பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

602 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) பெண்கள் அவரவர்கள் கற்பை அவரவர்களே காத்துக்கொள்ள வேண்டுமேயன்றி தங்கள் காவலாளர்களேனும் ஏனையோர்களாலேனுங் காக்கலாகாதென்பது கருத்து.

(வி.) படைமருண்ட பாலரையுங்காக்கலாம், கடல் மடைதிரண்ட வெள்ளத்தையுங் காக்கலாம், கருமுகில் பொழியு மழையையுங் காக்கலாம், பெண்களின் கற்பை எவராலுங் காக்கலாகாது. ஆதலின் பெண்களின் கற்பின் நிலையை அவரவர்களே காத்து வாழ்க்கைக்குத் தலைமெயாக விளங்கவேண்டு மென்பதற்குச் சார்பாய் குறுந்திரட்டு “மறைமொழி காக்குஞ் செங்கண் முநிவர்கள் அனந்தமுண்டு, நிறைமொழி காக்கு மன்னுதிடமுளோர் பலருமுண்டு, சிறையுளார் பெண்கள் காப்பைப் பெண்களே காப்பரன்றி, குறைவறக் கற்பையென்றுங் காப்பவரில்லை கண்டீர்" என்னுமுதுமொழிகொண்டு பெண்களினது கற்பைக் காக்கக்கூடியவனும் உலகத்திலுளனோ, இல்லை. அப்பெண்மணிகளே தங்கள் தங்கள் கற்பின் நிலையைக் காத்துக்கொள்ள வேண்டுமென்பது விரிவு.

8.பெற்றார் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு மூலகு.

(ப.) பெண்டிர் - பெண்களுள், பெருஞ்சிறப்புப் - கற்பின் புகழை, பெற்றார் - அமைந்தவர்களை, பெறிற் - துணைவியாகப் பெற்றவர்கள், புத்தேளிர் - மெய்கண்டோர், வாழுமுலகு - வானராட் சியத்தை, பெறுவர் - எவ்விதத்துஞ் சேருவார்களென்பது பதம்.

(பொ.) வாழ்க்கைக்குத் துணைவியாக அமைந்த பெண்மணியானவள் கற்பினது புகழைப் பெற்றிருப்பாளாயின் அவளது கணவன் எவ்விதத்தும் புத்ததேவனுலகைச் சேருவானென்பது பொழிப்பு.

(க.) கணவனுக்கு இனியவளாக இருந்து அவனது சொற்றவறாது நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் நான்குவகை சிறப்பினின்று இல்லறத்தை நடத்துவாளாயின் கணவன் எடுக்குஞ் செயல்கள் யாவுஞ் சீர்பெற முடிவதுடன் மனமாசு கழுவுதற்கு நல்லேதுவாகநிற்றலால் புத்ததேவன் உலகைச்சேருதற்கும் வழியுண்டாமென்பது கருத்து.

(வி.) இல்லறத்தில் கலைநூல் கற்று கடைத்தேறமுயலுவோனுக்கு கற்புடைய மனையாளுந் துணைவியாகச் சேருவாளாயின் அவ்வில்லத்தில் ஆனந்த தன்மம் பரவுவதுடன் இல்லோன் முடிக்கும் முயற்சிகள் யாவும் முட்டின்றி முடிவது இயல்பாதலின் அவற்றை உணர்ந்த பெரியோன் குடும்பிக்குத்தக்க குணவதியுஞ்சேருவாளாயின் தேகம் இரண்டாயின் மனம் ஒன்றித்துவாழுஞ் செயலால் நீதியும், நெறியும், வாய்மெயும் நிலைத்து நீடிய சுகவாழ்க்கைப்பெற்ற காட்சியே வானராட்சியத்திற்கு ஆதாரமெனக்கண்டு, கற்பிற்கு இனியாளைத் துணைவியாகக்கொண்டவன் தனது நற்சுகப்பேற்றால் எவ்விதத்தும் புத்ததேவனுலகைச் சேருவானென்பதற்குச் சார்பாய் அருங்கலைச்செப்பு “இல்வாழ்க்கைக்கேற்ற விளம்பெண்ணமைவளேல், நல்லாக்கும் வீட்டிநிலை" "கணவனுக்கேற்ற கற்புடையாள் கூடின் துணையவியாகந் தூநெறியின் தூள், "மனமொத்துவாழு மனையாளுமுண்டேல், கனமுற்ற வீடுதரும்”, “அறநெறி வாழ்க்கை யமர்ந்தோ ளகத்துரில், பிறப்பறும் பாதையதுவாம்" என்னும் ஆதாரங்கொண்டு கற்புடைய மாதர் காட்சியே கனந்தருமென்பது விரிவு.

9.புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை.

(ப.) புகழ்புரிந் - கற்பினது சிறப்பு, தில்லிலோர்க் - இல்லாதவளை யுடையவனுக்கு, கில்லை - யாதொரு சுகமுங்கிடையா, யிகழ்வார்முன் - தன்னைப் பழிப்போர்முன், னேறுபோற் - எறுமெபோல், பீடுநடை - வல்லநடை குன்றிபோ மென்பது பதம்.