பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 199

முன்கலை திவாகரம்

மும்மதில் பொன்னும் வெள்ளியு மிரும்பும்

யாப்பருங்கலைச்சூத்திரம்

சுறமறி வனதுறை எல்லாம், இறவீன் பனவில்லெல்லாம்,
மீன் றிரி வனகிடங்கெல்லாம் தேன்றாழ்வனபொழி லெல்லாம் எனவாங்கு,
தண்பனை தழீஇயவிருக்கை, மண்கொழு, நெடு, மதின் மன்னனூரே

சீவகசிந்தாமணி

இரும்பிடி தழீ இயயானை-இழிமதங்கலந்து சேராய்ச்,
சுரும்பொடு மணி வண்டார்க்குந் துகிர் கொடி மாடவீதி,
பெருங்கடி நகரம்பேசி னிராசமாகிருக மென்ப,
ரருங்குடி யமரர்கோமா-னணி நகராயதொன்றே.

மந்திரிகளும் அவ்வாக்கியத்தை சிரமேற்கொண்டு தசாங்க சிறப்பை முடித்து மங்கலமுரசும் அறிவித்தார்கள். முரசம் வினவிய அரசன் மந்திரிகளை நோக்கி மைந்தன் சித்தார்த்தி பிறந்தகாலத்தில் வந்திருந்த சாக்கையக் கணிதர் குழந்தைக்கு பதினாறு வயது முடிந்தவுடன் மலையரசன் மகளை விவாகஞ் செய்துவிடும்படி ஆக்கியாபித்திருக்கின்றார். அவ்வாக்கியப்படி மலையரசன் சுப்ரபுத்திக்கும் ஓர் பெண் பிறந்து அவளுக்கும் பன்னிரண்டு வயது முடிந்து விட்டதாகக் காண்கின்றது; மைந்தனுக்கும் பதினாறு வயது முடிந்துவிட்ட படியால் சென்றவயனமோதிய பெரியோன் சாக்கையர் வாக்கை நிறைவேற்ற வேண்டுமென்று ஆக்கியாபித்தான்.

2.சித்தார்த்தர் திருமணக்காதை


அவ்வாக்கியத்தை வினவிய மந்திரிகள் அரசே, தமது புத்திரர்க்கு மலையரசன் மகள் பேரில் பிரியமிருக்குமோ அன்றேல் மற்ற அரசபுத்திரிகளின் மீது மனமிருக்குமோ அதைத் தெரிந்துச்செய்ய வேண்டும் என்றார்கள்.

அஃதை எவ்வகையால் தெரிந்துக்கொள்ளக்கூடும் என்றான்.

சக்கிரவர்த்தித் திருமகன் அரசபுத்திரிகள் யாவருக்கும் பரிசளிக்கப் போகின்றார் யாவரும் வரவேண்டும் என்று ஆக்கியாபித்தால் அரசபுத்திரிகள் யாவரும் வருவார்கள். அப்பரிசளிக்குங்கால் மைந்தனுக்கு எப்பெண்ணின் பேரில் நோக்கமிருக்கின்றதோ அதை உணர்ந்து காரியத்தை முடிக்கலாம் என்றார்கள்.

அப்படியே அரசர்கள் யாவருக்குந் தெரிவித்து பரிசளிக்கும் பாக்கியங் களாகும் முத்துமாலை, பவழமாலை, பச்சைமாலை, வைரமாலை, சிவப்பு மாலை முதலியவைகளையும்; மேகவர்ண, நாகவர்ண, லோகவர்ண முதலிய பட்டுக்களையும் பரப்பி மைந்தன் விழி எப்பெண்ணைக் கவருமோ என்று கார்த்திருந்தார்கள்.

அரசபுத்திரிகள் ஒவ்வொருவரும் ஆடையாபரண வலங்கிருதராய் அன்னநடைக் கொண்டு அரசபுத்திரனை அணுகி முகமலர்ந்து பேசி அவரளிக்கும் பரிசை ஆனந்தமாகப் பெற்று போனார்கள். அதில் மலையரசன் சுப்ரத்தியின் மகள் பார்ப்பதி அல்லது அசோதரை என்பவள் ஆனந்தமாக அரசபுத்திரன் அருகில் வந்து முகத்தைப் பார்த்தவுடன் தலைகுனிந்து பரிசுக்குக் கையை நீட்டாமலும் கேழ்க்காமலும் நின்றுவிட்டாள். அரசபுத்திரனும் யாதொன்றும் பேசாமல் தன் கழுத்தில் அணைந்திருந்த மோகன மாலையைக் கழட்டி அப்பெண்ணின் கழுத்தில் அணைந்துவிட்டு எழுந்து அரண்மனைக்குப் போய்விட்டார்.

இவைகளைக் கண்ணுற்ற அரசனும் மந்திரிகளும் அசோதரையாம் பார்ப்பதியே அரசபுத்திரனுக்குரிய வாணீயென்று உணர்ந்து மலையரசனுக்கு அறிவித்தார்கள்.

அதையறிந்த சுப்ரத்தி மண்முகவாகை அணுகி அரசே, உமது புத்திரர் வீரமற்றவராகத் தோன்றுகிறபடியால் என் பெண்ணைக்கொடுக்க சந்தேகிக்கின்றேன் என்றான்.

அதைக்கேட்ட அரயன் மைந்தனை அணுகி குழந்தாய் மலையரசன் புத்திரியை உமக்குக் கொடுப்பதற்கு சந்தேகிக்கின்றானே உமது அரச வல்லபம் எங்கு போய்விட்டதென்றான்.