பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவிவேகி ஒருவன் தன் அவிவேகத்தை உணர்ந்தபோது கீர்த்திக்கும் புகழ்ச்சிக்கும் நாளைக் கழிக்காது நிருவாண பாதையைக் கடைபிடிக்க முயல்வான்.

நியாயவர்க்கம்

ஓ! சகோதிரர்களே! கொடூரமாக ஒருவன் காரியத்தை நிறை வேற்றுவானாயின் அவன் நியாயவானவனோ? இல்லை . இது தகுந்தது இஃது தகாததென பகுத்தறியும் சக்தியும் ஏனையோர்களை அறிவுடன் செலுத்தும் மார்க்கமும் அறிந்தவன் எவனோ அவனே நியாய முடையவன். தன்மவழியும், நீதிநிறையும் வாய்த்து நீதியுடனும் அறிவுடனும் நடத்துபவன் எவனோ அவனே நியாயமுடையவன்.

ஒருவன் மிக்க சாமர்த்தியமாய் பேசுவதனால் கலைவல்லோனாவனோ? இல்லை. பொறாமெயும் பயமுமற்ற பொருமெயுடன் இருப்பவன் எவனோ அவனே கலைவல்லோனாவன்.

ஒருவன் மிக்க சாமர்த்தியமாய் பேசுவதினால் தன்மத்தை உணர்ந் தவனாகான். ஒருவன் சிறிதளவு தன்மத்தை அறிந்து அதன்படி ஒழுகி வருவானாகில் அவனே தன்மம் தெரிந்து நீதியில் நடப்பவனாவான்.

உரோமம் நரைத்திருப்பதால் ஒருவனை பெரியோனெனக் கூறமுடியாது. வயதில் பெரியவனாய் இருக்கலாம். ஆனால் ஆசை நரைக்காவிடில் வயதால் பெரியோனென அழைப்பது வீணே.

எவனிடத்தில் சத்தியம், ஒழுக்கம், நட்பு, அடக்கம், மத்தியபாதை, பரிசுத்தம் இவைகள் அமைந்திருக்கின்றதோ அவனே பெரியோன்.

பொறாமெயும், பேராசையும் நாணயமும் பொருந்திய ஒருவன் அதிகம் பேசுவதால் மதிப்படைய மாட்டான். பொறாமெயும், பேராசையும், நாணயமும் பொருந்திய ஒருவன் மிக்க அழகுடையவனாக இருப்பதாலும் மதிப்புடைய மாட்டான்.

தலையைமுண்டனஞ்செய்து சீலமற்று பொய்பகருவானாகில் அவன் சிரமணனாகமாட்டான். அவாவும், பேராசையும் மேற்கொண்ட ஒருவனை எவ்விதமாக சிரமணனென அழைக்கலாம்.

சகல பாபங்களையும் தன்னில் அகற்றி அவைகளுக்கு இடந்தராது அடக்கமுடையவனாய் இருப்பவன் எவனோ அவனே சிரமணன்.

பிட்சாபாத்திரம் ஏந்தி ஏனையோரிடத்தில் பிச்சை கேட்பதால் பிக்க்ஷவாகமாட்டான். தன்மத்தில் பூர்த்திபெற்று பரிபூரண படித் தரத்தில் பழகிவருபவனும் பிச்சை கேட்க வருபவன் எவனோ அவனையே மோன முடையவன் என்றும் முனி என்றும் அழைக்கப்படும்.

கொலை செய்யாதிருப்பதால் ஒருவன் அறஹத்தாக மாட்டான். எவனொருவன் ஜீவர்கண்மீது காருண்யத்தை செலுத்துகின்றானோ அவனே அறஹத்தாவான்.

ததாகதர் சீலம், தபயோகம், தனிமெயாய் படுத்திருத்தல் இவைகளால் மட்டும் சுகத்தைப் பெறவில்லை . இந்த ரகசியத்தை உலகம் அறியாது. சகோதிரர்களே! ஜாக்கிரதையாயிருங்கள். அவா ஒழியுமட்டும் ஒன்றும் பெறப் போகிறதில்லை .

ஓ! சகோதிரர்களே! ஒருவன் தன்னை தீவைப்போல் ஆக்கிக் கொள்ளட்டும், தன்மத்தில் சிந்தனையை செலுத்தி ஞானியாகட்டும், சகல பாபகன்மங்களையும் ஊதிவிடட்டும், ஊதிவிட்ட அந்தக்ஷணமே அரிய நிலையைப் பெற்றவனாவான்.

ஒருவன் தன்னை தீவைப்போல் ஆக்கிக்கொள்ளட்டும், தன்மத்தில் சிந்தனையை செலுத்தி ஞானியாகட்டும், சகல பாபகன்மங்களை ஊதி விடட்டும், ஊதிவிட்ட அந்தக்ஷணமே மறுபடியும் பிறப்பதற்கும் இறப்பதற்கும் ஏதுவில்லாமற்போம்.

வெள்ளியின் அசுத்தத்தை சிறுகசிறுக தினேதினே சுத்தி செய்தல்போல் அறிவுடைய ஒருவன் தன்னிடத்திலுள்ள பாபகன்மங்களை சிறுகசிறுக தினேதினே விட்டொழிக்கட்டும்.