பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துக்கத்திலாழ்த்திவிடும். உலகத்தார் ஒருவனைக் கள்ளனென்றறிந்துக் கொண்டவுடன் அவன் வரும் இடங்களிலும் போகும் இடங்களிலுங் கண்ணோக்க முற்றிருப்பார்கள். அவ்வவர் நோக்கமே அவனைத் துன்பத்தில் ஆழ்த்தி மாளா துக்கத்தில் ஆழ்த்திவிடும். ஆதலின் களவை அகற்றி களங்கமறுப்பதே முத்திக்கு வித்தென்னப்படும்.

3-வது காமம். ஓ! சகோதிரர்களே! ஒரு மனிதன் தன் தாரமன்றி அன்னியர் தாரத்தையேனும் அன்னியர் இஸ்திரீகளையேனும் விரும்புவதில்லை என்று விரதம் பூண்டவன் பிதாவினாலாவது, மாதாவினாலாவது, மூத்தோராலாவது, சகோதிரனாலாவது, சகோதிரியாலாவது பாதுகாக்கப்பட்ட கன்னிகையை யேனும் மாங்கல்ய ஸ்திரீயையேனும், அடிமைப்பெண்ணையேனும், வேசியையேனும், இச்சிக்கமாட்டான். ஒருவனது இல்வாழ்க்கைக்கும் சுகத்திற்கும் இல்லாளே காரணமாதலின் அவ்வில்லாளை மற்றொருவன் இச்சித்து அவள் புருஷனுக்கும் அவளுக்கும் மிகுந்த அன்பையும் ஒற்றுமெயையுங் கெடுத்துப் பாழாக்கியபோது அவன் இல்லமும் குடும்பமுங் கூடிவாழும் வாழ்க்கைக்கெட்டு குலைந்து விடுவதினால் அத்தகையக்குடிக்குக் கேடுண்டு செய்வதைப் பார்க்கினுந்தான் ஒருவன் கெடுவது நலமென்று எண்ணித் தனதுயிரைப் போக்கிக் கொள்ளுவான். அதுவுமின்றி தன் தாரத்தை மற்றொருவன் இச்சித்தபோது தனக்கெவ்வளவு மனத்தாங்கலுங் கோபமும் பிறந்து குடிகெடும்படி நேரிடுகின்றதோ அதுபோல் மற்றவனது குடியுங் கெடுமென்றெண்ணி அன்னியதாரத்தைக் கனவிலும் நினையாதிருப்பன். அன்னியர் மனைவியையேனும், கன்னியையேனும், அடிமைப்பெண்ணையேனும் இச்சிப்பவனுக்கு மற்றவர்கள் பகையும் அவள் சீரைக் கெடுத்த பாவமும் அவள் குடும்பத்தோர் எவ்விதத்தும் அடிப்பார்களென்னும் பயமும் ஓர் பெண்ணின் சீரைக் கெடுத்தாயே ஆடோ பாவி என்னும் பழியும் இவன் சீவியகாலமெல்லாம் நிலைத்துவிடுமென்று எண்ணி காமிய இச்சையைக் கண்டித்து அவ்வாசையை அகற்றிவிடுவான். ஈகையில் மிகுத்தோனென்றும் வாக்கில் மிருதுவானவன் என்றும் சொல்லக் கூடியவனாயினும் அன்னியன் மனையாளை இச்சித்து அக்குடியைப் பாழாக்கினானென்று பெரியோர் கேழ்விப்படுவாராயின் தன் மனையின் அருகிலேனுஞ் சேர்க்காரென்று எண்ணி அச்சமுண்டாகிக் காமத்தை எறித்துக்கொண்டே வருவான். கொலை களவு மிகுத்த பாபிஷ்டிகளுடன் சேர்ந்து ஓர் குடியைக் காலமெல்லாந் துக்கத்தில் ஆழ்த்துங் காமிஷ்ட்டி என்னும் பெயரையும் வகிக்கமாட்டான். இதுவே நற்கன்மங்களென்னப்படும். இந்நற்கன்மங்கள் யாவுந் திரண்டப் பொதுப்பெயரே கடவுளென்னப்படும்.

சம்மா அஜீவா - நல்வாழ்க்கை

ஓ! சகோதிரர்களே! நல்வாழ்க்கையை ததாகதன் விவரிக்கின்றேன். அதாவது மனையறத்திலிருப்பவன் மனையறமென்பது யாது, துறவறம் என்பது யாது என உசாவி மனையறத்துனின்று இல்வாழ்க்கையை நோக்கி தனக்குத் தக்க இல்லாளை சேர்த்துக்கொள்ளக்கடவன். அவ்வில்லாள் பிறந்த குடும்பத்தில் அவனைக் கொலைபுரிந்தான் இவனை வஞ்சித்தான் அன்னியன் தாரத்தை இச்சித்து அவன் குடும்பத்தைக் கெடுத்தான் இவன் சொத்தை அபகரித்துக்கொண்டான் என்னும் பழியில்லாமலும், கொலைத் தொழிலே கொடூரமாகக் கொண்டவன் உள்ளத்தில் எக்காலும் வஞ்சத்தை உடையவன் என்னும் பாவமில்லாமலும், கோபமே வோருருவாகக்கொண்டவனும் கத்திரியைப்போல் ஒவ்வோர் குடும்பத்தைச் சேராமற்கத்திரிப்பவனும் எக்காலும் விரோதச்சிந்தையே கொண்டவனுமாகிய பகையில்லாமலும், இவன் கள்ளன், இவன் கொலைஞன், இவன் வஞ்சன், இவன் வழி பரிப்போன் என்னும் அச்சமும், நோயில்லாமலும் உள்ளக் குடும்பியாயிருப் பாளாயின் தனக்கோர் பழி நேராமலும், பகை நேராமலும், பிணி நேராமலும், பயம் நேராமலும் சுகவாழ்க்கையிலிருப்பான். அவ்வாழ்க்கை யினால் இல்லஞ் சார்ந்த குடும்பிகளுக்கும், சங்கஞ்சார்ந்த சமணர்களுக்கும், சமணநீத்து சித்துநிலை