள் துன்புறும் காரணம் சுதேச மாஜிஸ்டிரேட்டும் சுதேச தாசில்தாரும் ஓரிடத்தில் அலுவல் நடத்திவதுனாலேயாம்.

- 1:2; சூன் 19, 1907 -

அதாவது ஒவ்வொரு ஜில்லாக்களுள் தாசில்தார்களும் முநிஷிப்புகளும் மற்றுமுள்ள சிப்பந்தி உத்தியோகஸ்தர்களும் சுதேசிகளாயிருந்து காரியாதிகளை நடத்திவருங்கால் விளையும் பயிர்களுக்கு மழையில்லாமல் காய்ந்துவிடுமானால் அவைகளைப் பார்வையிட்டு வரிகளைக்குறைக்க வேண்டியதற்கு குடிகள் முறையிட்டுக்கொள்ளுவதில் சுதேசிகளாகிய தாசில்தார், முநிஷிப்பு முதலிய உத்தியோகஸ்தர்கள் வந்து பார்வையிடப் போகிறார்களென்று சுதேசிகளாகியக் குடிகள் கேழ்விப்படுவார்களானால் அவர்கள் மனதில் பயமும் துக்கமுங் குடிகொண்டு திகைத்து நிற்கின்றார்கள். இதில் கலைக்ட்டரே நேரில் வந்து பார்க்கப் போகிறாரென்றுக் கேழ்விப்படுவார்களானால் அவர்கள் மனதில் ஆனந்தமும் ஓர்வகைக் குதுகலமும் பிறந்து எதிர் நோக்கிக் கார்த்திருக்கின்றார்கள். இவ்விருவகைச் செயல்களில் சுதேச உத்தியோகஸ்தர்களால் குடிகளுக்கு சுகமுண்டா, அன்றேல், கலைக்டர்களால் குடிகளுக்கு சுகமுண்டா என்றாராயுங்கால் சுதேச உத்தியோகஸ்தர்களால் குடிகளுக்கு இடுக்கமும் மன நடுக்கமும் உண்டென்றும், கலைக்டர்களால் குடிகளுக்கு ஆறுதலுந் தேறுதலும் உண்டென்றும் தெளிவாக விளங்குகின்றது. இத்தியாதி செயல்களில் கல்வியற்ற எளிய குடிகள் தங்கள் குறைகளை கலைக்டருக்குத் தெரிவிக்க சக்தியற்று நாளுக்குநாள் நசிந்து உள்ள பூமிகளையும் வஞ்சகருக்கு