உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துணைப்பற்றி பிழைக்கும்வழி தேடல் வேண்டும்.

- 1:33; சனவரி 29, 1908 -

அரசனானவன் அறநெறியில் நிற்பதன்றி எதிரி பலத்தையுந் தன் பலத்தையும் தெரிந்துரைக்கக்கூடிய அறிவாளிகளாகும் பெரியோர்களை நேசித்தல் வேண்டும்.

தன் கேட்டினால் உண்டாகும் பிணிகளையும் மற்றும் துன்பங்களையும் நீக்கக்கூடிய விவேகமும் அவ்வகைத் துன்பங்கள் இனி அணுகாவகைகளாம் வழிகளை விளக்கும் விவேகமும் பொருந்திய அறஹத்துக்களை அணுகுதல் வேண்டும்.

அரசன் சாம தான பேத தண்டமென்னும் சதுர்வித உபாயங்களை அறிந்துக்கொண்டவனாயினும் இரத கஜ துரக பதாதிகளாம் சதுரங்க சேனைகளை நடாத்தும் உபாயங்களை அறிந்தவனாயினும் நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்த பெரியோர்கள் இவர்கள் என்று அறிந்து அவர்களை அணுகி நிற்றல் வேண்டும்.

தனக்கு மேற்பட்ட அறிவுடையோரைக் கண்டு கனஞ்செய்து அவர் போதித்த வழியில் நிற்றல் தான் பற்றியக் கோலுக்கு தலைமெயென்னப்படும். தன்னைச் சூழ்ந்து நிற்குங் குடிப்படை அமைச்சென்பவற்றுள் வரப்புயர கார்க்குங் குடிகளும், பின்முதுகு கொடாமல் காக்கும் படைகளும், தன்னலங் கருதாது மன்னலங் கருதி வருங்காலம் போய் காலங்கள் உணர்ந்தோதும் அமைச்சர்களையுங் கொள்ளல் வேண்டும்.

அன்பமைந்த குடிகளையும், அரயனைக் காக்கும் படைகளையும், காலமறிந்துணர்த்தும் அமைச்சர்களையும், தாயாதி கலகமற்றக் குடும்பத்தையும் பெற்ற அரசனை சத்துருக்கள் அணுகார் என்பதாம்.

நயவஞ்சகத்தையுஞ் சுயநலத்தையும் பாராது குடிகளும் படைகளும் அமைச்சர்களும் நீதிநெறியினின்று அரசனது ஏவலைக் கண்டிதமாகச் செய்யும் வல்லவர்களால் அரசன் சுகநித்திரை புரிவான்.

அரசனுக்குக் கண்டித நீதிநெறியன்றி அவன் மனம் கோணாது நயவஞ்சக நீதிபுகட்டும் அமைச்சர்கள் இருப்பார்களாயின் அவ்வரசு சத்துருக்கள் தோன்றாமலே தானே கெடுமென்பதாம்.

கைம்முதலில்லா வியாபாரிக்கு ஆதாயமில்லாததுபோல் தன்னைத் தாங்குஞ் சுற்றமில்லா அரசனுக்கு இராட்சியபாரம் அதிகரித்து நிலை பெயர்க்கும் என்பதாம்.

பெரியோர்களாகிய அறத்துக்களை அடுப்பதையும் நீதிநெறியோதும் பெரியோர்கள் கேண்மெயையும் விடுத்து ஒரு வஞ்சகனை அணுகுவதால் பத்துத் தீயநிலை மேற்கொண்டு பதிகுலையும் என்பதாம்.

சுயநலம் கருதி சூழ்ந்தவரைக் கெடுக்கும் சோம்பேரிகளாகும் சிற்றினத்தாரை நீக்கி பொதுநலங்கருதி பொய்ச்சாப்பகற்றும் பெரியோராகும் அறஹத்துக்களை அணுகி கொடுங்கோலை அகற்றி செங்கோலை நடாத்தவேண்டியதாம்.

- 1:34; பிப்ரவரி 5, 1908 -

அரசர் நடாத்தும் கோவில் செங்கோலென்றுங் கொடுங்கோல் என்றும் இருவகைப்படும். அவற்றுள் செங்கோல் என்பது தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிகளால் ஏதேனும் குற்றங்கள் உண்டாயின் நீதிநூற் பாராயண அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டு பட்சபாதம் இன்றி விசாரித்து தண்டித்தல்.

ஏன் இத்தகைய நடுநிலைமெயினின்று பட்சபாதம் இன்றி விசாரித்து தண்டித்தல் வேண்டும் எனில் சருவ சீலப்பிராணிகளும் மழைக்காக வானத்தை நோக்கி நிற்கும். அதுபோல் அரசன் ஆளுகைக்கு உட்பட்ட சருவ மக்களும் செங்கோல் என்னும் செவ்விய நீதிநெறிவாய்த்த மன்னனை நோக்கி நிற்பர். நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்து செந்தண்மெய் பெற்றவர்களாகும் அறஹத்துக்கள் ஓதியுள்ள நீதி நூற்களுக்கும் மெய்யறமாகும் தருமத்திற்கும்