674 / அயோத்திதாசர் சிந்தனைகள்
சிறுநீரை யூற்றி பங்கஞ்செய்தால் அவனது ஆண்குறியை அறுத்தெறிந்துவிடவேண்டியது. மலத்தை எரிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தை சோதிக்க வேண்டியது, இதுவுமோர் மநுதன்மம்.
பிராமணனென்போன் பிரம்மாவின் முகத்திற் பிறந்தது யதார்த்தமாயின் பாதத்திற் பிறந்த சூத்திரன் காரியுமிழவும், சிறுநீரை யூற்றவும், மலத்தை மீதெறியவுமாய அலட்சியமுண்டாமோ.
இவர்களால் சூத்திரரென வகுத்துள்ள மக்களது மனத்தாங்கலாலும் இவர்கள் யதார்த்த பிராமணர்களல்ல வென்னும் அலட்சியத்தினாலும் மேற்கூறியச் செயல்கள் நிறைவேறவும் அதற்கென்றே இவர்களது அதன்ம சட்டம் தோன்றவும் வழியாயிற்று.
பிராமணனென்னும் வகுப்போரை மிக்க சிறந்தவர்களென்றும், தன்னை சூத்திரனென்றுந் தெரிந்துகொண்டவன் பிராமணனென்போன் தலைமயிரையும், தாடி மயிரையும், ஆண்குறியையும் பிடித்திழுப்பனோ. இத்தகைய சட்டமுந் தோன்றுமோ இல்லை. இச்சட்டந் தோன்றுங்கால் பிராமணனென்னும் உயர்வும், சூத்திரனென்னுந் தாழ்வும் இல்லை என்பதே சான்று.
சூத்திரன் துவிஜாதிகளின் மனைவிகளைப் புணர்ந்தால் அவன் கோசபீஜம் இரண்டையும் அறுத்துவிடவேண்டியது. பிராமண னென்போன் எந்த ஜாதியோரிடம் புணர்ந்தாலும் ஒன்றுஞ் செய்யப்படாது. இதுவுமோர் மநுதன்மம்.
பிராமணனென்போன் கொலைக் குற்றஞ் செய்தால் அவனது தலையின் மயிரை சிரைத்துவிடுவதே அவனுக்கு மரணதண்டனையாகும். மற்ற சாதியோர் தொலைக்குற்றஞ் செய்தால் அவர்களது சிரமுண்டனமே கொலை தண்டனையாகும். இதுவும் ஓர் மநுதன்மம்.
இம்மனுதன்ம சாஸ்திரமானது பௌத்தர்களின் பதிநெட்டு தன்ம சாஸ்திரங்களுக்கும் நேர் விரோதமானதும், இத்தேசத்து மக்கள் யாவருடைய சம்மதத்திற்கும் உட்படாததும், நீதி நூல் யாவற்றிற்கும் எதிரிடையானதும், தங்களது பிராமண வேஷத்திற்கே உரித்தானதுமாகத் தங்களது மனம்போனவாறு வரைந்து வைத்துக்கொண்டபடியால் அதிற் கூறியுள்ள அநுலோமசாதி, பிரிதிலோமசாதி, அந்தராளசாதி, பாகியசாதியானோர் ஒருவருந்தோன்றாமல் அன்னூலிற் கூறியில்லாத முதலியார் சாதி, நாயுடு சாதி, செட்டியார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோற்றிவிட்டார்கள்.
இவ்வகைத் தோற்றியவர்களுக்கும் ஓர் நூலாதாரங் கிடையாது. இவற்றைத் தடுத்துக் கேட்பதற்கும் வருணாசிரமம் வகுத்துக்கொண்டவர்களுக்கு வழி கிடையாது. வருணாசிரமம் வகுத்துள்ள மநுதன்மநூலோர் நாலு சாதிகளுக்கு மேற்பட்ட சாதி கிடையாதென்று வரைந்திருக்க இப்போது தோன்றியுள்ள ஐந்தாவது சாதிகளுக்கு ஆதாரமே கிடையாது. பிராமணன் பஞ்சிநூலும், க்ஷத்திரியன் சணப்பநூலும், வைசியன் கம்பிளி நூலும், பூணுநூலாகத் தரித்துக்கொள்ளவேண்டுமென தங்கள் தன்மசாஸ்திரத்தில் வரைந்துவைத்திருக்கின்றார்கள். அதை ஒருவருஞ் சட்டைச் செய்யாது பிராமணனென்போன் பஞ்சு நூலணிந்துக்கொள்ளுவதுபோல க்ஷத்திரியனென் போனும் பஞ்சு நூலை அணைந்துக்கொள்ளுகின்றான். வைசியனென்னும் எண்ணெய் வாணியனும் பஞ்சுநூலணைந்துக்கொள்ளுகின்றான். அவர்களைத் தடுத்தாள்வதற்கு இம்மநுதன்ம சாஸ்திரத்திற்கும் அதிகாரங்கிடையாது. அதன் அதிகாரிகளுக்கும் அதிகாரங்கிடையாது.
இந்த வருணாசிரமதன்ம சாஸ்திரத்தில் பிராமணனென்போனுக்குத் தொடர்மொழி சர்மா வென்றும், க்ஷத்திரியனென்பவனுக்குத் தொடர்மொழி வர்மாவென்றும், வைசியனுக்குத் தொடர்மொழி பூதியென்றும், சூத்திரனுக்குத் தொடர்மொழி தாசென்றும் வைத்துக்கொள்ள வேண்டுமென்னும் நிபந்தனையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அதாவது முத்து சாமி என்னும் பிராமண னென்போனாயின் அவன் முத்துசாமி சர்மாவென்றும்,