பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 25

வைத்திருக்கும் (ரிப்பிரஷ்மென்ட்) ரூம்களிலும் ஓட்டல்களிலும் வந்து சந்தோஷமாக சாப்பிட்டுப்போவது சகலரும் அறிந்திருக்க, சத்தியவாசகர் அவற்றை நோக்காது பஞ்சமர்களுக்காய் பரிந்து வேறு ஓட்டல் வைக்க விருப்பங்கொண்ட காரணம் விரோத சித்த விருத்தரென்றே விளங்குகின்றது. இத்தகைய விரோத சித்தவிருத்தியால் வீணே இவரழிவதுமன்றி ஏதோ சாப்பாட்டுக் கடைவைத்து சீவிக்கும் ஏழைகளின் சொற்ப சீவனங்களையும் கெடுக்க ஆரம்பிக்கின்றார். ஆதலின் சாப்பாட்டுக் கடைவைத்து சீவிக்கும் அன்பர்காள்! நமது சத்தியவாசகர் வார்த்தையை நித்தியமென்று எண்ணி பஞ்சமர்களுக்கென்று வேறுபக்கத்து வோட்டல் வைக்காதீர்கள்.

காரணம் - பஞ்சமர்களென்பவர்களோ சுத்தமான இடங்களில் சுத்த ஆசனம் விரித்து சுத்த பாத்திரங்களில் சுத்தமான சோற்றுடன் சுவையுள்ள பதார்த்தங்கள் வைத்துப் புசிப்பார்களாதலின் தங்களுடைய ஓட்டல்களில் மறந்தும் வந்து புசிக்கமாட்டார்கள். சத்தியவாசகருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்குமே அஃதினியதாகும். சத்தியவாசகர் மட்டிலும் மனித வகுப்பைச் சார்ந்தவர். பஞ்சமர்கள் யாவரும் மாட்டுவகுப்பைச் சார்ந்தவர்களென்று எண்ணி உள்ளார் போலும். அங்ஙனம் எண்ணி இருப்பாராயின் மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள உருவ பேதாபேதங்களைக் கண்டுக் கொள்ளுவாரே. அவ்வகைக் கண்டுகொள்ளாமல் எல்லோரும் மனித உருவமாகக் காணுகிறபடியால் பஞ்சமர் உருவம் பகலில் தோன்றாமல் பக்கத்து ஓட்டல் வைக்க முக்கிய ஏது செய்கின்றார். இவ்வகையாகப் பகலிலேயே பஞ்சமர்கள் உருவு தெரியாது பரிதவிப்பவர் இரவில் எச்சாதியைக் கண்டு ஏங்கி நிற்பரோ விளங்கவில்லை.

சாப்பாட்டுக் கடைக்கு சாதி வகுத்துக்கொண்ட சத்தியவாசகர், சாராயக்கடை கிளாசுகளுக்கும் கள்ளுக்கடைக் கப்பரைகளுக்கும் கலப்பு நேரிடாமல் காப்பாற்றிக்கொள்ளுவாராயின் இவர் பஞ்சமர்களுக்கென்று நியமிக்கும் பக்கத்து வோட்டல் பறக்க நிலைக்கும். கிளாசுகளையும் கப்பரைகளையும் கவனிக்காது பொத்தை இல்லையிற்போடும் மொத்தைசோற்று வியாபாரத்தைக் கெடுப்பது முழுமோசமேயாம்.

- 1:46: ஏப்ரல் 29, 1908 -


12. கனந்தங்கிய கருணாகரமேனோன் கலைக்டர்களுக்குள்ள
அதிகாரங்களைக் குறைக்கப் பார்க்கின்றார்

“பலப்பட்டரை சாதிக்கு பவுஷியமில்லை / குலங்கெட்ட சாதிக்குக் கோத்தரமில்லை.” எனும் பழமொழிக்கிணங்க இத்தேசத்து ஜில்லாக்களிலுள்ள அங்கங்களைத் தெரிந்தெடுத்துக் கலைக்டருடன் கலந்துபேசி அவர்கள் அபிப்ராயப்படி காரியாதிகளை நடத்துவது நலமென்னும் அபிப்பிராயம் கொடுக்கின்றார். அது சருவஜன சம்மதமேயாம். ஆனால் ஐயங்காரைச் சேர்ந்த ஒரு மெம்பர். ஐயரைச்சேர்ந்த ஒரு மெம்பர். குறுக்கு பூச்சு பாப்பானொரு மெம்பர். நெடுக்குப்பூச்சு பாப்பான் ஒரு மெம்பர் வந்து உழ்க்காருவார்களாயின் சிவன் கோவிலைச் சேர்ந்த ரெவினியூ காரியாதிகள் ஏதேனும் இருக்குமாயின் குறுக்குப்பூச்சு பாப்பான் நெறுக்கப் பிடிப்பார். விஷ்ணு கோவிலைச் சேர்ந்த ரெவினியு காரியாதிகளேதேனும் இருக்குமாயின் நெடுக்குப் பூச்சு பாப்பான் திடுக்கென்று எழுந்திருப்பார். ஐயங்கார்கள் அதிக வாசஞ் செய்யுங் கிராமங்களில் ரெவினியூ சம்பந்த காரியாதிகளேதேனும் இருக்குமாயின் ஐயங்கார் மெம்பர் அங்கலாய்த்தெழுந்து சிங்கநாதந்தொனிப்பார். கவுண்டர்களும் ரெட்டிகளும் அதிக வாசஞ் செய்யும் இடங்களில் ரெவின்யூ சம்மந்த காரியாதிகளேதேனும் இருக்குமாயின் ஐயங்காருக்குப் பத்திய மேற்பட்டால் பரிகாரம் ஏற்படும். பத்தியம் இல்லாவிடில் சத்தியம் பேசமாட்டார். இத்தகைய சாதிபேத சம்பிரதிகளுஞ் சமயபேத கம்பிளிகளும் நிறைந்த தேசத்தில் கலைக்ட்டர்களுக்குள்ள அதிகாரங்களைக் குறைத்து குடிகளை கூட்டிவைக்கப் பார்ப்பது கருணாகர மேனோனவர்களின் கவனக் குறைவேயாம்.