பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 381


சகலமும் அநித்யம். சகலமும் துக்கம், சகலமும் அநான்மா என விசாரித்து பேதமெய் முதற்கொண்டு மரணம் வரையில் விடுபட மூப்பையும் மரணத்தையும் ஜெயித்துக்கொள்ளலாம்.

“பேதமெய் மீளச் செய்கை மீளும் / செய்கை மீள வுணர்ச்சி மீளு
முணர்ச்சி மீள வருவுரு மீளு / மருவுரு மீள வாயின் மீளும்
வாயின் மீள ஊறு மீளு / மூறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் / வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத்தொகுதி மீளுந் / கருமத் தொகுதி மீளத் தோற்ற மீளுந்
தோற்ற மீளப் பிறப்பு மீளும் / பிறப்புப் பிணி மூப்புச் சாக்கா
டவல மாற்று கவலை / கையா றென்றிக் கடையி றுன்ப
மெல்லா மீளுமிவ் வகையான் மீட்சி"

பகவனது திவ்ய போதனையை ஆழ்ந்து கேட்டுவந்த புக்கஸாதி ஆனந்தக்கண்ணீர் சொரிந்து பகவனை மும்முறை சுற்றிவந்து பாதம்பணிந்து (நமோதஸ்ஸ பகவதோ அறஹதோ ஸம்மாஸம்புத்தஸ்ஸ) குன்றாத மனபாக்கியமும் மேலான மகத்துவமும் வந்தனையுடையவும் ஞானிகள் யாவருக்கும் மஹாஞானியுமாகிய புத்தபகவனை நமஸ்கரிக்கிறேனென மும்முறை வணங்கி, (ஓ! காஸகருணங்கத்வா திஸரனேன சட்திம் அட்டாங்க சீலம் தேதாமே பாந்தே அஹம்பாந்தே ஸரணசீலங் யாஸாமி) பெருமெயும் காம்பீரமுமான பெருமானே! தயைகூர்ந்து இவனை மும்மணிகளாம் புத்த, தம்ம, சங்கத்தில் சேர்த்து எட்டு சீலங்களையும் அளிக்கும்படியும் நீதியில் நடந்துவரவும் அருள்புரியவேண்டுமென இரஞ்சி கேட்க, பகவன் எட்டு சீலங்களை ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார்.

1. பானாதிபாதா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி
2. அதின்னா தானாவேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாதியாமி
3. அஹபிரஹ்ம சரியாவேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.
4. மூஸாவாதா வேறமணி சிக்ஹா பதங் ஸமாதியாமி.
5. ஸுராமேறய மஜ்ஜ பமாதட்தானாவேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.
6. விகாள போஜனாவேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.
7. நச்ச கீதவாதிக விஸுக்கதஸ்ஸனமாலகந்த விவப்பன தாரண மண்டன விபூஷணட்தானா வேறமணி சிக்ஹாபதங் ஸமாதியாமி.
8. உட்சாஸபன மஹாஸயன வேறமணி சிக்ஹாபதங்ஸமாதியாமி.
1. களவுசெய்யாமெய் 2. கள்ளருந்தாமெய் 3. பொய் சொல்லாமெய்
4. பிறன்மனை நயவாமெய் 5. கொலை செய்யாமெய் 6. அகாலபோசன மருந்தாமெய் 7. கீதம், வாசனை, கூத்து இவைகளுக்கிடங்கொடுக்காமெய்
8. பஞ்சணை மெத்தை உயர்வான படுக்கையின் மேல் துயிலாமெய்.

ஆகிய சுத்ததேகிகளாக வாழ்தலே சுகதேக வாழ்க்கைக்கு அறிகுறியாகும். சுகதேகவாழ்க்கையின் அறிகுறியே நித்திய வாழ்வுக்கு அறிகுறியாகும். அந்த நித்தியவாழ்க்கையையே நிருவாணமென்னப்படும். அந்நிருவாண சுயம்பிரகாசப் பிரிவே பரிநிருவாணமென்னப்படும்.

ஓ! சகோதிரனே! இப்பரிநிருவாண சுகமே என்றுமழியா நித்தியசுகம், உலகத்தில் அநித்தியத்தை ஆய்ந்தே நித்தியத்தைக்கண்டேன். துக்கத்தை ஆய்ந்தே சுகத்தைக்கண்டேன். போட்டயிடத்திற் பொருளைக் கண்டடைவது போல் அநித்தியநிலையில் சுழலும் பஞ்சஸ்கந்தத்தினிடத்திலேயே நித்திய நிலையும் துக்கந்தோன்றியவிடத்திலேயே சுகநிலையுங் கண்டேன்.

இத்தகைய சுகவாரியாம் பரிநிருவாண நிலையை விரும்புவோன் தனது தேகக்களங்கையும், வாக்குக் களங்கையும், மனோகளங்கையும் தன்னிற்றானே உணர்ந்து தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளுவோன் சுகம் பெறுவான்.

அந்நியரால் சுகம்பெற வேண்டுமென்போன் அல்லலுற்றலைவான். அதாவது அன்னை குழவிக்கு அன்னமூட்டுவாள். விழுங்குகைக்கு அவள் உத்திரவாதியன்று. ஆசிரியன் திரிகரண சுத்தத்தைப் போதிப்பான் சுத்தீகரிப்புக்கு அவன் உத்திரவாதியன்று. ஆதலின் உண்மெய்ப்பொருளை உணரவேண்டிய சகோதிரனே! நீவிர்தன்மெய்யுணர்ந்து தண்மெய் நிலைத்து சுகம்பெருகுகவென்று வாழ்த்தி சத்தியசங்கத்திற் சேர்த்தருளினார்.

பகவன் கூறிய சீலங்களை புக்கஸாதி அன்புடன் ஏற்று காவிபோர்த்து பிச்சாபாத்திரத்தைக் கையிலேந்தி சங்கத்தில் சேர்ந்து சதுர்சத்தியமாம் துக்கம்,