பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆதலின் செய்தொழிலை நாளுக்குநாள் சிறப்படையச் செய்யவேண்டுமேயன்றி ஒளித்துக் குன்றலாம் கரவேலென்று கூறியுள்ளாள்.

எடுத்த கருமத்தை சீர்பெற முடிக்கும் முயற்சியே சிறப்பைத்தரும். அங்ஙனமின்றி செய்தொழிலிற் சூதும், செய்தொழிலிற் களவும், செய்தொழிலில் வஞ்சமும் உண்டாயின், இழிதொழிலாற் சகலராலும், இகழ்ச்சியுண்டாம்.

பழமொழி விளக்கம்

இதுகரும மிதனாலே யதைமுடிப்ப தெனத்தொழிலை யெண்ணிச்செய்தால்
அதுகருமம் பாராமற் றிருடியுமள் ளியும் பிரட்டா யலைவதெல்லாம் மதியணிந்த தண்டலையார் வளநாட்டில் நீராடு மாதர்தங்கள் முதுகினைத் தேயெனச்சொன்னால் முலைமீது கையையிட்ட முறையீதாமே

ஆதலின் செய்தொழிலாம் கைவினையானது அறம், புகழ், நேயம், மூன்றிற்கும் ஆதாரமாயிருத்தல் வேண்டும்.

திரிக்குறள்

துணை நல மாக்கந் தருஉம் வினை நலம் / வேண்டிய வெல்லாந் தரும்

41. கொள்ளைவிரும்பேல்

கொள்ளை - பொருட் கொடுத்து கொள்ளாத பொருளை, விரும்பேல் - நீ ஆசை வையாதே என்பதாம்.

முதலீய்ந்து கொள்ளாதப் பொருளே கொள்ளை என்று கூறப்படும். அத்தகையாய கொள்ளை கொடுத்தோன் மனங் குமுறவும், தேகம் பதரவும், அவன்பொருளை விரும்புவதினால் விரும்பினோன் பொருளை அவனை அறியாது மற்றொருவன்கொள்ளைக் கொள்ளுவான் என்பது அநுபவமாதலின் அன்னியன் பொருளை அபகரிக்க விரும்பாதே என்பது கருத்தாம்.

வளையாபதி

பீடிற் செய்திகளாற் களவிற் பிறர் / வீடிற் பலபொருள் கொண்ட பயனென
கூடிக்காலொடு, கைகளைப் பற்றிவைத் / தோடிலின்றி யுலையக் குறைக்குமே

சீவகசிந்தாமணி

(பாடல் தெளிவில்லை)

42. கோதாட்டொழி

கோது - உன்னை குற்றத்திற் காளாக்கும், ஆட்டு - விளையாட்டை, ஒழி - எக்காலும் நீக்கிவிடும் என்பதாம்.

தன்னைத்தானே குற்றத்திற்கு ஆளாக்கிவிடும் விளையாட்டுகள் யாதெனில், கள்ளினைக் கூடி குடிக்குங் களிவிளையாட்டும், மற்றவன் பொருளை அபகரிக்க சுருங்கி விளையாடும் சூது விளையாட்டும், அடுத்த உறவோர்கள் முன்னிலும், அதிகாரிகள் முன்னிலும் குற்றவாளியாக ரூபிக்கும் ஆட்டத்தை விளையாடேல் என்று கூறியுள்ளாள்.

அறநெறி தீபம்

சூதுடனே கள்ளருந்துந் தொல்லை விளையாட்டகற்றி
ஆதுலர்க்கே யன்னமளித்தானந்தமாடுதலும்
தீதகற்றி யெஞ் ஞான்றுந் தேவனென போற்றுதலும்
போதி நிழல் வீற்றிருந்தோற் போதறத்தின் பயனாகும்.

43. சக்கரநெறிநில்

சக்கர - அறவாழியாம் தருமச்சக்கர, நெறி - ஒழுக்கத்தில், நில் - நிலைத்திருமென்பதாம்.

புத்தபிரான் அரச புத்திரனாகத் தோன்றி சத்திய தன்மத்தைப் போதித்த படியால் அதனைக் கோனெறி என்றும், அஃது சகலருக்கும் பொதுவாய தன்மமாதலின் அறநெறி என்றும் அவர் உலகமெங்கும் சுற்றி அறக்கதிராம் சத்திய தன்மத்தை விளக்கிய படியால் சக்கர நெறி என்றும் வழங்கி வந்தார்கள்.

மணிமேகலை

தருமச்சக்கரம் உருட்டினன் வருவோன்
அறக்கதிராழி திரப்பட வுருட்டிய காமற்கடந்த வாமன்பாதம்