பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494 / அயோத்திதாசர் சிந்தனைகள்

விரதம், மங்களவார விரதம், சுக்கிரவாரவிரதம், சனிவாரவிரதமென ஒடுக்குவது இவர்கள் சுவாபமாகும்.

ஆதலின் சகலமக்களுக்கும் பொதுவாய் ஓதியுள்ள சத்தியதன்மத்தை பணஞ் சம்பாதிக்க வித்தையற்றவர்களும், புசிக்கப் பணச்சிலவு செய்ய மனம்வராதவர்களுமாகி சிலரது கருத்துக்கு இசைந்து பலருக்குள்ளப் பெரும்பலனைக்கெடுப்பது பாழ்வினைமுதலெனக் கண்டு நுண்மெய் நழுவேல் என்னும் சகல மக்கள் சுகத்தையே இவண் நோக்கிக் கூறியுள்ளோம்.

70. நூற்கலை கல்

நூற்கலை - அறிவை வளர்க்குங் கலை நூற்களை, கல் - நீ வாசிக்கக் கடவாய் என்பதாம்.

அதாவது காம, வெகுளி, மயக்கங்களைப் பெருக்கக்கூடிய பலவகை நூற்க ளிருக்கின்றபடியால் அவற்றை கண்ணோக்காமலும், கற்காமலும் அறிவை விருத்தி செய்யக்கூடியக் கலைநூற்களையே கற்கவேண்டுமென்பது கருத்தாம்.

காக்கைபாடியம்

பலநூல் கற்றுப் பாழடைவதினுங் / கலைநூற் கற்று காட்சி வடிவாஞ்
சிலைநுதற் காம சேட்டை யகற்றி / யுலகமவர்மாட் டென்னலு முவப்பே.

கலை நூற்கள் என்பவற்றுள் அறுபத்தி நான்குவகைகளுண்டு. அதாவது அட்சர லட்சணங்களையும், மொழிலட்சணங்களையும் விளக்கும் முன்கலை நூலாகும் திவாகரம், இலிகிதத்திற்கு ஆதரவாகும் வாசகங்களும், அதனதன் பொருட்களையும் விளக்கும் பின்கலை நூலாகும் நிகண்டு, கணிதம், ஆகமம், வியாகரணம், நீதிசாஸ்திரம், சோதிடம், தன்மசாஸ்திரம், விருத்தி சாஸ்திரம் மதியூக சாஸ்திரம், ஆருடசாஸ்திரம் சிற்பா சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், சாமுத்திரிகள் சாஸ்திரம், ரூபசாஸ்திரம், இதிகாசம், காவியம், மதுரபாடனம், அலங்காரம், நாடகம், நிருத்தம், சப்தபிரமம், சிரோரத்னம், வீணை, மிருதங்கம், தாளம், தனுர்வித்தை, சுவர்ண பரீட்சை, ரதபரீட்சை, கஜபரிட்சை, அஸ்வபரீட்சை, ரத்தினபரிட்சை, பூபரிட்சை, யுத்தலட்சணம், மல்லயுத்தம், ஆக்ருஷணம், உச்சாடனம், வித்துவேஷணம், மானத சாஸ்திரம், மோகன விளக்கம், வசீகரணம், ரசவாதம், காந்தர்வவாதம், பிபீலிகாவாதம், கௌதுவவாதம், தாதுவாதம், காரூடம், நஷ்டப் பிரசனம், முஷ்டிப் பிரசனம், ஆகாயப்பிரவேசம், ஆகாயகமனம், பிரகாயப்பிரவேசம், அநுர்ஷியம், இந்திரஜாலம், மகேந்திரஜாலம், அக்கினிஸ்தம்பம், ஜலஸ்தம்பம், வாயுஸ்தம்பம், திருட்டிஸ்தம்பம், வாக்குஸ்தம்பம், சுக்கிலஸ்தம்பம், ஜநநஸ்தம்பம், கடகஸ்தம்பம், அவஸ்தைஸ்தம்பம் என்பவைகளாம்.

தற்காலம் அச்சிட்டுள்ள புத்தகங்களில் நூற்பலகல் என்றிருந்தபோதினும் புராதன ஏட்டுப்பிரிதிகளில் நூற்கலை கல்லென்று வரைந்திருக்கின்றார்கள். அதாவது “கண்டு படிப்பதே படிப்பு மற்றபடிப்பெல்லாம் தெண்டப்படிப் பென்றறி” எனக்கூறியுள்ளக் கலை நூலார் கருத்தை ஒட்டியதேயாகும்.

71. நெற்பயிர் விளை

நெற்பயிர் - நெல்லென்னுந் தானியத்தை, விளை - நீ உழுது பயிரிடு என்பதாம்.

அதாவது சகலசீவருக்கும் உணவாகவிளங்கும் தானியம் நெல்லாதலின் அவற்றை வேணமுயற்சிசெய்து விளைவிக்கவேண்டுமென்பது கருத்தாம்.

பௌத்தன்ம மக்கள் யாவரும் தங்கள் சுயப்பிரயோசனத்தை மிக்கக் கருதாது பலர் பிரயோசனத்தையே மிகக் கருதுவதாதலின் சகலசீவர்களுக்கும் பிரயோசனமாகும் நெற்பயிரை விளைக்கும்படி வற்புறுத்திக்கூறியுள்ளாள்.

அத்தகைய நெற்பயிரை விளைக்குமாறு வற்புறுத்திக் கூறியக் காரணம் யாதென்பீரேல், தற்காலம் இத்தேசத்தில் 10-படி, 12-படி அரிசி விற்பனை செய்தவிடத்தில் 4-படியரிசி விற்குங்கால் மழைபெய்தும் சகலருக்கும் உபயோகமாகும் நெற்பயிரை விளைவிக்காது தங்கள் சுயப்பிரயோசனத் திற்காகும் மணிலாக் கொட்டையென்னும் நிலக்கடலையை விளைவித்துக் கொண்டார்கள்.