பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 487

ஓர் சபையில் எழுந்து பேசுவதற்குத்தக்கவன், ஓர் சுபகாரியாதிகளை முடிப்பதற்குக் தக்கவன், நீதிநெறிகளைப் போதிப்பதற்குத் தக்கவன், நடுநிலையிலும், நியாயவாயலிலும் பேசுவதற்குத் தக்கவன், எடுத்தகாரியங்களை எவ்விதத்திலும் முடிக்கத்தக்கவனென்று பலருஞ் சொல்லும்படியாக வீற்றிருப்பானாயின் அவனைக்கொண்டே சகல சீர்திருத்தங்களை முடித்துக் கொள்வதுடன் மற்றவர்களும் தக்கவனென்றுமேறை நடந்து சுகம் பெறுவார்கள்.

திரிக்குறள்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் / செற்றார் செயக்கிடந்த தில்.

55. தானமது விரும்பு

தானம் - யீகையாம், அது - அச்செயலை, விரும்பு - நீ ஆசைக்கொள்ளு.

அன்புமிகுத்தோரிடத்து ஈகை மிகுத்து இருப்பது இயல்பாதலின், ஈகையிருக்கும் இதக்கத்தால் எல்லா சுகமுந் தோன்றுமென்பது துணிபு.

இத்தகைய தானத்துள் உத்தமதானமென்றும், மத்திம தானமென்றும், அதம தானமென்றும் மூவகைப்படும்.

இவற்றுள் உத்தம தானமாவது மெய்ப்பொருளை விரும்பும் மேன்மக்களாகவும், முக்குற்றங்களை அகற்றும் மூதறிவாளராகவும் விளங்குவோரைக் கண்டு அவர்கள் எடுத்துள்ள முயற்சியை முடிக்கத்தக்க உதவியாம் தானஞ்செய்துவருதலே உத்தமதான மென்னப்படும்.

முன்கலைதிவாகரம்

அறத்தினாற்றியவரும் பெரும்பொருளை / புறத்துறைக்குற்ற மூன்றறுத்த நற்றவற்கு
கொள்கெனப் பணிந்து குறையிரந்தவர்வயி / னுள்ள முவந்தீவ துத்தம தாநம்.

திக்கற்று மிக்க மெலிந்த ஏழைகளுக்கும், குருடர்களுக்கும், ஊமெகளுக்கும், தொழில் செய்ய சக்தியற்ற அங்கவீனருக்கும், செவிடர் களுக்கும் ஈவது மத்திமதான மென்னப்படும்.

ஆதுலர்க்கந்தகரூம ருறுப்பிலிகள் / செவிடர்க்கீவது மத்திமதாநம்.

சகலருமறியக் கூச்சலிட்டளிப்பதும், கீர்த்தியாம் புகழ் வேண்டுமென் றளிப்பதும், நம்மெய் லோபி என்று சொல்லுவார்களென பயந்தளிப்பதும், ஒருபலனைக் கருதியளிப்பதும், பிரபுவென்று பலர் சொல்லும்படி அளிப்பதும், பார்ப்போர் மெச்சும்படி அளிப்பதும், ஒருவர் கேட்டுக்கொண்டதின் பேரிலளிப்பதும் அதமதானமென்று கூறப்படும்.

ஆர்வம், புகழே, யச்சங், கைம்மாறு, காரணங், கண்ணோட்டம்,
கடப்பாடென்றி வை ஏழுங் கடைபடு வதமதாநம்.

இத்தகைய மூவகை தானத்தில் உலக சீர்திருத்தத்திற்கும், மக்கள் சீர்திருத்தத்திற்கும் ஆதியாக விளங்கி புலன் தென்படநோக்கும் தென்புலத்தோராகும் சமணமுநிவர்களுக்கு ஈவதே உத்தமதானமாதலின் அதன் சாதனங்களா லுணர்ந்த ஒளவையும் தானமது விரும்பு என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

திரிக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கறா னென்றாங் / கைம்புலத்தா றோம் பறலை.

இஸ்காந்தம்

துறந்தவர்கள் வேண்டியதோர் துப்புரவுநல்கி / யிறந்தவர்கள் காமுறு மிருகங்கடனியற்றி
அறம்பலவுமாற்றி விருந்தோம்புமுறையல்லாற் / பிறந்தநெறியா லுளதோர் பேருதவி யாதோ.

56. திருமாலுக் கடிமைசெய்

திரு - மனுமக்களுட் சிறந்த, மால் - புத்தபிரானின், அடிமை - பாத தூளி யென்றிரஞ்சி, செய் - துதிசெய்யுமென்பதாம். தன்மச்சக்கரப் பிரவர்த்தன் என உலகெங்கும் வட்டமிட்டு அறவாழியை உருட்டியது கொண்டு மால் என்னும் பெயர்பெற்ற புத்தபிரானின் பாததூளியென்றெண்ணி சங்கத்தோர் களையே சங்கறனெனப் பாவித்து சங்க தருமத்தையே சிந்தித்து பற்றறுக்க