பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

604 / அயோத்திதாசர் சிந்தனைகள்

குறுந்திரட்டு “புத்திரப் பேற்றைப் பெறுமவனென்னிற் பேரறிவாளனேயாயின், முத்திரமூன்று மொழிமுதலாய்ந்து மோனமாமவ் வரம்பிருத்தி, சித்திரதீபம் போலசைவற்று தெய்வநற் கதிதனைப்பெற்று, உத்தமவுரவின் முறையதே யென்று முலகெலா மோங்கு மெய்ப்போதம்” என்னும் மக்கட்பேற்றைப் பெறுதலில் விவேகமிகுத்தப்புத்திரரைப் பெறுதலினும் மேலாயப் பொருளில்லை என்பது விரிவு.

2.எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

(ப.) எழுபிறப்புந் - எழுவகைத் தோற்றங்களும், தீயவை - தீவினைப் பயனேயாம், தீண்டா - அவற்றைச் சாராதும், பழி - நிந்தை, பிறங்கா - ஒலியாதும், பண்புடை - குணங்குடியாகு, மக்கள் - புத்திரரை, பெறின்- பெறுவதே சிறப்பென்பது பதம்.

(பொ.) எழுவகைப் பிறப்புந் தீவினை போகத்தையே ஓராதாரமாகக் கொண்டு தோற்றலால் அத்தீவினைக்கணுகாதும் நிந்தையொலியாதும், நற்குணமமைந்த மக்களைப்பெற்று பிறப்பின்தோற்றம் ஒழிவதே சிறப்பென்பது பொழிப்பு.

(க.) வினைபோகமே எழுவகைத்தோற்றங்களுக்கும் ஆதாரமாதலின் அத்தீவினையை அணுகாதும் நிந்தைக்கு ஆளாகாததுமாய நற்குண மக்கள் தோன்றி நிருவாணம் பெறுதலே மேலாம் என்பது கருத்து.

(வி.) தேவர், மக்கள், விலங்கு, பட்சி, தாபரம், ஊர்வனம், நீர் வாழ்வனம், ஆகிய எழுவகைத் தோற்றங்களுக்கும் தீவினையே பீடமாதலின் அத்தகைய தீவினைக் காளாகாதும், பழிபாவத்துக்கு ஆளாகாதும் விவேகமுற்று நற்குணம் அமையும் மக்களைப்பெற்று தாங்கள் சிறப்படைவதுடன் மக்கள் பெற்ற பெரும்பேற்றால் உலக மக்களும் அறிவுவிருத்திப்பெற்று கடைத்தேறுவார் களென்பது விரிவு.

3.தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.

(ப.) தம்பொரு-தன்னுடைய பொருள், ளென்பதம் - என்பதூஉம், மக்கள் - புத்திரர், அவர்பொரு - அவர்களுடைய பொருளும், டந்தம்-தங்கடங்கள், வினையான் - கன்மத்திற்கீடாய், வரும் - சேருமென்பது பதம்.

(பொ.) தங்கள் பொருளென்பதும் தங்கள் புத்திரர்கள் பொருளென்பதும் அவரவர்கள் வினைக்கீடாகவந் தமையும் என்பது பொழிப்பு.

(க.) தாங்கள் பெற்ற பொருளும், தங்கள் புத்திரர் பெற்றபொருளும் அவரவர்கள் வினைக்கீடாக வந்தமையினும் தந்தை பொருள் மைந்தனுடையதும், மைந்தன் பொருள் தந்தையுடையது என்பது கருத்து.

(வி.) தந்தையது பொருள் மைந்தனுடையதும், மைந்தனது பொருள் தந்தையுடையதுமாக விளங்கலால், தந்தையது தீவினை மைந்தனைத் தழுவியும், மைந்தனது தீவினைத் தந்தையைத் தழுவியும் வருதலைக்கண்ட பெரியோன் பண்பமைந்தப் புத்திரனைப்பெறுதலே பெரும்பாக்கியமென்றுங் கூறுதற்கு இயைந்து தந்தை பொருளே மைந்தன்பொருளென்றும்; மைந்தன் பொருளே தந்தைபொருளென்றும் பொய்ப்பொருள் விளக்கி நல்வினைபயனால் உண்டாம் மெய்ப்பொருளை உணறுதற்கு நற்குணமமைந்த மைந்தனைப் பெற விரும்பும் தந்தையும் நற்குணனாகவே விளங்கவேண்டுமென்பது விரிவு.

4.அமிழ்தினு மாற்ற லினதே தம்மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.

(ப.) அமிழ்தினு - சுவைமிகுத்த பானத்தினும், மாற்றலினிதே - மிக்க மேலாயது, தம்மக்கள் - தனது புத்திரர்கள், சிறுகை - சிறுத்த கைகளால், யளாவிய - தொழாவிய, கூழ்-மாவின் கஞ்சு என்பது பதம்.

(பொ.) தான் ஏழைக் குடும்பியாகிக் கூழருந்தினும் தனது புத்திரர் சிறுவிரல்களிட்டு அக்கூழைத் தொழாவுவார்களாயின்புத்திரரின் இன்பப் பெருக்கே அக்கூழை அமுதினும் இனிதாகக் கொள்ளுவரென்பது பொழிப்பு,