பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இல்வாழ்க்கையில் தன் சுகத்தை மட்டிலும் கருதி வளைந்து ஏனையோர் சுகத்தைக் கருதாது அகற்றி வாழும் வாழ்க்கையில் தனக்கு சுகங்கெடுமாயின் ஏனையோர் அச்சுகக்கேட்டைக் கருதாது விலகிநிற்பார்கள்.

ஆதலின் இல்வாழ்க்கையில் வளையாபதியாய் நிற்றல் அவலோகிதர்கட் செயலும் சுற்றத்தோருடன் வளையும் பதியில் வாழ்தல் லோகயிதச் செயலுமாகும்.

அறநெறிச்சாரம்

செல்வத்தைப் பெற்றா சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமற் பார்த்துண்டு - நல்ல
தானமறவாத தன்மெயரே லஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு.

விவேகசிந்தாமணி

தன்மானங்குலமானந் தன்னைவந்தே யடைந்தவர்க டங்கள் மானம்
என்னாகி லென்னவல்ல வெல்லவருஞ் சரியெனவே யெண்ணம்போந்து
நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களக்கு நன்மெய் செய்வோர்
மன்மானி யடைந்தோரை காக்கின்ற வள்ளலென வழுத்துவாரே.

16. சனிநீராடு

சனி - உலோக, நீர் - ஊற்றில், ஆடு - தேக முழுவது மழுந்த குளித்தெழுஉம் என்பதாம்.

அதாவது, பாலி பாஷையில் சனியென்னும் மொழிக்கு இருளென்றும், சனிமூலை என்னும் மொழிக்கு வடகிழக்கென்றும், சனிபிந்து என்னும் மொழிக்கு நீலக்கல் என்றும், சனி நீர் என்னும் மொழிக்கு உலோகவூற்று, தீர்த்தம் எனக் கூறியுள்ளபடியால் மூலபாஷையை முற்றும் உணர்ந்த மாதவி உலோகவூற்றுக்களாந் தீர்த்தமாடுதலினால் தேகத்தில் உண்டாகும் சருவரோக நிவர்த்திக்கும் ஓடதிமூலமாகும் சனிநீரில் விளையாடுங்கோளென்று கூறியுள்ளாள்.

இந்த உலோகவூற்றாம், சனிநீரின் குணாகுணத்தை உலகநாதனே தனது சங்கத்தோருக்கு கூறியுள்ளதை திருவேங்கிடமென்னும் திருப்பதியிலும் சீனதேசத்தைச் சார்ந்த கொரியா என்னும் நாட்டிலும் தீபகற்ப மென்றவற்றுள் ஓர் உலோக ஊற்றுள்ளதை நாளது வரையிலும் காணலாம். சருவாங்க சவரம் செய்து சனிநீருள் மூழ்குவதினால் சர்வரோக நிவர்த்தி உண்டாம் என்பது சரக சாஸ்திரமூலபாடம். (சில வரிகள் தெளிவில்லை)

சூளாமணி

குற்றதோரிடுக்கண் வந்தாலுதவுதற் ததன்றாயிற்
பெற்றவிவ்வுடம்புதன்னால் பெறுபயனில்லைமன்னா
ஆங்கவேங்கடஞ் சேர்ந்தபினையகா
ணீங்கிவெங் கடுங்கானகத்தீடென
வேங்குநீர்கடல் வண்ணனுக் கின்னனாம்
வீங்குவேண்டிரை வண்ணன் விளம்பினான்.

சீவகசிந்தாமணி

தீராவினைதீர்க்குந் தீர்த்தந்தெரிந்துய்த்து / வாராக்கதியுரைத்த வாமன்றா னீயாரே
வாராக்கதியுரைத்த வாமன் மலர்த்துய்ந்த / காரார் பூம்பிண்டி கடவுணீ யன்றே.

எள்ளிநெய் கண்டுபிடித்தகாலம் கானிஷகர் என்னும் அரசனுக்கு முந்தியதும், 1,000 வருஷத்திற்கு பிந்தியகாலமாகும். ஔவையார் வாசக நூலியற்றிய காலம் 1,500 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாகும். ஆதலின் எள் நெய் தேய்த்து தலைமுழுகென்பது வாசக நூலின் காலவரைக்கும் பொருந்தாது. சகலதேச மக்களுக்கும் எண்ணெய் ஸ்னானம் பொருந்தாதென்பது திண்ணம்.


17. ஞயம்படவுரை

ஞயம் - நியாயம், பட- இதயத்திலூன்றும்படி உரை - சொல்வா யென்பதாம்,

நீர் ஓதும்படியான நீதிநெறியடைந்த வாக்கியங்கள் எதிரியின் உள்ளத்தில் பட்டு உணரும்படி உரைக்கவேண்டும் என்பது கருத்தாம்.