பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 575

கொண்டாடப்பெற்றவரும், சாந்தத்திலும், அன்பிலும், ஈகையிலும் அளவுபடா ஞானத்திலும், மலைவுபடா வாக்கிலும் அவருக்கு உவமெயாக ரூபிக்க சரித்திரங்களில் வேறுதேவர்கள் ஒருவருமில்லாதலால் தனக்குவமெயில்லாதான் தாளைச் சார்ந்தவர்க்கல்லது மனக்கவலையாம் துக்கநிவர்த்தி ஆகாதென வழி நூலார் துணிந்து கூறியவற்றிற்குச் சார்பாக மணிமேகலை ஆக்கியோன் வணிகச் சாத்தனார் "சாதுயர்நீக்கிய தலைவன் தவமுனி" யென்றும், “முற்றுமுணர்ந்த முனிவனையல்லது, மற்றைப்பீடிகை தன்மிசை பெறாஅ” என்றும், வீரசோழிய ஆக்கியோன் புத்தமித்திரனார் “மிக்கவன் போதியின் மேதக்கிருந்தவன் மெய்தவத்தாற் றோக்கவன் யார்க்குந்தொடரவொண்ணாவன் றூயனெனத், தக்கவன்பாதந் தலைமேற்புனைந்து தமிழுரைக்கப், புக்கவன்பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்திமித்தரனே” என்றும், சூளாமணி ஆக்கியோன் தோலாமொழித்தேவர் “திருமறு வுவலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தியொரு மறுவுமிலையென்ப தொழியாமலுணர்த்து மேயொரு மறுவுமில்லையென்ப தொழியாமலுணர்த்துகினு மருமறையை விரித்தாயை யறிவரோ வரியரே” என்றும், “ஒருமெயாற்றுன்பமெய்து மொருவனாயும் மெயாலே, திருமெயான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளப்பநோக்கி, யிருமெயி மொருமெயாலே யியற்றலினிறைவன் போல, பெருமெயையுடைய தெய்வம் பிறிதினி யில்லையன்றே” என்றும், சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் “வீங்கோதவண்ணன் விரைத்த தும்புபூம்பிண்டித், தேங்கோதமுக்குடைக் கீழ்த்தேவர்பெருமானைத், தேவர் பெருமானைத் தேனார்மலர் சிதரி, நாவினவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே” என்றும் தனக்கு என்னுந் தானே தானே தத்துவமானத் தவநிலை முதல்வனுக்கு நிகரில்லாதது விண்டும், ததாகதரையே தலைவனாகக் கொண்டும் மனக்கவலை மாற்றுதற்கு பீடகமாயது கண்டும் புத்தரது சீர்பாதத்தைச் சாராதார்க்குத் தீவினையொழிந்து மனக்கவலை மாறாதென்பது விரிவு.

8.அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.

(ப.) அறவாழி - தருமச் சக்கரத்தோனாம், அந்தணன் - சாந்தரூபியின், தாளைச்சேர்ந்தார்க்கு - கமலபாதத்தை யண்டினவருக்கு, அல்லால் - அல்லது, பிறவாழி - ஜெனனக்கடலை, நீந்துதல் - கடத்தல், அரிது - கடினமென்பது பதம்.

(பொ.) தருமச்சக்கரத்தோனாம் சாந்தரூபியின் கமலபாதத்தைச் சார்ந்தோர்க்கல்லது ஜெனனக்கடலை கடத்தல் கடினம் என்பது பொழிப்பு.

(க.) எண்ணருஞ்சக்கிரவாளம் எங்கணும் அறக்கதிர் விரித்த அருகனாம் புத்தரது பாதபடியைச்சேர்ந்து அவரது தன்ம பாதத்தில் நடப்போரன்றி ஏனையோர் பிறவிக்கடலாம் துக்க நிவர்த்தியடைவது அரிதென்பது கருத்து.

(வி.) சருவ உயிர்களையுந் தன்னுயிர் போற் காக்குந் தண்மெய்தேகியாய மகாராஜனது திருவடியாம் அறஹணவடிகளைச்சார்ந்தவர்கள் அலைகடல் தோன்றி தோன்றி மறைவதுபோல் பல ஜெனன தோற்றங்களால் மாறிமாறி பிறப்பதற்கு ஏதுவாய் பற்றுக்களற்று துக்கநிவர்த்தியாம் நிருவாணசுகமடைவார்கள். அறவணவடிகளைச் சேராதும் சத்தியதன்மத்தில் நடவாதும் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசையென்னும் பற்றுக்கள் அறாமலு முள்ளவர்கள் பிறவிக்கடலாந்துக்கநிவர்த்தி பெறுதல் அரிது, அரிதாதலின் அறவாழியானாம் புத்ததன்ம சங்கத்தைச் சார்தலே அழகென்று வழி நூலார் கூறியவற்றிற்குச் சார்பாக மணிமேகலை ஆக்கியோன் வணிகசாத்தனார் “அறவியங்கிழவோனடியிணையாகி பிறவியென்னும் பெருங்கடல்விடூஉ” என்றும், "ஆதி முதல்வன் அறவாழியாள்வோன் பாதபீடிகை பணிந்தனளேத்தி" என்றும் "அறக்கதிராழி திறப்பட வுருட்டிய, காமற்கடந்த வாமன்பாதம்" என்றும், அறநெறிச்சாரம் ஆக்கியோன் முனைப்பாடியார் “கொல்வதூஉங்