பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 519


53. நூன்முறைதெரிந்து சீலத்தொழுகு

நூல் - கலை நூலில், முறையை - வழியை, தெரிந்து - அறிந்து, சீலத்தில் நன்மார்க்கத்தில், ஒழுகு - நடவா யென்பதாம்.

உலகத்திலுள்ள மக்களில் சிற்சிலர் தங்கடங்கள் சுயப்பிரயோசனங் கருதி எங்கள் தேவனே தேவன். எங்கள் தேவனை நம்பினவர்களே நேரில் மோட்சம்போவார்கள். மற்றவர்கள் நரகம் புகுவார்களென்று சிறுகுழந்தை களுக்கு ஐந்துக்கண்ணன் பயங்காட்டுவதுபோல் பேதைமக்களை வஞ்சித்து பொருள் பறிப்பான்வேண்டி வரைந்துள்ள பொய் நூற்களும் அனந்தமுண்டு. அத்தகைய நூற்களை நன்காராய்ந்து பொய்யகற்றலே நூன்முறை தெரிதலாகும்.

அங்ஙனமாய பொய்யகற்றி அநுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்திய மெய் காணவேண்டியவர்கள் ஆதிதேவனாம் புத்தபிரானால் கண்டருளிய முதநூலும், அதையடுத்த சார்பு நூற்களுமே சீலத்திற்கும், ஒழுக்கத்திற்கும் ஆதாரமாகும். ஆதலின் பேதைமக்கள் பல நூற்களையும் நம்பி பாழடையாது நூன்முறை தெரிந்தொழுகவேண்டுமென்பது அம்மன் கருத்தாம்,

அருங்கலைச்செப்பு

என்று முண்டாகி யிறையால் வெளிப்பட்டு / நின்றது நூலென்றுணர்.

நன்னூல்

வினையினீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும்.
 
மனக்கோட்டம்நீக்கி துக்கநிவர்த்திசெய்வ / தெதுவோ அதுவே நூலென்னப்படும்.

உரத்தின் வளம்பெருக்கி யுள்ளியதீமெய்ப் / புரத்தின் வளமுருக்கிப்பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந்தீர்க்கு நூலஃதேபோன்மாந்தர் / மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு.

சீவகசிந்தாமணி

காமனன்னதோர் கழிவனபறிவொடு பெறினு / நாமனாற்கதி நவைவரு நெறிபல வொருவி
வாமனூனெறி வழுவறத் தழுவின ரொழுக / லேமவெண்குடை யிறைவமற்றியாவது மரிதே

திரிக்குறள்

நூலாருணூல்வல்ல னாகுதல் வேலாருள் / வென்றி வினையுரைப்பான் பண்பு.

54. நெஞ்சை யொளித்திரு வஞ்சகமில்லை.

நெஞ்சை - மனதை, ஒளித்து - அடக்கி, இரு - இருப்பாயாயின், வஞ்சகம் - உள்ள கடுஞ்சினம், இல்லை - அகன்றுபோமென்பதாம்.

தன்மனமாகிய நெஞ்சமே தனக்கு சான்றாதலின் அதிற்றோன்றும் வஞ்சினம், பொறாமெய், சூது, முதலியவற்றை அகற்றி நெஞ்சை நன்மார்க்கத்தி னூடே ஒளிப்பானாயின் அவனுக்கு துக்கமென்பது எக்காலு மில்லையாகும். அங்ஙனமின்றி நெஞ்சை ஒளித்தவர் போல் துறந்தோரென வேஷ மிட்டு பேதைகளை வஞ்சித்து பொருள் பறித்துண்பாருமுண்டு. அத்த கைய வஞ்சிக்கும் வாழ்க்கைபெறாது நெஞ்சை ஒளித்திருப்பதே நலமென்று கூறியுள்ளாள்.

திரிக்குறள்

நெஞ்சிற்றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து / வாழ்வாரின் வன்கணா ரில்,

55. நேரா நோன்பு சீராகாது

நேரா - தனக்குக் கூடிவரா, நோன்பு - கொல்லாமெய், சீராகாது - தனக்கு சுகங்கொடா தென்பதாம்.

அதாவது கொல்லா விரதமென்னும் நோன்பை நோற்பவன் மற்றொருவன் கொன்ற மாமிஷத்தைத் தின்பானாயின் தானோற்கும் நோன்பிற்கு நேராகா தென்பது கருத்து. மாமிஷம் தின்போன் இல்லாவிடின் கொல்வோன் அதிகரிக்கான்.

திரிக்குறள்

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின்யாரும் / விலைப்பொருட்டா லூன்றரூவாரில்.