பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஜிநா. அதுகொண்டு தமிழ் நிகண்டில் தருமராஜன் முந்நிந்திரன் சினன் பஞ்சதாரை விட்டோன், அருள்சுரந்தவுணக் கூட்டுந் ததாகதன் ஆதிதேவன், விரவுசாக்கையனே சைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன், அரசு நிழலிலிருந்தோன், அறியறன், பகவன், செல்வன் என்றும், மற்றுமோரிடத்தில் புத்தன்மால் அருகன் சாத்தனென்றும், தருமராஜன் தான் புத்தன் சங்கனோடரு நன்றாம்' என்னும் கூறுபாடுகளே போதுஞ் சான்றாம். புத்தரென்னும் பெயரை வடநாட்டில் விசேஷமாகக் கொண்டாடிவந்த போதினும் தென்னாட்டில் இந்திரரென்றும், அருகரென்றும் கடவுளென்றும், தருமராஜன் என்றும், மன்னன் என்றுங் கொண்டாடிவந்தவைகளை பெரும்பஞ்சகாவியங்களிலும், சிறுபஞ்சகாவியங்களிலும் பரக்கக் காணலாம்.

நமது பத்திரிகை தோன்றியது முதல் குரு விசுவாசத்தையும் இராஜ விசுவாசத்தையும் பீடமாகக் கொண்டு அகிம்சாதன்மத்தையே மிக்க வரைந்து வருகின்றோமன்றி இம்சா அதன்மம் வரைவதே கிடையாவாம்.

ஆதியென்னு மொழி தோன்றிய பின்னரே அநாதியென்னு மொழித் தோன்றுமேயன்றி ஆதி தோன்றாவிடத்து அநாதி தோன்றாவென்பது விதி, மலந் தோன்றி மறைந்து தோன்றாவிடத்து அமலமென்றும், ஆன்மனென்னும் புருஷன் தோன்றி மறைந்து மற்றுந் தோன்றாவிடத்து அனான்மனென்றும் அவிரோதமென்றும் வழங்குதல்போல் சருவநீதிக்கும் ஆதியாக வோர் உரு தோன்றி மறைந்து தோன்றாவிடத்து ஆநாதியென்னும் மொழி வழங்கி வருகின்றது. யாதுமில்லாத திலிருந்து ஒன்று தோன்றாதென்பது அநுபவமுங் காட்சியுமாதலின் அநாதியினின்று ஆதி தோற்றாவாம். ஆதலின் உலக சீர்திருத்தக்காரருள் ஆதியாகத்தோன்றிய புத்தபிரான் பிறந்த வருடத்தை முதற்குறித்தும், கிறீஸ்துவை இரண்டாவது குறித்தும், மகம்மதுவை மூன்றாவது குறித்தும் வரைந்தும் வருகின்றோம். புத்ததன்மத்தினின்றே நெருங்கத் தோன்றியுள்ளது ஜைனமும், தூரத் தோன்றியுள்ளது மற்ற மதங்களேயாம் என்பதை ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுவீராக.

திரிக்குறளைப்பற்றி அஃது ஜைநருடைய நூலல்லவென்று கூறியது அவர்கள் விசாரிணைக்குறைவேயாம். காரணம் பௌத்தத்தன்மத்தையும் ஜைநதன்மத்தையும் வேறாக எண்ணியுள்ளார்களாதலின், பௌத்ததன்ம திரிபீடமாம் முதநூல் தன்மபிடகம், சூத்திரபிடகம், வினய பிடகமென்னுந் திரிபிடகத்தைக்கொண்டு வழி நூல், அறத்துப்பால், பொருட்பால், காமபாலென்னுந் திரிக்குறள் தோன்றியுள்ளது உணர்ந்து, திரிக்குறள் பௌத்தர்களுக்குரியதன்றி ஜைநருகுரிய தன்றென்றெண்ணி அவ்வாறு வரைந்துள்ளார்களென்று நம்புகிறோம். பௌத்தமும் ஜைநமும் ஒன்றென்று உணர்ந்திருப்பார்களாயின் அவ்வகை வரையார்கள். ஓர் மகதநாட்டுச் சக்கிரவர்த்தியே புத்தரென்றும், ஜைநரென்றும் அழைக்கப்பெற்றபடியால் தற்கால ஜைநரென்போருள் சக்கிரவர்த்தியென்னும் பெயரை வழங்கி வருகின்றார்கள். கொடுந்தமிழ் வாசிகளாம் மலையாளிகள் புத்தரை நாயன், நாயனாரென்று வழங்கிவந்தது கொண்டு திருவனந்தபுறத்தைச் சார்ந்த வள்ளுவர் நாடென்னும் பதியில் வாழும் வள்ளுவர்கள் குப்புலிங்க நாயனாரென்றும், மார்க்கலிங்க நாயனாரென்றும் வழங்கிவருவதுபோல ஜைநருக்குள்ளும் பாகுவலி நாயனார், தீர்த்தங்கர நாயனார், ஜெயசீல நாயனாரென வழங்கி வருகின்றார்கள் இஃதை அறிந்துக் கொள்ளுவீராக.

- 7:8; சூன் 30, 1913 –

102. சாக்கைய பௌத்த சங்கத்தின் சபா நாயகர்கள்

பௌத்த சோதிரர்களே சற்று கவனியுங்கள். சங்கத்தோர் கூட்டுங் கூட்டம் பெருங்கூட்டமாயிருப்பினுஞ் சிறுங் கூட்டமாயிருப்பினும் அவற்றிற்கு நியமிக்கும் சபா நாயகர்கள் சங்கத்திற்கு சபா நாயகரென நியமித்துள்ளவரே யிருந்து காரியாதிகளை நடாத்தும்படி செய்விக்கல் வேண்டும். அக்கால் சங்க சபாநாயகரில்லாமற் போய்விடு வாரானால் புத்ததன்மத்தில் அன்பும்