பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 425

வழங்கிவருவதாகும். எங்ஙனமென்பீரேல் அம்மொழிகள் யாவும் பௌத்த அரசர் காலயுத்தத்தின் அணி வகுப்பென்னப்படும். அஃது வருமாறு.

கிருதயூகம் - முதலாம் அணிவகுப்பு. துவாபர யூகம் - இரண்டாம் அணிவகுப்பு. திரிதா யூகம் - மூன்றாம் அணிவகுப்பு. சதுர் யூகம் - நான்காம் அணிவகுப்பு.

இவ்வடபாஷை இலக்கமொழிகளைக் கொண்டே சோதிட நூற்களில் பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி என்றும்; ஏகாதேசி, துவாதேசி, திரியோதேசி, சதுர்த்தேசி என்றும் வரைந்து வருகின்றார்கள். இவ்வடமொழி இலக்க அந்தரார்த்தம் அறியாதோர் ஒன்று, மூன்று, இரண்டு, கலி என்பனபோல் கிருதம், திரேதம், துவாபரம், கலியெனக் கைகொண்டவறெழுதி ஒவ்வொன்றுக்கும் இலட்சக் கணக்குகளைப் பெருக்கித் தங்கள் நூதன மதங்கள் யாவும் புராதன மதங்களென மறுட்டுவான்வேண்டி பொருளறியாது எழுதியப் பொய்யுகங்களேயாம்.

இத்தகையப் பொய்யுகக் கணக்குகளை மெய்யெனக்கூறி வெளி வருவாராயின் சீனதேசத்தில் ஆயிரத்தி ஐன்னூறு வருடமாக ஓர் பத்திரிகை உலாவிவந்திருப்பதில் புத்ததன்மங்கள் வரையறுத்து வந்துள்ள கணக்கை நாளதுவரையில் காணலாம். லண்டன் மிஷநெரி கிறீஸ்தவர்கள் தோன்றியது முதல் நாளதுவரையில் அவர்களது கணக்கை வரையறுத்துக் காணலாம். அதுபோல் கனம் வெங்கிட்டராமன் அவர்களின் விஷ்ணுமத நூறுவருட கணக்கை வரையறுத்துக் கூற இயலுமோ. அன்றேல் சிவமதத்தின் நூறுவருடக் கணக்கையேனும் வரையறுத்துக் கூற இயலுமோ, இயலாதே. தங்கள் மதக்கணக்குகளையே வரையறுத்துக் கூற வகையற்றவர் யுகக் கணக்கை கூறவந்ததை வியப்பெனக் கூறியுள்ளாம்.

ஈதன்றி யுகக் கணக்குகளை மட்டிலும் மெய்யென நம்பி வெளித்தோன்றியவர் வால்மீகர் இராமாயணத்தையும், வசிஷ்டர் கூறியுள்ள ஸ்மிருதியையும் பொய்யெனக் கூறுவரோ, முக்காலுங் கூறாரென்று நம்புகிறோம். அதுகொண்டு வால்மீக ராமாயணத்தில் அநுமார் இலங்கைக்குச் சென்று சீதையைத் தேடுங்கால் ஓர் கோபுரத்தின் உச்சியில் உட்கார்ந்து இஃது பௌத்தர்களது வியாரமோவென வரைந்துள்ளவற்றை நாளதுவரையிற் காணலாம்.

அத்தகைய இராமர் யுத்தகாலத்திலேயே பௌத்தர்கள் வியாரம் இருந்திருக்க, புத்தருக்குப் பின்பே இராமர் தோன்றி உள்ளாரா, முன்பு தோன்றியுள்ளாரா என்பதை இவரது இராமாயணக் கதையைக் கொண்டே தெரிந்துக்கொள்ளலாம் அன்றோ. வசிஷ்டர் இராமருக்கு ஞான சாதனம் போதிக்கும் இடத்தில், அப்பா இராமா உன்னுடைய பாட்டன் உத்தாலகன் என்போன் புத்தரைப்போல் உத்திரமுகம் நோக்கி தாமரைப் புட்பமாம் பதுமாதனத்தில் உட்கார்ந்து ஞானசாதனஞ் செய்துள்ளான். அதுபோல் நீயுஞ் செய்யக்கடவாய் என்று கூறியுள்ள மொழியாலேனும் இராமருக்குப் புத்தர் முந்தியவர் என்றே விளங்கவில்லையோ. இவரது இராமாயணத்தையும் வாசித்துணராது யுகக் கணக்குகளை மட்டிலும் ஏற்பதென்னோ . யுகக் கணக்கைத் தன்னிற்றானே நம்பிக் கொண்டபோதினும் கனந்தங்கிய ரோமிஷ்சந்திரடட்டு என்பவர் எழுதியுள்ள இந்தியதேயசரித்திரத்தை நம்பி புத்தரது காலவரையைக் குறித்துள்ளவர் அவரால் பாரதத்திற்குப் பிந்தியே இராமாயணந் தோன்றியள்ளது என்று குறித்துள்ளவற்றையும் சரிவர வாசித்துத் தனது மதவைராக்கிய அபிப்பிராயத்தைப் போக்கி இராமருக்கு முந்தியே புத்தர் தோன்றியுள்ளார் என்று அறிந்தடங்குவாராக. அங்ஙனம் அடங்காது இன்னும் யுகக் கணக்கையே நம்பி வெளிவருவரேல் கலியுலகக் கணக்கின் ஆதாரங்கொண்டு இவரது பொய்யுலகக் கணக்குகளை போர்ந்த ஆதாரத்துடன் ரூபிப்பதோடு இரவு முழுவதும் இராமாயணங் கேட்டு விடிந்தபின் இராமருக்குச் சீதை என்ன முறையாக வேண்டுமெனக் கேட்டுள்ள விவேகிகள் கதையையும் விளக்கக் கார்த்துள்ளோம்.

- 6:16; செப்டம்பர் 25, 1912 -