பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394 / அயோத்திதாசர் சிந்தனைகள்


28. பரிநிருவாண காதை.

பகவன் பின்னர் ஆனந்தரைப்பார்த்து ஆனந்தா! புறப்படுவோம் வாவென அழைக்க, ஆனந்தன் பகவன் பின்தொடர்ந்தான். பகவன் பெருத்த பிக்ஷ குழாங்களுடன் புறப்பட்டுச்சென்று அங்குள்ள பாவதரிக்காமாமரத்தோப்பில் தங்கினார்.

சீவக சிந்தாமணி

எரிமிடைத்தனையமாலை இனமணி திருவில்வீசுந்
திருமுடியாரமார்பிற்சேணிபனென்ப நாம
மருமுடி மன்னர்சூழ வலரனிபிண்டிவேந்தர்
திருவடி விருந்துசெய்வான் றிரண்முர சறைவித்தானே.

அருங்கலைச்செப்பு - குணசேணிபன் விருந்து

தானந்த ராஜகிரி தனபதிக்கோரைங்காத
மானந்த புரியடைந்தான் ஆன். கணநாதன் வந்தமைந்த
காட்சிதனைக்கண்டான்
குணசேணிபனென்னுங்கோன்
அருந்தவத்தோன்றன்னை அணுகி அடிபணிந்து
விருந்தோம்ப நின்றான் செவ்வேள்
அவ்விருந்தோமிக்க வரியவிருந்தானும்
பவ்விருந்தஃதானே பழி
பழியேற்றான் மன்னன் பாரோர்கள் தூற்றுகரி,
இழிவேற்றான் பன்றியெனுமேர்
கூர்கழங்கின் கூட்டுங் குமுதமுதச் சோறும்
சேர்த்தளித்த சேணிபனார் தூர்
அறியாதார் பன்றி என்றாரங்குணர்ந்தோர் கூரென்றார்
நெறியாயார் நின்றழிந்தார் நேர்.
நெறி நின்றார் மாயணத்தார் நெறியற்றா ரீனணத்தார்
பொறியற்றார் போதத்தவர்


இராஜகிருகத்திற்கு ஐங்காத வழியிலுள்ள ஆனந்த புரியென்னும் குஷீ நகரமாந்தோப்பில் பகவன் வந்திருக்கின்றாரென்றறிந்த குணசேணிபன் என்னும் அரசன் புத்தபிரானிடம் சென்று சாஷ்டாங்க தெண்டமும்முறையிட்டெழுந்து தேவாதி தேவா திவாகரபாவா, மூவாமுதல்வா, முத்திக்கிறைவா, காட்சிக்கதிபா, கருணையோருருவா, சூட்ச சுகுணா, சுந்தரவதனா, ஆதிமூலா, அன்பின் முந்நூலா, வேத முதல்வா, வித்தைக்கதிபா, அருங்கலைநாதா, ஆனந்த பூதாவென்று துதித்து ஐயன்மீர் எமதில்லத்து விருந்திற்கெழ வேண்டுமென்று வருந்தினான்.

அவனது வருந்துதலுக்கு தங்கிய பகவன் விருந்தோம்பி யெழுந்து மறுபடியும் கங்கைக் கரையணுகி தனதாதியடியார் ஆனந்தனையும் பிருங்கியையும் அருகில் அழைத்து பரிநிருவாணத்தை விளக்குகைக்கு சகலதேச சத்திய சங்கத்தோர்களையுந் தருவிக்குமாறு உத்திரவளித்தார்.

ஆனந்தன் பிருங்கி யென்னும் ஆதிசீடர்கள் வரலாறு

சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தர் பிறந்த காலத்தில் ஆகாயத்திலும் பூமியிலும் அனந்த அற்புத காட்சிகள் தோன்றியதுடன் கன்று ஈணாத ஓர் காராம் பசுவானது வந்து குழவிக்கு பால் சுறந்தூட்டியதும்., அன்று முதல் பசுக்களை யாதொரு துன்பமுஞ்செய்யாது ஆதரிக்கவேண்டுமென்று தார்வேந்தன், ஆக்கியாபித்ததுமாகியப் பேரானந்த செய்திகளைக் கேட்டிருந்த ஆனந்தனும், பிருங்கியும் நடக்க சக்த்தி யற்ற சப்பாணிகளாயிருந்தும் காராம்பசுவின் பாலருந்திய கௌதமரை தரிசிக்கவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் தவிழ்ந்துகொண்டே சென்று தெரிசித்து தள்ளாடி நடக்கப்பெற்றவர்கள் அரசமரத்தடியில் ஐயன் நிருவாணம் பெற்றது முதல் பரிநிருவாணம் வரை அவரை அடுத்து அருகினின்றே ஊழியஞ் செய்து வந்தவர்களாகும்.

அவ்விருவரும் அவலோகிதர் மொழியைக் கேட்டவுடன் சத்திய சங்கத்தோர் யாவருக்கும் ஐயன் பரிநிருவாண்காலத்தைத் தெரிவிக்க சகலசங்க சமணர்களும் அறஹத்துக்களும் வந்து சேர்ந்தார்கள்.