பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 429

மிலேச்சரென்று திவாகரத்திலும் நிகண்டிலும் கூறியுள்ளபடியால் நாம் ஆரியரென்று கூறவில்லை, ஆர்யரெனக் கூறியுள்ளோமென வந்தாடித்துக் கொள்ளுவதற்கேயாம்.

ஆர்யர், ஆரியரென அவ்வகைப் புறட்டினும் மிலேச்சர், மிலேச்சரென்னும் பொருளையே தரும். ஆதலின் மிலேச்ச போதகர்களுடைய உபதேசங்களென்பது தங்களையே சுட்டிக்காட்டிக்கொண்டது அதுவுமோர் கற்றறியா அதர்மமேயாம்.

சாம்பர்லேனென்னும் மேதாவியர் இந்தியாவின் அரிய தர்மத்தை எடுத்தோதியுள்ளது சகலமும் புத்ததர்ம சிறப்பேயன்றி ஆரியர்களென்ற மிலேச்சர் சிறப்பன்றாம். அரியபகவன், அரியமுனி, அரியநாதன், அரியறன், அரியபோத னென்னும் பெயர்கள் யாவும் புத்தருக்குரியவைகளே என்றும் அரியதர்மமென்பதும் அவரது சத்தியவாக்குகளே என்றும் (பாலி) நிகண்டில் கூறியுள்ளவற்றைப் பரக்க காணலாம். புத்தரது அரிய தர்மத்தை இந்திய தேசத்தோர் மறந்துள்ளபடியால் மக்கள் சீர்கேடு அடைந்து வருகின்றார்களென்று அவ்வமேரிக்க சாஸ்திரி வரைந்துள்ளவற்றை நன்கு கற்றுணராது தங்கள் ஆர்ய, ஆரியமென்னும் மிலேச்ச தர்மத்தை சிறப்பித்துள்ளார் என்னுமொழி யாவற்றினும் அதர்மமென்னப்படும். ஆதலின் நமது கி.சுந்தரராமனென்பவர் இனியேனுந் தமது சரித்திரத்தை நன்காராய்ந்து அடங்கு வாரென்று நம்புகிறோம்.

- 6:17; அக்டோபர் 2, 1912 –

89. வேதங்களும் நீதிசாஸ்திரங்களும் எற்றிற்கு

மக்கள் சீர்திருந்தி செவ்வைப்படுவதற்கேயாம். அத்தகைய வேதமென்பது சகல மக்களுக்கும் பொதுவாயிருத்தல் நலமா; சில மக்கள் அவற்றைப் பார்க்கவும்படாது கேட்கவும் படாதென்பது நலமா, அவ்வேதங்களை அளித்தக் கடவுளுக்கு தனது சிருஷ்டிகளாம் மக்கள் மீதும் பேதமுண்டோ ; பேதமாகவே சிருட்டித்தாரென்னின் மக்கள் உருவினில் மாறுகொள சிருஷ்டிக்கலாகாதோ, மக்களுருவில் மாறின்றி சிருஷ்டித்துங்கொடுத்துள்ள வேதத்தைக் கூறுபோடலாமோ, அவ்வகைப் பிரித்திருப்பாராயின் அவரை ஓர் கருணை மிகுத்தக் கடவுளென்னலாமோ, அத்தகையக் கருணையற்றக் கடவுளை ஓர் சிருஷ்டிகர் என்றும் கருணையற்ற வேதத்தை சீர்திருத்த முதநூலென்றும் பாவிக்கப்போமோ. கருணையற்றக் கடவுளைப் பின்பற்றியவர்களுக்கும் கருணையற்ற வேதத்தைப் போதிப்போர்களுக்கும் அதனைக் கேட்போர்களுக்கும் கருணையென்பது ஏதேனுமிருக்குமோ கனவிலும் இருக்காதென்பது அனுபவமுங் காட்சியுமாகும். கருணையற்றச் செயலைப் பெருக்கக் கூறும் ஓர் முதநூலென்றும், அதனை நம்பி நடப்போரே மேலோரென்றுங் கூறத் துணிபுண்டோ. மேலோரென்பதில் சகல மக்களையுந் தம்மெ ஒத்த மக்களாக பாவித்து சருவசீவர்களையுந் தன்னுயிர்போல் காப்பவனன்றோ மேலோராவர். கனவிலுங் கருணையென்பது அற்று தங்கள் ஒரு குடி பிழைக்க நூறு குடிகளைக் கெடுத்துப் பாழ்படுத்துவோரும் மேலோராவரோ, சாதியில் மேலோரென வகுத்துக்கொண்டு தம்மெயொத்த மக்களைத் தாழ்த்தி இழிவடையச் செய்து சீர்கெட வைப்போர்களையும் ஓர் மேல்சாதியோரென்றுங் கூறப்போமோ.

அங்ஙனம் சாதியென்னும் மொழியின்படி மேற் சாதனங்களாம் நல்வாய்மெய், நற்கடைபிடி, நல்லூக்கம், நல்முயற்சி, இவைகளை சாதிப்பவரை யன்றோ மேற்சாதி என்பதற்குப் பொருந்தும். கருணையற்றச் செயலும், அன்பற்ற பார்வையும், ஈகையற்றக் கரமுடையோரை மேலான சாதியோர் என்பதும் கருணையற்ற சிருட்டிகரைக் கடவுளென்பதும், ஒற்றுமெயைக் கெடுத்து உள்ளக் களிம்பு ஏற்றும் நூலை வேதமாம் முதநூலென்பதும் பொருந்துமோ, முக்காலும் பொருந்தா. இத்தகையக் கடவுளையும், இத்தகைய வேதத்தையும்,