பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 537


(மூன்றாம் வாசகம் மூன்றாமாண்டு 25ஆம் இலக்கத்தில் தொடங்கி 29ஆம் இலக்கத்தில் முற்றுப் பெறுகின்றது)

4. குண்டலிகேசி

இக்குணடலிகேசியென்னும் பெயர் பூர்வம் மதுரையை அரசாண்டுவந்த ஓர்முக்கியபௌத்தவரசனின் புத்திரி குண்டலிகேசியென்னும் அம்மை பிக்குணிகள் மடமென்னும் இஸ்திரீகள் ஞானசங்கத்திற் சேர்ந்து அறஹத்து நிலை அடைந்தபின் “அறவாழியான் திரிபேதவாக்கியங்களாம் நீதி வாக்கியங்களைத் திரட்டி அந்நூலுக்கு குண்டலிகேசி என்னும் பெயரிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அதன் முகப்பிலுள்ளக்

கடவுள் வாழ்த்து

முன்றான் பெருமெய்க்கு ணின்றான் முடிவெய்துகாரும் நன்றே நினைந்தான் குணமொழிந்தான்றனக்கென் றென்றே
யொன்றானுமில்லா னுள்ளான்பிறர்க்கேயுறுதிசூழ்ந்தான்
நன்றே யிறைவ னவன்றாள் சரணங்களன்றே.

அவையடக்கம்

நோய்க்குற்றமாந் தர்மருந்தின்சுவை நோக்கில்லார்
தீக்குற்ற காதலுடையார்புகைத் தீமெயோரார்
போய்க்குற்ற மூன்று மறுத்தான் புகழ் கூறுவேற் கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழுவல்லவென்றே.

நூல்

தீவினையச்சம்

வாயுவினை நோக்கியுள மாண்டவிய நாவா
யாயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோற்
றீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.

எனும் இத்தகையச் செய்யுட்கள் அமைந்து குண்டலிகேசியென்னும் பெயர் பெற்றுள்ள தன்ம நூலானது தன்மப்பிரியர்கள் யாவரிடத்தேனும் இருக்குமாயினும் இருக்குமிடங் கண்டாயினும் பெற்று உதவி புரிவரேல் அவர்களே சத்திய தன்மத்தைப் பரவச்செய்தவர்களுமாவதுடன் அப்பலனையும் அடைபவர்களாவர். தற்காலம் நம்மிடங் கிடைத்துள்ளது ஒன்பது பாடல்களேயாம்.

3:14, செப்டம்பர் 15, 1909

5. தேன்பாவணி தேவபாணி

வினா: தென்னாடெங்கும் தேன்பரவணியென்னும் நூலை தேன்பாவணி என்று சகலர் நாவிலும் வழங்க தமிழன் பத்திராதிபர் மட்டிலும் தேவபாணி, தெய்வபாணி என்று கூறுவது இவரது தமிழோவென்றும் சங்கிக்கின்றார்கள்.

வே.ந. தாமோதரம்பிள்ளை. பெங்களூர்,

விடை: தமிழின் வாசகநடையிலும், செய்யுள் நடையிலும் வலித்தல் விகாரம், மெலித்தல்விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல்விகாரம் என அறுவகையுண்டு. அத்தகைய இலக்கண நடைகளை தற்கால வித்துவான்கள் அறிந்திருப்போர் சிலரேயாகும். பலர் பூர்வத்தமிழ்ச்செய்யுட்களையும், இலக்கணங்களையுந் தங்கட் கண்களால் கண்டேயிருக்கமாட்டார்கள்.

அவ்வகைக் குறைகூறும் வித்துவான்களை அவர்களது பெயரைக்கண்டு நேரில் எமக்கெழுதும்படி கூறவும்.

தொல்காப்பியம்

அந்நாற் சொல்லுந் தொகுக்குங்காலை வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும், விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழி தொகுத்தலும், நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழி குறுக்கலும் நாட்டல் வலியமென்பனார் புலவர்.