பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 493


அழியும் நிலையைப்பற்றி நிற்பது அழுகைக்கும் பற்கடிப்பிற்கும் ஆதாரமாதலின், அத்தகைய துக்கத்தை யகற்றுவான் வேண்டி அழியா நிலையாம் உள்விழிநோக்க நிலையிற் பிரியேலென்று கூறியுள்ளாள்.

68. நீர்விளை யாடேல்

நீர் விளையாட்டு - பங்குனி பருவ நீர் விளையாட்டை, ஆடேல் - நீ விளையாடாதே யென்பதாம்.

அதாவது பூர்வ காலத்தில் சித்தார்த்தியார் காமனையுங் காலனையும் வென்ற பங்குனிமாத பருவத்தில் பௌத்தவரசர்களும், குடிகளும் ஒன்றுகூடி பெண்களும் புருடரும் நீர்விளையாடுவதும் காமன் பண்டிகைக் கொண்டாடுவதும் வழக்கமாகும்.

அத்தகைய விளையாட்டினால் மதிமயங்கி பெண்களின் கற்பு நிலை தவறுதலும், புருஷர்கள் பஞ்சவிரதங் கெடுதலுமாகிய நீர் விளையாட்டை சத்திய சங்கத்தோர் தடுத்துள்ளது மன்றி அம்மனும் அவ்விளையாட்டைக் கண்டித்திருக்கின்றாள்.

அது கண்டே சருவதேச பௌத்தர்களும் நீர்விளையாட்டை நீக்கிவிட்ட போதினும் மார்வாடிகளும் குஜிராத்தியர் மட்டிலும் பெண்களை நீக்கி புருஷர்கள் அந்நீர் விளையாட்டை நாளது வரையில் விளையாடி வருகின்றார்கள். பூர்வம் புருஷர்களும் பெண்களும் அந்நீர் விளையாடுவதனால் உண்டாகுங் கேடுகளை யுணர்ந்த ஞானத்தாய் நீர்விளையாடேலென்று காமன் விழாவையே கண்டித்திருக்கின்றாள்.

சீவகசிந்தாமணி

காசறு துறவின் மக்க கடவுளர் சிந்தைபோல / மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயனமுன்னி
யாசற நடக்குநாளு மைங்கணைக் கிழவன்வைகி / பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனி பருவஞ் செய்தான்.

முழவங்கண் டுயிலாத முதுநகர் / விழவுநீர் விளையாட்டு விருப்பினாற்
றொழுவிற் றோன்றிய தோமரு கேவலக் / கிழவன் முதெயில் போற்கிளர்வுற்றதே.

இன்று நீர் விளையாட்டினு ளேந்திழை / தொன்று சுன்னத்திற் றோன்றிய வேறுபா
டின்றென் னாவிக்கோர் கூற்றமென்மெயா / நின்று நீலக்கணித்திலஞ் சிந்தினாள்.

சீராவச் சிலம்பேந்து மென்சீரடி / யாராவக் கழலாட வரோடும்
பேராவக் களம்போன்று பொன்றார்புன / னீராவும்
விளைத்தார் நிகரில்லார்.

கார்விளையாடிய மின்னனை யார்கதிர் / வார்விளையாடிய மென்முலை மைந்தர்
தார்விளையாட்டொடு தங்குபு பொங்கிய / நீர்விளையாட்டணி நின்றதை யன்றே.

69. நுண்மெய் நழுவேல்

நுண் - நுட்பத்திலறியும் விவேகமிகுத்த, மெய் - தேகியெனத் தோன்றி, நழுவேல் - அதினின்று கேடடையாதே என்பதாம்.

நுட்பத்தில் அறிந்து கொள்ளக்கூடிய விவேகமும் நுண்ணிதில் ஆய்ந்து உணரக்கூடிய விசாரணை மிகுதியிலிருந்து நழுவி விவேகமற்றோன், விசாரணை யற்றோன் என்பதாயின் முன்தேக தோற்ற சிறப்புக் கெடும். ஆதலின் நுண்ணிய அறிவை மேலும் மேலும் விருத்தி செய்ய வேண்டுமேயன்றி அவற்றினின்று நழுவேல் என்பது கருத்தாம்.

இவற்றுள் தற்காலம் அச்சிட்டுள்ளப் புத்தகங்களில் நுண்மை நுகரேல் எனும் வாசக பாடபேதமும் ம-அ-அ-ஸ்ரீ மார்க்கலிங்க பண்டாரமவர்கள் ஏட்டுப்பிரிதியிலும் ம-அ-அ-ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளை மாணாக்கர் கோவிந்தப்பிள்ளையவர்கள் ஏட்டுப்பிரிதியிலும் (நுண்மெய் நழுவேல்) எனும் வாசகபாடபேதமும் உள்ள துகண்டு உசாவுங்கால் நுண்மைநுகரேல் எனும் வாசகஞ் சிதைந்துள்ளதன்றி சகல தேச மக்களுக்கும் பொருந்தா பொருளுள்ளதால் நுண்மெய் நழுவேல் எனும் சகல மக்களுக்கும் பொருந்தும் வாசகத்தை வெளியிட்டுள்ளோம்.

அதாவது உலகெங்குமுள்ள மக்கள் சிறுதிண்டியே பெரும்பாலும் உண்பது சுவாபமாகும். நமது தென்னிந்தியவாசிகளோ துட்டை யிருகப்பிடித்துக்கொண்டு பெருந்திண்டியும் சரிவரப் புசியாமல் சோமவார