பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516 / அயோத்திதாசர் சிந்தனைகள்


42. தூற்றும் பெண்டீர் கூற்றெனத் தகும்

தூற்றும் - மனை விவகாரங்களை வெளியில் தூற்றித்திரியும், பெண்டீர் - பெண்களை, கூற்றென - நசிக்குங்காலனெனத், தகும் - சொல்லுதற் கேதுவுண்டா மென்பதாம்.

அதாவது தனது மாமன் மாமியார் வார்த்தைகளையும், மாதுலன் மாதுலி வார்த்தைகளையும், கணவன் வார்த்தைகளையுந் தான் செல்லுமிடங்களுக் கெல்லாம் சொல்லித் திரிபவள் தனது குடும்பத்தை அழிக்குங் கூற்றனுக்கு ஒப்பாவாளென்பது கருத்து.

தன்வீட்டின் நெருப்பாங் கலக வார்த்தைகளை வெளியிற் கொண்டு போகாதவளும், வெளி நெருப்பாங் கலகவார்த்தைகளை உள்ளுக்குக் கொண்டு வராதவளுமே கற்புக் கினியவளென்பது கலை நூற்களின் துணிபாதலின் மனை வாழ்க்கை மொழிகளை பதரைப்போல் தூற்றித் திரிபவள் அக்குடிக்கே காலனாவாளென்று உணர்ந்த ஞானத்தாய் தூற்றும் பெண்டீர் கெடுதியை விளக்கியுள்ளாள்.

43. தெய்வஞ்சீறிற் கைதவமாளும்

தெய்வம் - தெய்வகமாம் உள்ளதை சீறில் - சீற்றமுறில், கைதவம் - உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டுள்ள வொழுக்க சுகமானது, மாளும் - மாய்ந்துபோ மென்பதாம்.

அதாவது, ஒவ்வோர் மக்களுக்குமுள்ள காமாக்கினி, கோபாக்கினி, பசியாக்கினியாந் தேய்வினிலைமீறி சீறிநிற்குமாயின் செய்தவமும் அழிந்து தேகமாளும். அங்ஙனமின்றி திரிபுராந்த தணலாய்த் தேய்வென்னும் நிலையுள்ள காமாக்கினி, பசியாக்கினி, கோபாக்கினி என்னுங் குன்றின் மீதேறி சாந்தமென்னும் நீராலவித்து தண்மெயாம் குளிர்ந்த தேகியாய் விளங்கவேண்டுமென்பதே சற்குருவின் போதமாதலின் அவற்றைப் பின்பற்றியுள்ள ஞானத்தாய் அகத்துள்ளனவனலை அதிகரிக்கச் செய்யாதேயுங்களென்று கூறியுள்ளாள்.

தேய்வனலாகுந் திரிபுராந்தக ஸ்வயம்பிரகாச சாந்தரூபியானோர் தேய்வன லகன்ற காரணங்கொண்டு தேவர் தேவர்களென்னும் பெயரைப்பெற்றார்கள்.

விவேகசிந்தாமணி - சாந்தபலன்

ஆசாரஞ் செய்வாராகி லறிவொடு புகழுமுண்டாம்
ஆசார னன்மெயானாலவனியிற் றேவராவர்.

44. தேடாதழிக்கிற் பாடாமுடியும்

தேடாது - ஓர் பொருளை தானே கஷ்டப்பட்டு சேகரிக்காது, அழிக்கில் - விரயஞ்செய்யில், பாடாய் - பாழாக, முடியும் - தீருமென்பதாம்.

ஒருவன் தேகத்தை வருத்தி ஓர் பொருளைச் சேகரிக்காது தனது முன்னோர் சேகரித்து வைத்திருந்த பொருளை கஷ்டமின்றி அழிப்பானாயின் மறுபடியும் அப்பொருளை சேகரிக்க வழிதெரியாமலும், சோம்பலினாலும், பாழடைந்து போவான். ஆதலின் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும்பொருளே விசேஷமென்று விளக்குவான் வேண்டி தனது முன்னோர்களால் தேடி உள்ள பொருள் தன்னாலுந் தேடி சேகரிக்கும் வழிதெரிந்தபின் அவற்றை சிலவழிக்க முயல்வானாயின் அஃது பாழகாது விருத்திபெற்றுவரும். அதனை சேகரிக்கும் வழி தெரியாது அழிப்பானாயின் பொருள் பாழாகி ஒழிவதுடன் உடையவனும் பாழாகி முடிவானென்பது கருத்து.

45. தைமாசியும் வைத்தியர்க்குழவு

தையும் - தைமாதமும், மாசியும் - மாசிமாதமும், வைத்தியர்களுக்கு மாமாத்திரர்களுக்கு, உழவு - பூமியை யுழுது பூமியின் நீராகும் பூநீரெடுக்குங்கால மென்பதாம்.

அதாவது, மாமாத்திரர்கள் ஆடி - ஆவணி மாதங்களில் சமுத்திர உப்பென்னுங் கடலுப்பையும், தை - மாசி மாதங்களில் பூமி உப்பென்னும் நாதத்தையுந் தோண்டி எடுப்பதற்கு முன் பனிகாலமாகும் தையிலும், மாசியிலும்