பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 423


கோபத்தாற் குடிகெடாதென மறுக்கான், காமியபெருக்கத்தால் காயமழியும் என்று கூறியபோது அதன் அனுபவங்கண்டோன் காமியத்தாற் காயமழியாதென மறுக்கான், அவைபோல் மனோவிருத்தியாம் அவாவின் பெருக்கத்தால் துக்கவிருத்தியுண்டாம் மனோவொடுக்கத்தால் அவாவையறுத்தலால் சுகவிருத்தியுண்டாம். இதனை அநுபவத்திற் கண்டவர்களே மெய்கண்டவர்களாவர். இவற்றை யநுபவத்திற் காணாதோர் பொய்யர்களே யாவர். ஆதலின் ஒவ்வோர் மக்களும் தங்களுக்கு உண்டாகுந் துக்கங்களைப்போக்கி சுகவிருத்தியை நாடுவதே முத்தியாம்.

அத்தகைய முத்திய சுகத்தை நாடுவோர் எதிரிகளின் சுகத்தைக் கருதல் வேண்டும். தான் கல்வி விருத்தியைப் பெற வேண்டுமாயின் எதிரிகளின் கல்வி விருத்தியைக் கருதல்வேண்டும். தான் சுகசீவனம் பெறவேண்டுமாயின், எதிரிகளின் சுகசீவனத்தைக் கண்டு ஆனந்தித்தல் வேண்டும். தனது பொருளை மற்றொருவர் களவாடாதிருக்க எண்ணுவானாயின் அன்னியர் பொருளை தான் களவாடாதிருத்தல் வேண்டும். தன்னை யொருவன் பொய்சொல்லி வஞ்சியாதிருக்க எண்ணுகிறவன் அன்னியனை பொய்சொல்லி வஞ்சியா திருத்தல் வேண்டும். தன் தாரத்தை மற்றொருவன் இச்சியாதிருக்க எண்ணுகிறவன் அன்னியர் தாரத்தை இச்சியாது இருத்தல் வேண்டும். தான்மதிமயங்கிக் கெடாதிருக்க எண்ணுகிறவன் எதிரிக்குமதுவூட்டி கெடுக்காமலிருக்க எண்ணவேண்டும். தனது சீவனுக்கோர் துன்பம் அணுகாதிருக்க எண்ணுகிறவன் மற்ற சீவராசிகளைத் துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும். தன்னை சிறப்பித்துக் கொள்ள வேண்டியவன் எதிரிகளின் சிறப்பைக் கருதல்வேண்டும். இத்தியாதி செயல்களைத் தானே நடத்துவதுடன் தன்னை அடுத்தோருக்கும் போதித்துத் துக்க நிவாரணஞ் செய்வதும் செய்விப்பதுமாகிய செயலுக்கே புத்ததன்மம் என்றும், சத்தியதருமம் என்றும், மெய்யறமென்றுங் கூறப்படும். இதுவே புத்தரது ஆதிவேத மொழிகளின் அந்தரார்த்தமும் திரிபீட விரிவுமாகும்.

- 6:9; ஆகஸ்டு 7, 1912. –

85. பௌத்தம் அழிந்த கதை

வினா: தற்காலம் இவ்விடந் தோன்றியுள்ள பிரசங்கிகள் புத்தமார்க்கம் என்பது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சங்கரர் இவர்களால் அழிந்து போய் விட்டதென்று கூறிவருகின்றார்களே அது மெய்க்கதையாய் இருக்குமா அல்லது பொய்க்கதையாய் இருக்குமா அவற்றை சற்று தெள்ளற விளக்கிக்காட்ட வேண்டும்;

மா. பாலசுந்திரம், கோடூர்.

விடை: ஐயா பாலசுந்திரமென்னும் அன்பரே! தாம் வினாவியுள்ள சங்கை அன்னோர் நடவடிக்கை சரித்திரங்களைக் கொண்டே பொய்க் கதைகள் என்று நுட்பமாகத் தெரிந்துகொள்ளலாம்.

அதாவது புத்தமார்க்கத்தை அழிப்பதற்கு தேவர்களே மக்களாக வந்து பிறந்தார்கள் என்பதும் அத்தகைய மக்களில் பிராமணர்களே சிறந்தவர்கள் என்றும் அவர்கள் குடும்பத்திலேயே தேவர்கள் வந்து தோன்றினார்கள் என்றும் வரைந்து வைத்திருக்கின்றார்கள். இத்தகையக்கதை மெய்யானதும் பூர்வம் வழங்கியதுமா இருக்குமாயின் நூறு வருடத்திற்கு முன்பு கல்வியில் மிகுத்தசில கம்மாளர்கள் எழும்பி இப்பிராமணர்கள் என்போர் குருபட்டத்துக்கு உரியவர்களல்ல, ஜோதிசங்கமர்களைப் போல் பிச்சையேற்று உண்பவர்கள் என்று கூறிய வழக்கு "அதாலத் கோர்ட்"டுக்குக் கொண்டுபோயிருந்தபோது தேவர்களே பிராமணர்களாகப் பிறந்து புத்தர்களை அழித்துவிட்டார்கள் என்னும் மெய்யானதும் இப்புராணக்கதைகள் இவர்கள் கையிருப்பில் இருந்துள்ளதுமாயின் அக்கோர்ட்டார் முன்னிலையில் இக்கதைகளைக் கொண்டுவந்து தங்கள் குலசிறப்பை ரூபித்து ஜெயம் பெற்றிருப்பார்கள் அன்றோ. அத்தகைய நீதி ஸ்தளத்தில் கொண்டுவந்து ரூபிக்காது இப்போது தோன்றியகதை