பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 579

சமுத்திரநீர் சூழ்ந்திருப்பினும், பசி - பசியக்கினியானது, உண்ணின்று - தனக்குள் தானே தோன்றி, றுடற்றும் - வதைக்கும் என்பது பதம்.

(பொ.) சமுத்திர நீர் சூழ்ந்த மண்ணுலகமாயினும் மழைப்பெய்யாவிடின் மக்கள் வாதைக்கு உள்ளாவ ரென்பது பொழிப்பு.

(க.) உப்புநீர் உலகை சமுத்திரமாகச் சூழ்ந்திருப்பினும் மக்களுக்குப் பயனில்லை, அச்சமுத்திர நீர் ஆகாயத்திற்கு ஏகி அதிலுள்ள உவர்நீக்கி சுத்தநீராகப் பெய்வதே பயன். ஆதலின் அந்நீர் பெய்யாமல் பொய்க்குமிடத்துள்ள சீவர்கள் சருவமும் பசியால் வருந்துமென்பது கருத்து.

(வி.) பசிக்கு ஆதாரம் புசித்தலும் அருந்துதலுமாம். புசித்தலுக்கும் அருந்துதலுக்கும் ஆதாரம் மண்ணும் நீருமென்னப்படும். அந்நீருள் சமுத்திர நீரை விளைநிலத்திற்குப் பாய்ச்சில் பலன்தரா. அருந்தினுந் தாகந்தீரா. ஆதலின் விரிந்து பரவிய சமுத்திரநீர் எங்கும் எக்காலத்துங் கிடைக்கக்கூடியதாயினும் சீவராசிகளுக்குப் பயனில்லை. அதனிலுள்ள உப்பை ஆகாய உப்புடன் சேர்த்துவிட்டு, சுத்தநீராகப் பெய்யும் மழையால் விளைநிலங்களில் தானியங்கள் விளைந்து சீவராசிகளுக்குப் புசிப்பளிப்பதுமன்றி அருந்துதலுக்கும் ஆதாரமாகிப் பசியாற்றி போஷித்துவருகின்றது. அத்தகைய விண்ணீர் காலத்திற்பெய்யாது பொய்த்துப் போமாயின் சருவசீவர்களும் பசியால் வருந்தி மடியுமென்று கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் திரிவாசகம் ஆக்கியாளாகும் அம்மனும் “ “வானஞ்சுருங்கிற் றானஞ்சுருங்கும்” எனக் கூறிய விரிவாம்.

4.ஏரினுழாஅ ருழவர் புயலென்னும்
வாரிவளங் குன்றிக்கால்.

(ப.) உழவர் - வேளாளர், புயலென்னும் வாரி - ஏரிநீர், வளங்குன்றி - நீர்வளங்குன்றிய, கால் - காலத்தில், ஏரி னுழாஅ - யேருழாரென்பது பதம்.

(பொ.) மழைபெய்யாது புயலென்னும் பெரும் ஏரி குன்றுமாயின் வயலுக்குப்பாயும் நீரற்று வேளாளர் பூமியை ஏருவிழாரென்பது பொழிப்பு.

(க.) காலமழைப்பெய்து பெரும் ஏரிகளில் நீர் நிறைந்துள்ளகாலத்தில் உழவர் பூமியை உழுது நீர்பாய்த்து தானியங்களை விளைவிப்பார்கள். காலமழை பெய்யாது ஏரிநீர் வற்றிப்போமாயின் மேழியர்கள் மாடுபூட்டி வயல்களை ஏருவிழா அரென்பது கருத்து.

(வி.) வயல்கள் சூழ்ந்த கிராமவாசிகளாகிய வேளாளர்கள் தங்கள் பண்ணைத்தொழிலைச் சரிவரச்செய்து காலமறிந்து தானியங்களை விளை வித்துத் தாங்கள் சுகம் பெறுவதுடன் ஏனையமக்களும் சீவராசிகளும் புசித்து சுகவிருத்தி பெறுமாறு கிராமங்களுக்கருகே புயலேரிகளைக் கட்டி வயல்களுக்குக் காலத்திற்குத் தக்கவாறுநீரினைப் பாய்த்து நாத்துமுடி ஓங்கவும், நாத்து முடி ஓங்க கதிருகள் பெருகவும், கதிருகள் பெருக, தானியவிருத்தி யடையவும், தானியவிருத்தி பெருக குடி, படை, சகலமும் ஓங்கவும் குடிகளும், படைகளுமோங்க அரசர் சிறக்கவுமாயுள்ளது மழையினால் நிறம்பியுள்ள புயலேரிகளின் ஆதாரமேயாதலின் அத்தகைய மழைபெய்யாமலும் பெரும் ஏரிகள் நிரம்பாமலும் போமாயின் வயல்களும் வறண்டு நாத்து முடிகளுந் தீய்ந்து, பயிறுகளும் பாழடைந்து, சீவராசிகளும் பசியால் மடியவேண்டியது மெய்யாதலின் புயலேரிகளது நீர்வளங்குன்றில் வேளாளர்கள் ஏருவிழார் களென்பது விரிவு.

ஏரெழுபதின் ஆக்கியோன் கம்பர் கூறியவை:

வெங்கோபக் கலிக்கடந்த வேளாளர் விளைவயலுட்
பைங்கோல முடிதிருந்த பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதக் களியானைப் போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங் கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே

பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைதடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி லல்லது மற்றிரவியுந்தேர் பூட்டானே.