பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 297

சந்தணம், தாமரைப்புஷ்பம் இவைகளினின்று வெளிவரும் கந்தமோ அற்பமானது. ஆனால் புண்ணியர்களின் மணமோ அளவிடக்கூடாததுமான தெய்வ மணமாம்.

புண்ணிய மணம் வீசும் பெரியோர்களிடத்தில் மாரன் அணுகான்.

சேற்றினின்று பரிமளத்துடன் தாமரை முளைத்து இன்பந்தருவது போல் பேரவாவாகும் இருளில் அறிவுமயக்கி நிற்கும் மக்களுக்கு புத்த தன்மமாம் மெய்யறந் தோன்றுங்கால் பேரறிவு விளங்கும்.

பாபவர்க்கம்

ஓ! சகோதிரர்களே! கெட்ட எண்ணங்களைக்கொள்ளாமலும், கெட்ட செய்கைகளைச் செய்யாமலும் ஒழித்தலே நலமாகும். ஏனென்பீரேல், சொற்பநேரத்தில் கெட்ட எண்ணங்களை எண்ணுவோனும், கெட்ட செய்கைகளைச்செய்வோனும் நீடியதுக்கத்தை அனுபவிக்கின்றான்.

நல்ல எண்ணங்கொள்ளுவோனும், நல்ல செய்கைகளைச் செய்வோனும் சதா சுகத்தை அனுபவிக்கின்றான். அவன் தன் நற்செய்கைகளுக்கு ஆனந்தமடைவான்.

பாபிக்குக் குற்றம் தேனைப்போலிருக்கும். அதன்பலனை உணரும் வரையில் இன்பமாகவே நோக்குவான். அதன் பலனை உணர்ந்தபின்பு பாபமென்று காண்பான். அதுபோல் புண்ணியவான் தன்மத்தின் பலனை உணரும்வரையில் அதனை பாரமாகவும் கஷ்டமாகவும் நோக்குவான். அதன் பலனும் சுகமும் விளங்கியபோது ஆனந்தத்தைக்கண்டடைவான்.

உங்களிடத்தில் தீவினை அணுகாதென்று அஜாக்கிரதையில் இருக்க வேண்டாம். சிறு துளிகள் சேர்ந்து பெருவெள்ளமாவதுபோல் சிறுக சிறுக சேர்ந்த தீவினைகள் பெருகி நிறம்ப துக்கத்தில் ஆழ்த்திவிடும்.

உங்களிடத்தில் நன்மெய் அணுகாதென்று விலகி நிற்காதீர்கள். உள்ள நன்மெயின் செயல்களே சிறுதுளிகள் பெருவெள்ளமாவதுபோல் நாளுக்குநாள் பெருகி உங்களை நிறம்ப சுகத்தில் மூழ்கவைக்கும்.

ஓ சகோதிரர்களே! விழித்தவனுக்கு இரவு நீடித்திருக்கும். அயர்ந்தவனுக்குப் பிரயாணம் தூரமாயிருக்கும். அதுபோல் உண்மெய் உணர்ச்சியில்லாத அவிவேகிக்கு வாழ்நாள் கஷ்டமாயிருக்கும்.

வழிப் பிரயாணி ஒருவன் தனக்கு மேலான அந்தஸ்துடைய வனுடனேனும், தனக்கு சமானமானவன் உடனேனும் பிரயாணஞ் செய்யக் கடவன். வஞ்சகனுடனேனும், வழிபரிப்போனுடனேனுஞ் செல்லலாகாது.

இவர்கள் என்மக்கள் இவர்கள் எனக்கு சொந்தம் என்றும் இந்த சொத்து எனக்கு சுயாதீனம் என்றும் எண்ணுகிற எண்ணமே ஒரு அவிவேகியை வாதைப்படுத்தும். தானே தனக்கு சொந்தமல்லாத போது மக்களும் சொத்துக்களும் எவ்விதத்தில் சொந்தமாவார்கள்.

தன்னுடைய அவிவேகத்தை அறிந்த அவிவேகி அதுவரைக்கும் விவேகி யாவான். தன்னை விவேகியென்று மதித்த அவிவேகி யதார்த்தத்தில் அவிவேகியாவான்.

அவிவேகி செய்த கெட்ட செய்கையின் பலன் உணரும் வரையில் தேனைப்போல் மதிப்பான். அதன் பலனை உணர்ந்தபின் அதனை அநு பவிப்பதுமன்றி துக்கப்படுவான்.

விவேகி ஒருவன் மாதத்துக்கொருமுறை விடாது புல் நுனி அளவு அன்னம் புசித்து வந்தாலும் நீதி மார்க்கத்தில் நடக்கும் ஒருவனுக்கு பதினாறில் ஒருபாகமேனும் சமமாக மாட்டான்.

துற்செய்கையானது பாலைக்கறந்தவுடன் கெடாதிருப்பதுபோல் இருக்கும். அனல்கொண்டு சாம்பலால் மூடப்பட்ட தீப்போல் துற் செய்கை யானது தொடர்ந்தே நிற்கும்.

அவிவேகி ஒருவன் தான் செய்த துற்செய்கையின் பலனை அறிந்தபோது துக்கப்படுகின்றான். துக்கப்படுங்கால் அவனிலிருந்த துலக்கம் நசிய துக்கமானது அவனில் பதிந்துவிடுகின்றது.