பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548 / அயோத்திதாசர் சிந்தனைகள்

15. தமிழ்பாஷையின் சிறப்பு குன்றிய காலமெவை.

பௌத்த அரசர்களும் பௌத்த சங்கங்களும் பௌத்த உபாசகர்களும் நிலைகுலைந்த காலமே தமிழ் பாஷையின் சிறப்புகுன்றிய காலமாகும். அதாவது, "பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளைபெறா பேதையறிவாளோ பேரானந்தமென்னும்” பெரியோன் வாக்கியப்படி ஆதிபகவனாம் புத்தபிரானால் ஏற்படுத்திய வரிவடிவாம் அட்சரங்களில் அமுதவெழுத்துள்ளது கண்டு தமிழென்றும், விடவெழுத்துள்ளது கண்டு தீராவிடமென்றும் பெயர்பெற்ற பாஷையானது பௌத்தசங்க அறஹத்துக்களிலொருவராகும் அகத்திய முநிவரால் தென்தேசத்தில் இந்திரவியாரங்களாம் மடங்களைக் கட்டிவைத்து சமணமுநிவர்களைச் சேர்த்து விவேகவிருத்தி செய்யுங்கால் தமிழட்சர இலட்சணங்களை விளக்கும் இலக்கண நூற்களையும், பலபொருட்களின் பெயர்களை விளக்கும் இலக்கிய நூற்களையும், விவேகவிருத்திக்குரிய கலைநூற்களையும், கணிதவாராய்ச்சிக்குரிய சோதிடநூற்களையும், ஓடதிவிருத்திக்குரிய வைத்திய நூற்களையும் மேலும் மேலும் வகுத்து மநுமக்களை சீர்திருத்தி சீலத்திலும் ஒழுக்கத்திலும் நிலைபெறச்செய்து மக்கள் கதிகடந்து தேவகதி பெறுவதற்காய வேணநூற்களை வகுத்து மக்களுக்கு மிக்க உபகாரிகளாக விளங்கிவந்தபடியால் தமிழ் பாஷை மேலும் மேலும் விருத்திபெற்று எங்கும் பரவிவந்தது. அதனுடன் பௌத்த சங்கமுள்ள ஒவ்வோர் அறப்பள்ளிகளிலும் சமணமுநிவர்களால் சிறுவர்களுக்குத் தமிழ்ப் பாஷையைக் கற்பித்து விவேக விருத்தியும், வித்துவ விருத்தியும் செய்துவந்தபடியால் வித்துவான்கள் பெருகி தமிழின் பரிமளத்தை எங்கும்வீசி மணக்கச் செய்துவந்தார்கள். அத்தகைய தமிழ் மணமானது மிலேச்சர்களாம் ஆரியர்கள் இத்தேசம்வந்து அறஹத்துக்களாம் பௌத்த பிராமணர்களைப்போல் பொய்வேஷமிட்டு பொய்ப் போதங்களைக் கூறி பொய்மதங்கள் இயற்றி கல்வியற்றப் பெருங்குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு வஞ்சினத்தாலும், சூதினாலும், மித்திர பேதங்களாலும் தன்மநெறியில் நின்ற பௌத்தவரசர்களை அழித்ததினால் வித்துவர் சிறப்பழிந்தும், பெளத்த சங்கங்கள் அழிந்ததினால் கலை நூற்களின் விருத்திகளும், சிறுவர்களின் கல்வி விருத்திகளும் மற்றும் தமிழின் விருத்தி நாசமடைந்ததுடன் சத்துருக்களால் தன்மநூற்களும், கலை நூற்களும் பாழடைந்து சத்தியதன்ம போதங்களற்று அசத்தியதன்மம் மேலிட்டு மிலேச்சர்களின் செல்வாக்கும் கூட்டமும் பெருகிவிட்டபடியால் இத்தேசத்தோர் தமிழ் பாஷையைக் கற்பதற்கே ஏதுவில்லாமல் பாழடைந்துவிட்டார்கள். மிலேச்சர்களின் செல்வாக்கிலும், அவர்களுக்குள் அடங்கியவர்களின் ஆளுகையிலும் நாளது வரையிலிருக்குமாயின் தமிழென்னும் சப்தமும், தற்காலமுள்ள தன்ம நூற்களுமற்று தமிழ்மணமில்லா பொய்ப்புராணங்களே மலிந்து மெய்நூற்கள் முற்றுஞ் சீரழிந்திருக்கும்.

இதன்மத்தியில் உலகோபகாரிகளாகும் சமணமுனிவர்களின் புண்ணியவசத்தால் ஆங்கிலேயர் இவ்விடம்வந்து தோன்றி கனந்தங்கிய எலீசென்னும் துரைமகனால் தமிழ்ச்சங்கமொன்று ஏற்படுத்தி சிதலுண்டு கெட சமீபித்திருந்த ஓலைச் சுவடிகள் யாவையுங் தங்களிடங் கிடைத்த வரையில் அச்சிட்டு வெளிக்குக்கொண்டுவந்து மற்றுமுள்ள நூற்களையும் வெளிக்குக் கொண்டுவருவதற்குள் சென்றுவிட்டபடியால் அச்சங்கத்துள் பௌத்த சத்துருக்கள் நுழைந்து சங்கமேநடவாத ஏதுக்களைச்செய்துவிட்டார்கள். அதன்பின் புரோடிஸ்ட்டன்ட் மிஷநெரிதுரைமக்கள் வந்து சேர்ந்து நாலாபக்கங்களிலும் கலாசாலைகளை அமைத்து கல்வி விருத்தி செய்யுங்கால் தமிழ் விருத்தி கிஞ்சித்துப் பரவி அதன் மணமின்றி தமிழென்னும் சப்தமட்டிலும் ஒலித்துவருகின்றது. பிரிட்டிஷ் துரைத்தனமட்டிலும் இவ்விட மாட்சிபெறாவிடில் தமிழென்னு ஒலியுங் காணாது புத்தரது பெயரும், அவரது சிறப்பும் மறைந்தது போல தமிழென்னும் பெயரும், அதன் சிறப்பும் மறைந்தேபோயிருக்குமென்பது திண்ணம்.