பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 257

வாய்ந்த அந்தணர்களாம் அறஹத்துக்களுக்குத் துணையாக விளங்குவான். வித்தியா குரு, ஞான குரு, ஆதரித்தோன், தாய்தந்தையர் ஐவர்களையுங் கண்டவுடன் அன்புடன் வணங்கி ஆதரித்து முகமலரச் செய்பவன் தனதில்வாழ்க்கைத் துணைவியுடன் வாழ்க்கைத்துணை நலனுமடைவான்.

வித்தியா முயற்சியிலும் தேக முயற்சியிலுஞ் சம்பாதிக்கத்தக்க பொருள் பழிபாவத்திற்கு ஏதுவில்லாமலும் பிறன்மனம் வருந்தாமலுங் கொணர்ந்து தலைவனுந் தலைவியும் யாக்கை இரண்டாயினும் மனமும் அன்பும் பொருந்த நின்று நடாத்தும் தருமமே வாழ்க்கை தருமமாகும். உலக நோன்புகளாகும் பஞ்சபாதகங்களை நீக்குவோருக்கும் பஞ்ச பொறிகளின் வாயல் அவிப்போர்களுக்குப் பக்கத்துணை வாழ்க்கையுற்று பூரணப் பக்குவம் அடையச்செய்பவனாதலின் இவனது ஒழுக்க வாழ்க்கையே உண்மெய் உணர்த்தும் உத்தம வாழ்க்கையாகும்.

தருமமென்பதே இல்வாழ்வோன் பீடமாயிருத்தலின் அவ்வில் வாழ்வோன் நீதியிலும், நெறியிலும், வாய்மெயிலும் பற்றுள்ளவனாய் இருப்பானாயின் அவன் மண்ணுலகத்தானாயினும் விண்ணுலகத்தாரெண்ணில் வைக்கப் பட்டவனாகின்றான்.

இல்வாழ்வோனுக்குப் பழிபாவம் ஏற்கும் சம்பாத்தியம் யாதெனில், ஒருவன் மதியை மயக்கி அவன் குடும்பத்தைக் கெடுக்கத்தக்க வஸ்துக்களும், பல உயிர்களைக் கொன்று விற்கத்தக்க மாமிஷங்களும், விஷங்களை ஏற்றி விற்கத்தக்க ஆயுதங்களும் மனிதர்களை அடிமை பிடித்து விற்குந் தொழில்களும், சூது விளையாடுவோருக்கும் கள்ளர்களுக்கும் இடங்கொடுத்து அதினால் சீவிக்குந் தொழில்களும் பழி பாவத்துக்குரிய தொழில்கள் யாவையும் அகற்றிப் பரநிலையில் வாழக்கடவன்.

இத்தகைய வாழ்க்கை உடையவனுக்குத் துணைநலமாக வந்தவள் தன் கணவனையே தன்னைக் காக்குந் தெய்வமாகவும் தன் கணவனையே தன்னை ஆதரிக்கும் ஆசானாகவும் தன் கணவனையே தன்னைக் காக்கும் காவலாளியாகவும் பல பதார்த்தங்களை வட்டித்து தன் கணவனுக்கூட்டி திருப்தியடையச்செய்தலே ஆனந்தமாகவும் தன்கணவன் மகிழ்வடைய மிருதுவான தொனிகொண்டு வார்த்தைப் பேசுதலே இன்பமாகவும் உடையவளே வாழ்க்கைக்குத் துணைநலமாவள். மனைக்குடையவள் எப்பெரியோரைக் காணிலும் அவர்களை வணங்கி உபசரித்தலும் பரபுஷர்களைக் காணில் அவர்களுக்குத் தன் முகத்தையுந் தேகத்தையும் மறைத்துக் கொண்டு நாணமுறுதலும் அன்னிய புருஷர்களில் பெரியோர்கள் கரமேனுஞ் சிறியோர்கள் கரமேனுந் தன் தேகத்தில் படில் பயிற்புறுதலும் எப்போதுந் தன் பார்வையையும் நடக்கையையும் அடக்கி ஆண்டுவருபவள் வாழ்க்கைக்குத் துணை நலமாவள். தன் கணவனுக்குத் திரண்டதிரவியங் கிடைத்தவிடத்து சந்தோஷமில்லாமலும் திரவியமில்லாதபோது துக்கமில்லாமலும் கணவனைத் திருப்தி செய்துக் கொண்டு கணவன் வார்த்தைக்கு எதிர்மொழி பேசாமலும் கணவன் செய்யுந் தருமச்செயல்களுக்கு எதிர்மறைக் கூறாமலிருப்பவள் வாழ்க்கைக்குத் துணை நலமாவாள் - கணவன் புசிக்கத்தக்கப் பதார்த்தங்களை வட்டித்து அவன் பசிவேளை அறிந்து புசிக்கச் செய்து தேக சுகத்திற்கும், தேக போஷிப்பிற்கும் ஆதார நோக்கத்திலிருப்பவள் வாழ்க்கைத்துணைநல மனைவியே யாயினுந் தாயிக்குமொப்பாவாள். தன் கணவன் மதுப்பிரியத்தால் மயங்கி வெறிக்குங்கால் அவனுக்கு அன்பின் மதியூட்டி அவ்வருந்தலை மறக்கச்செய்தலும், தன் கணவன் பரஸ்திரீகமனத்தில் நுழைவானாயின் அவனுக்குக் கோபக்குறிக்காட்டாது இன்ப வார்த்தைகள் பேசி மிக்க அன்புபாராட்டி ஆலிங்கனமுற்று அன்னியஸ்திரீகளின் எண்ணங்களை மாற்றுவதிலும் பழிபாவ யாசகத் தொழிலின்றி வருத்தி சம்பாதிக்கத்தக்க முயற்சியில் நடவும்படிச்செய்வதுடன் தானும் முயற்சியினின்று நற்கருமங்களை நடாத்தச் செய்பவள் வாழ்க்கைத் துணை நலமாவதுடன் மந்திரிக்கும் ஒப்பாவாள். பெண்ணெனத்தோன்றும் ஓர் உருவமே தனது துற்கருமச் செயல்களினால் இயமனெனனின்று இல்லத்தின்