பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524 / அயோத்திதாசர் சிந்தனைகள்

71. மாரி யல்லது காரிய மில்லை

மாரி - மழை, அல்லது - இல்லாமற்போமாயின், காரியம் - எடுக்குந் தொழில் யாவும், இல்லை - நடப்ப தரிதாகு மென்பதாம்.

உலகத்தில் மழைப் பெய்யாமற் போமாயின் சகலகாரியங்களுக்கும் ஆனியுண்டாய் பஞ்சம் அதிகரித்துப் பாழாம் என்பது கருத்து.

72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை

மின்னுக்கெல்லாம் - வானில் மின்னல் தோன்றுவதின் சாட்சி, பின்னுக்கு மழை - பிற்காலத்துக்குத் தகுந்த மழைப்பெய்யுமென்பதாம்.

வானில் மின்னல் மீருங்கால் ஆழிநீரையுண்டு ஆகாய கருப்பங் கொள்ளுவது அனுபவமாதலின் மின்னல் சாட்சியைக்கொண்டு மழையுண்டென்பதை உணர்ந்து உழுதுண்போர் விளைக்க விளக்கியுள்ளாள்.

73. மீகாமனில்லா மரக்கல மோடாது

மீகாமன் - வோடசூஸ்திரன், இல்லாமல் - இல்லாமற்போவானாயின், மரக்கலம் - ஓடம், வோடாது - நீரிலோட்டுவது அரிதாகும் என்பதாம்.

ஓடத்தையோட்டும் சூஸ்திரனாகும் மீகாமனில்லாவிடில் மரக்கலத்தை நீரில் ஓடச்செய்வது கஷ்டமாகும். அதுகொண்டே “மாலுமியில்லா மரக்கலமேறலாகா” தென்பதும் முதுமொழி.

மீகாமன், மாலுமி, ஓடசூத்திரன், சுக்கானனென்னும் நான்கு தொழிற்பெயரும் நீரின் வேகமும் காற்றின்வேகமுமறிந்து ஓடத்தை ஓட்டுவோன் பெயராகும்.

74. முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் - காலையில், செய்யின் - செய்யும் வினையின் பயனானது, பிற்பகல் - மாலைக்குள், விளையும் - வெளிவருமென்பதாம்.

யாவருக்குந் தெரியாதென்னும் ஓர் காரியத்தை மறைந்து செய்தபோதினும் அக்காரியம் தன்னிற்றானே வெளிவருமென்பது கருத்து.

75. மூர்த்தோர் சொல் வார்த்தை யமிர்தம்

மூர்த்தோர் - விவேகமுதிர்ந்தோர், சொல் - வாக்கியமானது, வார்த்தை - சொற் சுவையாம், அமிர்தம் - நீதிபோத மென்னப்படும்.

விவேகமிகுத்தோர் போதிக்கும் நீதிவாக்கியங்களை செவியிற் கேட்டு அதன்மேறை நடப்பவன் எவனோ அவன் சகல துக்கங்களையும் போக்கி சுகநிலை அடைபவனாதலின் மூர்த்தோர் வாக்கியமாம் அமுதுண்டோன் என்பது கருத்து.

ஓடதியென்னும் அவுடதம் உண்பதால் பிணி நீங்கி ஆரோக்கிய மடைவதுபோல் மூர்த்தோர் வாக்கியமென்னும் அமுதால் துக்கம் நீங்கி சுகமடைவதே காட்சியின் இனிதென்னப்படும்.

76. மெத்தெனப்படுத்தல் நித்திறைக்கழகு

மெத்தென - மெல்லிய பஞ்சணையில், படுத்தல் - சயனித்தல், நித்திறைக்கு - தூங்குகைக்கு, அழகு - சுக மென்னப்படும்.

மிருதுவாகியப் பஞ்சுமெத்தையின் மீது படுத்தல் சுகமான நித்திறைக்கேது உண்டாமென்று விளக்கியுள்ளாள்.

77. மேழிச்செல்வங் கோழைப்படாது

மேழி - ஏறு பிடித்து உழுதுண்பவனின், செல்வம் - திரவியமானது, கோழைப்படாது - குறைவுபடாது என்பதாம்.

அதாவது ஏறுபிடித்து உழுதுண்ணும் உழைப்பாளி யானவன் எத்தொழிலையும் அஞ்சாது செய்யும் தைரியமுடையவனாதலின் அவன் கஷ்டமாகியத் தொழில்களில் எவற்றையேனுஞ் செய்து சம்பாதித்து தனது திரவியங் குறையாது நிறப்புவான் என்பது கருத்து.