பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 / அயோத்திதாசர் சிந்தனைகள்


93 வருடங்களுக்கு முன்பு பிராமணரென்று சொல்லிக்கொள்வோர்களுக்கும் கம்மாளர் என்று அழைக்கப்படுவோர்களுக்கும் ஓர் பெருத்த கலகம் நேரிட்டது.

அதாவது பிராமணர்களென்போர் சகலசாதியோர்களுக்குங் குருக்களென்றும் சதுர்முகப்பிரமா முகத்திலிருந்து வந்தவர்களானபடியால் நாங்களே சகலசாதியோர்களுக்கும் மேலான சாதிகள் என்றும் சகலருக்குள்ள தன்ம கன்மங்களையும் தாங்களே செய்யவேண்டியவர்கள் என்றும் கல்வியற்றவர்களை வஞ்சித்து சீவிக்குங்கால் கம்மாளருக்குள் சில விவேகிகள் தோன்றி தாங்கள் பஞ்ச முகப் பிரம்மாவால் பிறந்தவர்களென்றும் தாங்களே சகலருக்கும் தன்மகன்மங்களைச் செய்யவேண்டிய குருக்கள் என்றும் கூறி (நான் முகப் பிரம்மா கரடி முன்னிலையில், ஐந்து முகப்பிரம்மா கரடியை விட்டார்கள்) அதனால் பொய்யுடன் பொய் மோதிக்கொண்டு பெருங்கலகமுண்டாகி அடிதடில் நேரிட்டு கம்மாளர்களால் அடிப்பட்ட பிராமணர்களென்போர் தங்களுக்கு உதவிக்காக பறையர்கள் என்போர்களைச் சேர்த்துக் கொண்டு இடங்கையர் வலங்கையர் என்னும் இரு வகுப்புக்களை உண்டு செய்து கம்மாளர்களை இடங்கையரென்றுகூறி தங்களுடன் சேர்த்துக்கொண்டதுமன்றி,

- 1:20; அக்டோபர் 30, 1907 –

தாங்கள் செய்துக்கொண்டுவருந் தந்திரசீவனத்தை கம்மாளர்கள் என்போர் பற்றிக்கொள்ளுவதை உணர்ந்து அவர்களைத் தாழ்த்துவதற்காய் இடங்கையராக்கி சிவசமயத்தோர் கூட்டங்களில் பலசாதிகளிலும் ஒவ்வொருவர்களை நாயனார்மார்களிற் சேர்த்துக் கொண்டு கம்மாளர் என்போர்களை நீக்கியும் தங்களுக்கு அடங்கியக் கால் சேர்த்துக் கொள்ளுவதற்கும் சாதிப்பெயரில்லா நாயன்மார்களையுஞ் சேர்த்துக் கொண்டார்கள்.

அதுபோலவே விஷ்ணு சமயத்தோர்களும் தங்கள் பன்னிரண்டு ஆழ்வார்களுக்குள்ளும் சேர்த்துக் கொண்டார்கள்.

பறையர்கள் என்போர் பிராமணர்கள் என்போர்களுக்கு புத்தமார்க்கப் பூர்வ விரோதிகளாய் இருந்தபோதிலும் பூர்வ நிலைகுலைந்து ஆயிரத்தி ஐன்னூறு வருடம் கடந்துவிட்டபடியால் சற்குருவின் தியானத்தையும் பூர்வ தன்மங்களையும் மறந்து தாயைப் பறிகொடுத்தப்பிள்ளைகளைப்போல் திகைத்து நின்றவர்களாதலின் பிராமணர்கள் என்போர் போதனையிற்சிக்கி கம்மாளர்கள் என்போரை எதிர்த்துப் போர் செய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் பிராமணன் என்போருடன் இருந்த விரோதம் போதாமல் கம்மாளர் என்போர் விரோதத்தையுஞ் சேர்த்துக் கொண்டு பறையர்கள் என்னும் பெயரையுந் தாழ்வையும் அதிகரிக்கச் செய்துக் கொண்டார்கள்.

இத்தியாதி தாழ்வுகளுக்கும் காரணம் கல்விக் குறைவும், செல்வக் குறைவும், விசாரிணைக் குறைவும், சற்சங்க சாவகாசக் குறைவுமேயாம்.

ஓர் விவேகியைப் பத்துபெயர்க் கூடிக்கொண்டு இவன் நீச்சன், கேவலன், தாழ்ந்தசாதி என்று புறக்கணித்துவருவார்களாயின் நாணமுற்று சீர்கெட்டு நாளுக்குநாள் நலிந்து விவேக மயங்கி நிலைகுலைந்துவிடுவான்.

ஓர் யாசகனைப் பத்துப்பெயர்க்கூடி இவன் பெரியோன், விவேக மிகுத்தவன், உயர்ந்த சாதியான், சகலமுந் தெரிந்தவன் என்று உயர்த்திக்கொண்டே வருவார்களாயின் நாளுக்குநாள் உயர்ந்து விவேகமிகுத்து நாகரீகமுற்று சகல சுகமும் பெற்று வாழ்வான்.

அதுபோல் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்து சோதிடம், வைத்தியம், ஞானம் என்னும் முக்கலைகளுக்கும் குருபீடங்களாக விளங்கிய மேன்மக்களைப் பெருங்கூட்டத்தார் சேர்ந்துக்கொண்டு பறையர் பறையர் என்று தாழ்த்தி சுத்தசலங்களை மோர்ந்து குடிக்கவிடாமலும் அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும் பலவகை இடுக்கண்களைச் செய்து நிலைகுலைத்தபடியால் அவிவேக மிகுத்த அற்பர்களுந் தாழ்த்தி அலக்கழிக்க நேரிட்டுவிட்டது.