பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 577


10.பிறிவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவனடிசேராதார்.

(ப.) இறைவன் - போதி வேந்தனது, அடி - தன்மபாதத்தை யடைந்தோர், பிறவிப்பெருங்கடல் - ஜெநநசாகரத்தை, நீந்துவர் - கடப்பார், சேராதார் - அடையாதார், நீந்தார் - கடக்கமாட்டார்க ளென்பது பதம்.

(பொ.) போதி வேந்தனாம் அறவணனடிகளைச் சேர்ந்தோர்க்குப் பிறவியினது துக்கம் ஒழியும் சேராதார்க்குத் துக்கம் ஒழியாதென்பது பொழிப்பு.

(க.) அலையுற்ற கடல்போல் அவாவின் பெருக்கப்பற்றினால் உண்டாம் பிறவியின் துக்கத்தைப் போக்கிக் கொள்ளவேண்டியவர்கள் புத்தரது அடிகளாய சாரணசங்கத்தைச் சேர்ந்து அவரது போதனா ஓடத்திலேறி வாணமென்னும் பாசபந்தக் கட்டுக்களைக் கடந்து நிருவாணமென்னும் பிறவியற்றக் கரைசேர்வார்களென்பது கருத்து.

(வி.) பிணியின் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையும் கண்ணினாற்கண்டு இத்தகைய துக்கங்களுக்கு ஏதுபிறப்பென்றும், பிறப்பிற்கு ஏது பாசபந்த பற்றுக்களென்றும், பற்றுக்களுக்கு ஏது அவாவென்றுங் கண்டுணர்ந்து தனது அரசபோக அவாவினை ஒழித்து பாசபந்தப் பற்றுக்களை அறுத்துப் பிறவியென்னுந் துன்பக்கடலை கடந்தபெரியோன் தான் கடந்த வழியை உலகமக்களுக்கூட்டி அவர்களுக்குள்ள பல இன்பதுன்பங்களையும் ஒழிக்கச்செய்விக்கவேண்டுமென்னுங் கருணையின் பற்றினால் சத்திய சங்கங்களைச் சேர்த்து சாரணர்களாம் அறவணவடிகளை நிலைக்கச்செய்து அவ்வடிகளைச் சேர்ந்தோர்களைப் பிறவியின் சமுத்திரத்தைக் கடந்து கடைத்தேறச் செய்துவருகின்றபடியால் அவரது அடிகளாம் சங்கத்தைச் சேர்ந்தவர்களே பிறவியின் துக்கத்தை ஒழித்து பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரண துக்கம் யாவையும் ஜெயிப்பரென்னும் அநுபவக்காட்சியால் அவரடிகளைச் சேர்ந்தோரேபிறவியின் கடலைக்கடப்பரென்றும் அடிகளைச்சேராதோர் பிறவியின் கடலைக் கடவாரென்றுந் துணிந்து கூறியவற்றிற்குச் சார்பாக சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் "கருமக்கடல்கடந்த கைவலச் செல்வ, னெரிமலர்ச்சேவடியை யேத்துவார் யாரே, யெரிமலர்ச் சேவடியை. யேத்துவார் வான்றோய், திருமுத்தவிராழிச்செல்வரேயன்றே" என்றும், சித்தாந்தக்கொத்து "அருநெறியார் பாரமிதையாறைந்து முடனடக்கிப், பொருள் முழுதும் போதிநிழனன்குணர்ந்தமுநிவரன்ற, னருள்மொழியா னல்வாய்மெ யறிந்தவரே பிறப்பறுப்பார், மருணெறியாற் பிற நூலு மயக்கறுக்குமா றுளதோ" வென்றும், மணிமேகலை ஆக்கியோன் வணிகச்சாத்தனார் "அறவியங் கிழவோ னடியிணையாகிய, பிறவியென்னும் பெருங்கடல் விடூஉ" என்றும், "என்பிறப்பொழிய நின்றோய் நின்னடி” என்றுங் கூறியுள்ள சார்பால் புத்தரது சங்கதன்மமென்னும் ஈரடிகளைச்சேர்ந்தோரே பிறவியின் கடலை நீந்துவர். ஏனையோர் நீந்தாரென்பது விரிவு.

இப்பாயிரம் பத்துப்பாடலினும் ஆதியங் கடவுளாம் புத்தரையே வாழ்த்தி அவரது அடிகளாம் சங்கத்தையும் தன்மத்தையும் சிறப்பித்துக் கூறியவற்றுள் மகடபாஷையாம் பாலியினின்று சகட பாஷையாம் வட மொழியையும், திராவிட பாஷையாம் தென் மொழியையும் அக்கைதங்கையர் போல் முதற்குரவராம் ஆதிபகவனால் ஈன்றும் அவரது முத நூலாம் திரிபேத வாக்கியங்களென்னும் திரிபீடகமாம் மும்மறை மொழிக்கும் வழி நூலாந் திரிக்குறளெனத் தோன்றியுள்ள இம்முப்பாலுக்கு அந்தரார்த்தங் கூறுமிடத்து வடமொழியும் தென்மொழியும் மருவி நிரவுவதால் மார்க்கம் விளங்குமன்றி மருவாவிடத்து மறைவதுகண்டு இருமொழியையும் நிரவி வரைந்துவருகின்றாம். இவற்றுள் எஞ்சிய பாலி நிகண்டினது மேற்கோள் மிஞ்சும் புத்தகத்தில் வெளியாம்.

புத்தரது சிறப்புப் பாயிரம் முற்றும்