பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சக்கிரவர்த்தித் திருமகன் தன்னை மறைக்கும் அஞ்ஞான இருளாம் நித்திறையை நீக்கி சதா விழிப்பாம் ஆனந்தத்திற்றாக்கும் இரவு பகலற்ற நித்திய நிலையினின்று சருவசீவர்களின் உள்ளங்களையும் கவர்ந்து அவரவர்களுக்கு உண்டாகுந் துக்கங்களையும், அதன் உற்பவங்களையும், அதன் நிவாரணங்களையும் போதிக்க ஆரம்பித்து முதலாவது;

சௌப்பாபஸ்ஸ அகரணங் குஸலஸ உபஸம்பதா ஸஸித்த பரியோதபனங் எனும் மூன்று நீதிநெறி பேதவாக்கிய அஸ்திபார கற்களாம் பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோள் என்னும் திரிபீடங்களை வகுத்தார்.

இத்திரிபீடங்களாகும் மூன்று பேதவாக்கியங்களை ஓர் ஓலையில் எழுதாமலும், பட்டைகளில் எழுதாமலும் ஒருவர் நாவினால் கூறவும் மற்றவர் செவிகளில் கேட்டுக்கொள்ளுவதுமாயிருந்த வரையாக் கேள்வி எழுதாக்கேள்வியிலிருந்தது. இதையே சுருதி என்று கூறினர். அக்கால் சாந்தம் நிறைந்த தண்மெயாம் அந்தண நிலையையும் அன்பே ஓருருகொண்ட வடிவையுங்கண்ட குடும்பத்து அரசபத்தினிகளும் மற்றுமுள்ளோரும் அருகில் வந்து வணங்கி, அரசன் மரத்தடியில் உட்கார்ந்திருப்பதை தவிர்த்து பொற்பீடங்களை அமைத்தும், வெள்ளியாசனங்களை விரித்தும், அவைகளின் பேரில் உட்காரும்படிக் கேட்டுக்கொண்டார்கள். சிம்மமும், இரிடபமும் அருகில் தாங்கி நின்றது. நாகங்கள் தோளிலுந் தாளிலும் புரண்டுலாவியதுகள். மயில்கள் தோகையினால் வெயில் மறைத்ததுகள். அவைகளைக்கண்ட அரசர்கள் மூன்று பூச்சக்கரக் குடைகளைக் கொண்டுவந்து உதயசூரியன் சுடர் தாங்காமல் கிழக்குசார்பில் ஓர் குடையும், அஸ்தசூரியன் சுடர் தாங்காமல் மேற்கு சார்பில் ஓர் குடையும், மத்தியகால சுடர்தாங்காமல் உச்சிக்கு நேர் ஓர் குடையும் ஆக முக்குடைகளை நிழற்றி போதனை வினவி நின்றார்கள்.

அதை அறிந்த ததாகதர் அன்பர்களை அழைத்து தாமரைப் புட்பங்களையுந் தாமரைக் கொட்டைகளையுங் கொண்டுவரச்செய்து பூமியில் பரப்பி அதன்பேரில் உட்கார்ந்துகொண்டு இத்தாமரையானது நீரிலிருந்தும் நீர் ஒட்டாமலிருப்பதுபோல் ததாகதன் உங்களுடன் கலந்திருந்தும் உங்கள் பற்றுக்களற்று உண்மெயில் உட்கார்ந்திருக்கின்றேன். அந்த நித்திய பீடத்திற்கு இவ்வனித்திய பீடம் நிலையாகா என்று உணர்த்தினார். அன்று முதல் தாமரைக்கொட்டைக்கு குருமணி என்றும், தாமரை புட்பத்திற்கு குரு மலரென்றும் பெயருண்டாயிற்று.

வீரசோழியம்

முடைத்தலையை மதவேழந் தடைக்கையான் வெயின் மறைக்கும்,
பிடித்துறவடைந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்.
தாடினை இரும்போத்து தோகையான் வெயின் மறைக்கும்,
காடகமுரைந்தார்க்கே யோடுமென் மனனேகாண்.

வாசிட்டம்

புண்டரிக வாதனத்தில் புத்தன்போல் உத்தரமுகனாய்.

யாப்பருங்கலை

வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே.

அறநெறிச்சாரம்

தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரை பூவின்மேற் சென்றான் புகழடியை.

குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் / நிலமிசை நீடுவாழ்வார்.

தாயுமானவர்

செங்கமல பீடமேல் கல்லாலடிக்குள்வளர் / சித்தாந்த முத்தி முதலே.
குருமணி இழைத்திட்ட சிம்மாதனத்தின்மிசை / கொலுவீற்றிருக்கு நின்னை.

சூளாமணி

குருமணித் தாமரைக் கொட்டை சூடிய / திருமணிப் பீடமுஞ் செதுக்கவாயவும்.