பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 227

யதார்த்தத்தில் உண்மெய்தான் எவற்றிற்குஞ் சிறந்தது. அதை யாதாமொருவர் கூட்டவாவது குறைக்கவாவது மாற்றவாவது விருத்திசெய்ய வாவது முடியாதென்று கூறி தன்னை அடுத்த மாணாக்கர்களை அருகில் அழைத்து ஒன்றுக்கொன்றை பற்றி பிறவிக்காளாகும் ஜின்முத்திரை பதினாறு வகை நிலைகளை விளக்கிவருங்கால் மாணாக்கர்கள் மனதில் அவைகள் பதியாமல் பரவுவதை உணர்ந்த பகவன் வரிவடிவாகும் அட்சரங்களை உண்டு செய்து அதன் வழியாக தன்மங்களைப் பதிவடையச்செய்ய வேண்டுமென்று எண்ணி வடமொழியையும் அதனதன் அட்சரங்களையும் தென்மொழியையும் அதன் அட்சரங்களையும் உற்பத்திச்செய்து;

மாணாக்கருள் ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமரென்னப்பட்ட நால்வருக்கு ஜெயமுத்தி நிலையாகும் ஜின் முத்திரையை அளித்து தானியற்றிய வரிவடிவ பாஷையாகும் வடமொழி என்னும் சகடபாஷையை பாணினி யாருக்கும், தென்மொழியாகுந் திராவிடபாஷையை அகத்தியருக்கும், போதித்து ஞானத்தானம் அளித்து எட்டுத்திக்குகளிலும் மெய்யறத்தைப் பரவும்படிச் செய்தார்.

காரணம், மகடபாஷை என்றும், மூலபாஷை என்றும், பிராகிருதபாஷை என்றும், பாலிபாஷை என்றும், வழங்கிவரும் ஆதிபாஷை வரிவடிவம் இல்லாமல் ஒலிவடிவமாத்திரமாய் இருந்தபடியால் தன்மங்களை நிலைக்கச் செய்வதற்கு வடமொழியையுந் தென்மொழியையும் உற்பத்திச் செய்தார்.

வைராக்கிய சதகம்

ஆலநீழலிலன் றொருநால்வருக் / கறநெறி யுரைத்தானை,
காலகாலனை சிவப்பிரகாசவென் / கண்மணிதனையுன்னா.

பதஞ்சலியார் ஞானம்

வசனசுத்தி கபிலாதி மாமுனிவர் மகிதமான ஜனகாதியும்
வாம ரோம முநி நந்திதேவன் வடபாஷை யோதினர்கள் வண்மையே
மேருலாவுவட வீதிதோரும் உயர் வேதஞான ஜனகாதியர்
மேலை வீதி திருமூலர்வர்க்கமிகவே இருந்து விளையாடினார்
பாருங் கீழ்திசையி லையர்சட்டமுனி பானு மாமலையில் லாகினார்
 பன்னுதென்றிசையிலே இருந்து தமிழ் பாஷையோதின அகத்தியன்
தாரிலே இவர்கள் சீஷவர்க்கமிது கோடி கோடி இவர் தம்மிலே
சாதுசுந்திரனும் மச்ச கூர்மமுனி தாரசாரபதி கொங்கணன்
சீருலாவுவர தேமடங்களது செய்து சித்ததிகமாடினார்
தேசதேசசில பாஷையாலும் இவர் செப்புநூன்முறை தெரிந்திடே.

பாணினியவர்கள், கபிலர், ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமரைவருக்கும் சகடபாஷையையூட்டி வடநாடெங்கும் மெய்யறமாம் புத்ததன்மத்தைப் பரவச்செய்தார். அகத்தியருக்கும் திருமூலருக்கும் திராவிட பாஷையையூட்டி அவற்றுள் அகஸ்தியர் தென்திசை சென்று தமிழ்பாஷையையூட்டி வரிவடிவாம் அட்சரபதிவால் தன்மங்களைப் பரவச்செய்து மடங்களைக் கட்டுவித்து உலோகோபகார சித்துக்களுமாடி வைத்தியம், ஞானம், நீதி முதலிய பொக்கிஷங்களை அளித்துவந்தார்.

முன்கலை திவாகரம்

வடநூற்கரசன் தென்றமிழ்க்கவிஞன் / கவியரங்கேற்றும் உபயக்கவி புலவன்,
செரிகுணத்தம்பற் கிழவோன் சேந்த / னறிவுகரியாக தெரிசொற்றிவாகரத்து,
முதலாவது தெய்வப்பெயர்தொகுதி.

வீரசோழியம்

மதத்திற் பொலியும் வடசொற்கிடப்புந் தமிழ்மரபு
முதத்தில் பொலியேழை சொற்களின் குற்றமும் ஒங்குவினை
பதத்தில் சிதைவும் அறிந்தே முடிக்க பன்னூறாயிரம்
விதத்திற் பொலியும் புகழ்வலோகிதன் மெய்த்தமிழே.

மேற்சொன்னபடி பதிப்புரை.

திடமுடைய மும்மொழியாம் திரிபிடக நிறைவிற்காய்
வடமொழியை பாணினுக்கு வகுத்தருளியதற்கு இணையாத்
தொடர்புடையத் தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்த
குடமு நிக்கு வற்புருத்தார் கொல்லாற்று பாகர்.