பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 293

உத்தமம். சகல விஷயத்திலும் ஜாக்கிரதையா இருத்தல் உத்தமம். சகல விஷயத்திலும் ஜாக்கிரதையாயுள்ள பிக்க்ஷ சகலதுக்கத்தினின்று விலகின வனாவான்.

எவனொருவன் கையை காத்துக்கொள்பவனாயும், காலைக் காத்துக் கொள்பவனாயும், வாக்கைக் காத்துக்கொள்பவனாயும், சகலத்தையும், அடைந்த வனாயும், ஏகாந்தமானவனாகவும், ஆறுதலையுடையவனாகவும் இருக்கிறானோ அவனே பிக்க்ஷு.

நாவைக் காத்துக்கொண்ட பிக்கு ஒருவன் அறிவுடனும், சாந்தத்துடனும் பேசுவான். ஞானத்தின் அர்த்தங்களையும், நீதியின் தெளிவையும் போதிக்கும் பிக்குவின் வார்த்தை அமிர்தமாக இருக்கும்.

நீதியின் பிரகாரம் நடப்பவன் ஒருவனோ அவன் நீதியில் ஆனந்தத்தை அடைகின்றான். நீதியில் தியானத்தை செலுத்துகின்றவன் நீதியின்படி நடக்கின்றான். அவ்வகைத்தான பிக்கு நீதியினின்று பிரழான்.

தனக்கு கொடுக்கப்பட்டவைகளை அலட்சியஞ்செய்யாமலும், யாவரையும் விரோதியாமலும் இருக்கட்டும். பிறனை விரோதிக்கின்ற துறவி சித்தசாந்த நிலையை அடையமாட்டான்.

எவனொருவன் நாமரூபமாம் தேகத்தையும், சித்தத்தையும் ஒருபொருட்டாக மதியாதும், மேலும் மேலும் பொருள் சேர்க்கும் அவாவில்லாதும், மேலான பதவியை நாடுகின்றானோ அவனே பிக்கு.

அன்பையே சதா சாதிப்பவனும், புத்தரது தன்மத்தில் அடங்கினவனுமான பிக்கு அமிர்தமாம் நிப்பானத்தை அடைவான்.

ஓ பிக்குகளே! இப்படகை காலி செய்யுங்கள். அப்படிச் செய்வதால் படகானது சுருக்காகச் செல்லும், காமத்தையும் பொறாமெயையும் விட்டகலுங்கள். நிப்பானத்தை அடைவீர்கள்.

ஓ பிக்குகளே! தியானியுங்கள். சிரத்தையற்றவர்களாய் இராதீர்கள். இன்பத்தைத் தரும் வழிகளுக்கு உங்களுடைய எண்ணங்களை செலுத்தாதீர்கள்.

ஏனெனில் நீங்கள் சிரத்தையற்றும் உங்களை குடிகெடுக்கும் நெஞ்சத்துக்கு இடந்தருவீர்களாகில் துக்கமென்னும் அக்கினியில் சிக்கி வாதைப்படல் வேண்டும்.

அறிவில்லாவிடத்து தியானங் கிடையா. தியானமில்லாவிடத்து அறிவு கிடையா. எவனொருவன் அறிவோடும், தியானத்தோடும் இருக்கின்றானோ அவனே நிப்பான பதவிக்கு சமீபத்திலிருப்பவனாவன்.

தேகத்தின் நான்கு பூதங்களின் உற்பவத்தையும், இவைகளின் அழிவையுங் கண்டவன் எவனோ அவன் ஆனந்தத்தையும் சுகத்தையும் தரும் அழிவிலா நிப்பானத்தைப் பெற பாத்தியதை உடையவனாவான்.

சுகவர்க்கம்

ஓ சகோதிரர்களே! சுகத்துடன் வாழ உங்களுக்கு மனம் வாய்க்குமேல் உங்களை வெறுப்பவர்களை நீங்கள் வெறுக்காமல் அவர்கள் மத்தியில் வாழ்வீர்களாக. உங்களை வெறுப்பவர்களின் மத்தியில் நீங்கள் வெறுப்பின்றி வாழ்வீர்களாக. துன்பத்தை அனுபவிப்போர் மத்தியில் நீங்கள் துன்பமின்றி வாழ்வீர்களாக.

சுகத்துடன் வாழ உங்களுக்கு மனம் வாய்க்குமேல் வஞ்சகமுள்ளோர் மத்தியில் நீங்கள் வஞ்சகமின்றி வாழ்வீர்களாக. வஞ்சகத்தால் வாதைப்படுவோர் மத்தியில் வஞ்சமின்றி வாழ்வீர்களாக.

காமமே ஓர் பெருந்தீ. பகையே ஓர் கொடிய விஷம். தேகமே ஒரு பெருந் துன்பம். ஆனால் பற்றற்று ததாகத நிலையை அடைவதே பரம சுகம்.

நோய்களில் கொடிது பசி. துன்பங்களில் கொடிது தேகம் என அவ்வந்தரங்க சத்தியத்தை அறிந்தோனெவனோ அவனே பரமசுகத்தைக் கண்டவனாவன்.

ஆரோக்கியமே பரமலாபம். திருப்த்தியே பெருஞ்செல்வம். நன்மார்க்க நம்பிக்கையே விசேஷ சம்பத்து. நிப்பானமே பேரானந்தம்.