பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 467

ஆதலின் ஆட்கொல்லியாகும் உனக்குள்ள திரவியத்தை அனைவருமறியக் கூறுவாயாயின் அவ்வாட்கொல்லி என்னும் திரவியமே உன்னைக் கொல்லும் ஓர் ஆயுதமாகிப்போம். இது கொண்டே உள்ள திரவியத்தை உடன் பிறந்தானுக்கும் உரைக்கலாகாதென்பதோர் பழமொழி.

உனக்குள்ள திரவியத்தை உலகோர் அறியக் கூறி உலோபியாக விளங்கி உன்மத்தனாவதினும் உனக்குள்ள திரவியத்தைக் கொண்டு உலக உபகாரியாக விளங்குவாயாயின் உன் திரவியமும் பெருகி உன் ஆயுளும் வளர்ந்து உன் கீர்த்தியும் அழியாமல் நிலைக்குமென்பதாம்.

காக்கைபாடியம்

அறநெறிநின்று வாயுளை வளர்த்து / பிறருபகாரம் பேணிப் பெருக்கி நிறைமொழிமாந்தரெனு நிலைநிற்கில் / துறந்தவர் கீர்த்தித் தொடர்புமீதாமே.

6. ஊக்கமதுகைவிடேல்

ஊக்கமது - உனக்குள்ள முயற்சியில், கைவிடேல் - சோர்வடையாதே.

வித்தையிலேனும், கல்வியிலேனும் ஊக்கமாயிருந்து அவற்றைக் கைவிடுவதாயின் எடுத்தமுயற்சி ஈடேறாமல்போம்.

ஆதலின் ஊக்கத்தினின்று நடாத்தியச் செயலைக் கைவிடுவதானால் வீண் முயற்சியேயாம். எடுத்த முயற்சியைக் கைவிடாது சாதித்துக் கைகண்ட தொழில்களாகும் இரயில்வே, டிராம்வே, டெல்லகிறாப், போனகிறாப், லெத்தகிறாப், முதலியத் தொழில்கள் யாவும் கைவிடா ஊக்கத்தினால் விருத்திப்பெற்றக் காட்சிகள் எனப்படும்.

நாம் இத்தகைய வித்தியாவிருத்தியையும், புத்தியின் விருத்தியையும், ஈகையின் விருத்தியையும், சன்மார்க்க விருத்தியையும் கைவிடுத்து பொய்க் குருக்களால் போதிக்கும் பொய்ப்புராணக் கட்டுக்கதைகளை நம்பி சாமி கொடுப்பார், சாமி கொடுப்பார் என்னும் ஊக்கமற்ற சோம்பேரிகளாய் சோற்றுக்கு வழியற்று பிச்சையிரந்துண்பதே பெரும் வித்தியாவிருத்தி என்று எண்ணிப் பாழடைவோம் என்னும் வருங்கால சம்பவம் உணர்ந்த ஞானத்தாய் உருக்கவலிமெயாம் ஊக்கச்செயலை உறுதி பெறக் கூறியுள்ளாள்,

திரிக்குறள்

தெய்வத்தாலாகாதெனினு முயற்சிதன் / மெய்வருந்த கூலிதரும்.

அருங்கலைச்செப்பு

வாழ்விப்பதேவ ரென மயங்கிவாழ்த்துதல் / பாழ்பட்ட தேவமயக்கு.

7. எண்ணெழுத்திகழேல்

எண் எழுத்து - எட்டென்னுங் கணிதாட்சரமாகவும், எழுத்தென்னும் அகராட்சரமாகவும் விளங்கும் வரிவடிவை, இகழேல் - அவமதியாதே என்பதாம்.

அகரவட்சரமானது சகல அட்சரங்களுக்கும் ஆதியாய் தோன்றி அறிவை வளர்த்து ஞானக் கண்ணாகவும் விளங்குவது அதுவேயாதலின் அதனை அவமதியாதே என்று கூறியுள்ளாள்.

ஒளவையார் ஞானக்குறள்

ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் / தோதிய நூலின் பயன்.
விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வுகண்டால் / அகாரமாங் கண்டீ ரறிவு.

அகரத்தின் சுழியானது அங்கத்தின் புருவமத்திய சுழிமுனையினின்று முதுகின் தண்டெலும்புள் அளாவி உந்தியில் முனைகூடி பூணுநூல் அணைவதுபோல மார்புட்சென்று கண்டத்தில் கால்வாங்கி நிற்கும். அதையே தாயின் வயிற்றில் குழவி கட்டுபட்டிருக்குங்கால் மூச்சோடிக் கொண்டிருக்கும் பிரமரந்தினமென்றும், குண்டலி நாடியென்றும், குண்டலி சத்தியென்றும், குறியெழுத்தென்றுங் கூறுவர்.

இத்தகைய எட்டெழுத்தாம் அகராட்சரத்தை கண்டத்திலூன்றி குண்டலியை நிமிர்த்தி குணங்குடிக்கொள்ளும் வழிக்கு ஆதியட்சரமாகலின் நாம் எப்போதும் வாசித்துவரும் அகர எழுத்து தானேயென்று அவமதித்து அறிவின் விருத்தியை விட்டுவிடாதீர்களென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.