பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பேசுதலும், மனமுற்றுச் சொல்லும் பொய்யாதலின் அப்பொய்யே மேலுமேலுந் திரண்டு உண்மெய்யை மறைத்து உலகபந்தத்திற் சிக்கி மாளா துன்பத்திற்கு ஆளாக்கிவிடும். ஆதலின் தான்சொல்லும் வார்த்தைகள் பொய்யென்று அறிந்தும் மனசாட்சி உண்டென்றும் அஞ்சாது அப்பொய்யையே மெய்போல் அலங்கரித்துப்பேசுதலிலும் வாய்மெய்க்கேடு வேறில்லை என்பதாம்.

ஈதன்றியும் ஔவையாகிய ஞானத்தாய் முக்காலமும் உணர்ந்தவளாதலின், வருங்காலத்தில் ஒளவையார் அவசரப்பூசை செய்ய அதையுணர்ந்த யானைமுகக் கல்விநாயகர் அவசரப்பூசை செய்ய வேண்டாமென்றுங் கூறி தனது துதிக்கையா லெடுத்து கயிலாயத்தில் விட்டுவிட்டா ரென்னுந் சித்திரவார்த்தையாம் கற்பனைக் கதையைக் கட்டிவிடுவார்கள். அத்தகைய பொய்யாகும் கட்டுக்கதைகளில் மெய்யுணராது மேலுமேலுந் துக்கத்திற்கு ஆளாவர் என்றுணர்ந்த ஞானத்தாய் சித்திரம் பேசேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

காக்கை பாடியம்

முத்திர மாய்ந்த மூதறிவாளர் / குத்திரமிய்யுங் கோடுரையாது சித்திரங்கூறி சீரழியார்க / ளெத்திரத்தாலு மெய்துவர் வீடே.

46. சீர்மெய் மறவேல்

மெய் - தேகத்தை, சீர் - சுத்தி செய்யும் விஷயத்தில், மறவேல் - ஒருக்காலும் மறவாதே யென்பதாம்.

சீர்மெய் என்பதின் இலக்கணம் மெய் சீராதலின் புறமெய்ச் சீராம் தேகச் சுத்திகரிப்பால் தெளி நிலையும் விவேக விருத்தியுமுண்டாவதன்றி இதயசுத்தத்திற்கும் ஏதுவுண்டாம். அத்தகைய இதயசுத்தத்திலேயே சகல சுகமும் விளங்குகிறபடியால் அவற்றிற்கு மூலகாரணமாம் புறமெய்ச்சீரென்னும் சீர்மெயாதலின் தேக சுத்தத்தை திடம்பெறக் கூறியுள்ளாள்.

பிரிட்டிஷ் ஆட்சியோராய் நமது தேசத்தை அரசாண்டுவரும் ஆங்கிலேயர்கள் வெண்மெய் நிறத்தால் சுத்த தேகிகளாகவும் எக்காலுந் தங்கள் தேகத்தை சுத்திகரிப்பவர்களாகவும் சுத்த உடையை உடையவர்களாகவுந் தோன்றியபடியால், அவர்களை சீர்மெய்யர், சீர்மெயோரென்று இத்தேசத்தோர் வழங்கிவந்த வார்த்தையைக் கொண்டு இவர்கள் காணாத வைரோப்பா தேசத்திற்கு சீர்மெய் என்னும் பெயர் வாய்த்திருப்பதை தேக சுத்த தோற்றமாம் சீர்மெயென்றே தெளிந்து கொள்ளலாம்.

அருங்கலைச் செப்பு - உள்ளொளி பத்து

சீர்மெயதாகி சுகங்கெடா சுத்தத்தாற் / றூய்மெயதா
முன்னொளி.
காய்மெயிலுற்றக் களங்கமறநீக்கில் / வாய்மெயாம் வள்ளலொளி. மெய்மெயாலாற்ற லுடையார் தமக்கு / பொய்யகன்றேற்றுமொளி.

47. சுளிக்கச்சொல்லேல்

சுளிக்க - வொலிக்கும் வார்த்தை பிறருக்குப் புலப்படாமல், சொல்லேல் - பேசாதே யென்பதாம்.

அதாவது பேசும்வார்த்தைகளை சுழித்து சுழித்து உள்ளுக்கொன்றும் வெளிக்கொன்றுமாக பேசுதலினும் பேசாதிருப்பது சுகமாதலின் பேசும் வார்த்தைகளை பூர்த்தியாக வெளியிடாது உள்ளுக்கே சுளித்துப் பேசலாகா தென்பது கருத்தாம்.

முகசுளிப்பால் வாக்குச்சுளிப்பும் வாக்குச்சுளிப்பால் அகச்சுளிப்பாம் வஞ்சநெஞ்சத்தின் நஞ்சு விளங்குகிறபடியால் அந்நஞ்சின் விஷமீறி இதய கோசத்தைக் கெடுப்பதுமன்றி தேகமும் பாழடைவதற்கு சுளிப்பே ஓர் மூலமாதலின் வஞ்சத்தை நெஞ்சிலூன்றி சுளிக்கச் சொல்லேலென்பது உட்கருத்தாம்.

48. சூது விரும்பேல்

சூது - ஒருவரை வஞ்சித்தும் குடிகெடுத்தும் தானுங் கெடுங் கரவடைச் செயலை, விரும்பேல் - நீ யெப்போதும் ஆசை வையாதே என்பதாம்.