பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எண்ணங்களில் சித்தத்தை செலுத்தல்வேண்டும். இவைகளே பகவனது போதனை.

காம இச்சைக்கு திருப்தி செய்தல் கூடாதகாரியம். தங்கப் பொடிகளை மழைபோல் சொரிந்தாலும் திருப்தி செய்ய முடியாது. காம இச்சையின் அளவையும் அதனால் நேரும் துன்பத்தைக் கண்டறிந்தவன் எவனோ அவனே அறிவுடையோன்.

சகல அவாக்களையும் பற்றற்று நிற்கும் துறவிக்கு பற்றற்று நிற்றலிலேயே ஆனந்தமயமாய் இருப்பான். உலகில் ஜீவர்கள் நாடி நிற்கும் ஆனந்தத்தில் திருப்தியற்றவனாய் இருப்பான்.

ஜீவர்கள் பயத்தால் பல இடங்களில் சென்று அடைக்கலம் புகுகின்றனர். மலைகளுக்கும், காடுகளுக்கும் செல்கின்றனர். தோப்புகளையும், மரங்களையும் தேடிச் செல்கின்றனர். ஆனால் இவ்வகைத்தான அடைக்கலம் சுகத்தைத் தராது. ஏனெனில் அங்கு சென்றும் துக்கத்தினின்று விடுபடாமலிருக்கின்றான்.

எவனொருவன் புத்ததன்ம சங்கமென்னும் மும்மணியில் அடைக்கலம் பெற்று துக்கம், துக்கோற்பத்தி, துக்கநிவாரணம், துக்கநிவாரணமார்க்கம் இன்னவை என அறிந்து துக்கத்தினின்று விடுவிக்கும் பரிசுத்த அரிய அஷ்டாங்கமார்க்கத்தை அனுஷ்டிக்கின்றானோ அவனே மேலோன். இது தான் மேலான அடைக்கலமும் பயங்கரமற்றதுமான அடைக்கலமும் பெறல். இவ்வகையான அடைக்கலம் பெறுவதால் ஜீவர்கள் துக்கத்தினின்று விடுபட்டவர்களாவார்கள்.

பேரவாவை ஒழித்தலே சுகவழியும் சிறந்த தருமமுமாகும்.

எல்லா தருமங்களைப் பார்க்கினும் புத்த தருமமென்னும் மெய்யறமே சிறந்தது. அம்மெய்யறமே மெய்ப்பொருளை விளக்கும். அம்மெய்ப்பொருள் விளக்கமே மெய் இன்பமாம் பேரின்பம் பயக்கும். அப்பேரின்பமே துக்கநிவாரணமாகும்.

பேரவாவாகிய நதியைக்கடந்து அக்கரையாம் நிருவாணமடைபவர்கள் உலகில் சிலரே. ஆயினும் பலரோ அந்நதியின் கரையோரங்களில் அங்குமிங்கும் ஓடுகிறவர்கள். ஆனால் அந்நதியைக் கடந்தவர்களுக்குத் தான் துக்கமில்லை. சேற்றினின்று பரிமளத்துடன் தாமரை முளைத்து இன்பந்தருவதுபோல் பேரவாவாகும் இருளில் அறிவுமயங்கி நிற்கும் மக்களுக்கு புத்ததன்மமாம் மெய்யறந்தோன்றுங்கால் பேரறிவு விளங்கும்.

பொய்யர்கள் மத்தியில் மெய்யர்களாக வாழ்வீர்களாக. பொய்யர்கள் பாதையை உங்கள் மெய்யில் விளக்குவீர்களாக.

கொலைஞர்கள் மத்தியில் சீவகாருண்யர்களாக வாழ்வீர்களாக. கொலைஞர்கள் மத்தியில் உங்கள் காருண்யத்தை விளக்குவீர்களாக.

ஓ! சகோதிரர்களே! காமியர்கள் மத்தியில் நிஷ்காமிகளாக வாழ்வீர்களாக. மதிமயங்குங் கூட்டத்தோரின் மயக்கையகற்றி வாழ்வீர்களாக.

களவு செய்வோர் மத்தியில் நீங்கள் களவின்றி வாழ்வீர்களாக. களவு பொருட்கிட்டினும் அதைக் கண்காணாது அகலுவீர்களாக. அன்பர்களே! பகலில் சூரியனும், இரவில் சந்திரனும், கவசத்தால் போர்வீரனும், யோசனையால் ஞானியும் பிரகாசிப்பதுபோல் ததாகதர் இரவுபகலற்றவிடத்தும், சதாவிழிப்புள்ளோர் அகத்தும் பிரகாசிக்கின்றா ரென்று தனது தன்மபாதகீதையை நிறுத்தினார்.

சூளாமணி

ஒளியாகி உலகாகி நீ விரிந்தாய் என்கோ
உலகெலா நின்னொளியினுள் உள்ளடங்கிற்றென்கோ
வளியார உலக நீ யாள்கின்றா என்கோ
வ மருலகு தானின்ன தடி யடைந்ததென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தாய் என்கோ
நீவிரித்தவாறே மெய்ப்பொருள் விரிந்ததென்கோ
தெளியாமல் இல்லை நின் திருவடிகன் மெய்மெய்
தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்கலாமே.