பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 605


(க.) புத்திரர்கள் மீதுள்ள இன்பப்பெருக்கத்தால் அவர்களது சிறிய விரல்களால் தொழாவியது கூழேயாயினும் அதனை தேவாமிர்தத்திற்கு ஒப்பாகப் புசிப்பாரென்பது கருத்து.

(வி.) அன்பும், இன்புந் திரண்ட உருவே புத்திரபாக்கியமாகத் தோன்றலால் அவர்கள் சிறுவிரலால் தொழாவியது கூழேயாயினும் அதனை இனிய அமுதினும் மேலாகக்கொண்டு புசிப்பதுடன் அச்சிறு விரல்களையும் ஆனந்தமாக சுவைப்பார்களென்பது விரிவு.

5.மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.

(ப.) மக்கண் - குழந்தைகளினது, மெய்தீண்ட - தேகத்தைத் தொடுதல், லுடற்கின்ப - பிதாவினது உடலுக் கின்பந்தரும், மற்றவர் - மற்று மக்குழவியினது, சொற்கேட்ட - மதலைசொற் கேட்டல், செவிக்கு - காதிற்கு, லின்பஞ் - இன்பத்தை விளைவிக்குமென்பது பதம்.

(பொ.) குழவிகளை எடுத்துத் தீண்டல் உடலுக் கின்பத்தையும், அதனது மதலைச்சொற்களைக்கேட்டல் செவிக்கு இன்பத்தையுந் தருமென்பது பொழிப்பு.

(க.) அருங் குழவிகளது உடலேனும் பாதமணுந் தங்களுடலிற் படில் அரியவின்பத்தையும், அக்குழந்தைகளினது இனிய மதலைச்சொற்களை செவிகளிற் கேட்டல் அதனினும் இன்பத்தைத் தருமென்பது கருத்து.

(வி.) பஞ்சஸ்கந்தங்களுடன் அன்பும் இன்புஞ் சேர்ந்து அரியக்குழந்தையாகத் தோன்றுதல் இயல்பாதலின் அதன் தோற்றங்கண்ட பெரியோன் குழந்தைகளின் மதலைச்சொற்களைக் கேட்டலும், அதனுடலைத் தழூஉதலும் அதி இன்பந்தருமெனக் கூறியவற்றிற்குச் சார்பாய் புறநானூறு "படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும், உடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக், குறுகுறு நடந்து சிறுகைநீட்டி, யீட்டுந் தொட்டுங் கௌவியுந்துழந்து நெய்யுடையடிசின் மெய்பட விதிர்த்து, மயக்குறு மக்களை இல்லோர் பயக்குறவிலர்தாம் வாழுநாளே” என்பதுகொண்டு மதலைசொற் கேட்டலும் அதனுடல் தழுவுதலுமே இன்பநிலையாம் இல்லறவியல் என்பது விரிவு,

6.குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்.

(ப.) மக்கண் - குழந்தைகளது, மழலைச்சொற்-குதலைமொழிகளை, கேளாதவர் - செவியிற் கேட்டறியாதவர்கள், குழலினி - புள்ளாங்குழலினோசை யினிது, தியாழினி - வீணையினோசை யினிது, தென்பதம் - என்று கூறுவரென்பது பதம்.

(பொ.) தாங்கள் ஈன்றக் குழந்தைகளினது மதலைமொழியின் இன்பத்தைக் கேட்டுணராதவர்கள் புள்ளாங்குழலோசையையும், வீணை யினோசையையுமே நன்கு மதிப்பரென்பது பொழிப்பு.

(க.) குழந்தைகளின் இனிய மொழிகளைக் கேட்டு இன்புறாதவர்கள் குழலினோசையையும், வீணையினோசையையுமே விசேஷம் மதிப்பார் களென்பது கருத்து.

(வி.) வீணையினோசையும், புள்ளாங்குழலினோசையும் பெரிதல்ல. மக்களினது மதலைமொழிகளினோசையே மிக்க இன்பத்தைத் தருமென்பதை விளக்குவான்வேண்டி மக்களைப் பெறாதோர் செவியின் இன்பத்தையும், பெற்றோர்கள் செவியினின்பத்தையும் இனிது விளக்கியுள்ளவற்றிற்குச் சார்பாய் பாரதம் "கல்லாமழலைக்கனியூற்ற கலந்து கொஞ்சுஞ் சொல்லாலுருக்கி யழுதோடித் துடர்ந்துபற்றி, மல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சிமைந்தர், இல்லாதவர்க்கு மனைவாழ் வினினிமெயென்னாம்" மக்கள் பெருக்கே இனிது கண்டு அவர்களது இனிய ஓசையே மற்ற இசைகள் யாவிற்கும் மேலாயதென்பது விரிவு.