பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

606 / அயோத்திதாசர் சிந்தனைகள்


7.தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

(ப.) தந்தை - தகப்பனானவன், மகற்காற்று - தன்மைந்தனுக் கூட்டியுள்ள நல்லொழுக்கத்திற்கு, நன்றி - பிரிதியுபகாரமியாதெனில். வையத்து - உலகத்தில், செயல் - அந்நற்செயல், முந்தியிருப்ப - சகலருக்கும் நன்கு விளங்குக வென்பது பதம்.

(பொ.) தகப்பன் மகனுக்கு ஊட்டியுள்ள நல்லொழுக்கப்பயிற்சிக்கு மைந்தன்செய்யும் பிரிதியுபகாரம் யாதெனில் உலகத்தில் நல்லொழுக்க மைந்தனென முந்தவிளங்குவதே அதன் பொழிப்பு.

(க.) மைந்தனானவன் தனதுதந்தையால் கற்பித்துக்கொண்ட ஆற்றலாம் நல்லொழுக்க சுகத்திற்குப் பிரதி நன்றி யாதெனில் உலகமக்களுள் நல்லோனென முந்தயிருப்பதே அதன் கருத்து.

(வி.) பிதாவானவன் நல்லொழுக்க ஆற்றலுடையவனாயிருந்து தன் மைந்தனை நல்லொழுக்க ஆற்றலடையச்செய்த நன்றிக்கு மைந்தனது பிரதிநன்றியாதெனில் உலகமக்களில் நற்செயல் வாய்த்தோன், நற்கடை பிடித்தோன், நல்லவனெனத் தந்தையின் பெயரை முந்த விளக்குவதே அதன் விரிவு.

8.தம்மிற் றம்மக்க ளறிவுடைமெ மானிலத்து
மன்னுயிர்க்கெல்லா மினிது.

(ப.) தம்மிற் - தன்னினும், றம்மக்க - தனது புத்திரர்கள், ளறிவுடைமெ - மேலாய வறிவுடையவர்களாக விளங்குவார்களாயின், மானிலத்து - சிறந்த பூமியினிடத்துள்ள, மன்னுயிர்க் கெல்லா - சருவ சீவர்களுக்கெல்லாம், மினிது - சுகந்தருமென்பது பதம்.

(பொ.) தன்னைவிட தனது புத்திரர்கள் மேலாய விவேகமிகுத்திருப்பார்களாயின் சருவ சீவர்களுக்கும் இனியவர்களாக விளங்குவார்களென்பது பொழிப்பு.

(க.) தான் கல்வியைக்கற்று விவேகவிருத்திப் பெறாதவனாயினும் தனது மக்களுக்கு விவேகவிருத்தி செய்விப்பானாயின் அவர்கள் சகல வுயிர்களிடத்தும் இனியவர்களாக விளங்குவார்களென்பது கருத்து.

(வி.) உலகத்தில் மானிகளாகத் தோன்றியுள்ள மானிடர்கள் அறிவை விருத்தி செய்யுங் கலை நூற்களைக் கல்லாவிடினும் தங்கள் மக்களுக்குக் கற்பித்து அறிவின் விருத்தியை செய்விப்பார்களாயின் தங்கள் மக்களது விவேக விருத்தியால் கருணை மிகுத்து சருவவுயிர்களையுந் தன்னுயிர்போல் பாதுகாக்கும் இனியச் செயலால் மன்னுயிர்கள் யாவும் அவர்களை ஓம்பற்குத் தங்கள் மக்களைத் தங்களுக்குமேலாய விவேகவிருத்தி செய்விக்கவேண்டு மென்பதற்குச் சார்பாய் பாசமாட்சி “எந்நெறியானுமிறைவன்றன் மக்களைச், செந்நெறிமேனிற்பச்செயல்வேண்டு - மன்னெறி, மான்சேர்ந்த நோக்கினா யாங்கவணங்காகுந், தான் செய்த பாவை தனக்கு” என்பது பொருந்தத் தன்மக்களை தன்னினும் விவேகமிகுதிபெறக் கற்பிக்கவேண்டுமென்பது விரிவு.

9.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்.

(ப.) ஈன்றபொழுதிற் மைந்தனைப் பெற்றபொழு துண்டாகிய மகிழ்ச்சியினும், பெரிதுவக்கும் - பெருமகிழ்ச்சியாக விளங்கும், தன்மகனை - தனது புத்திரனை, சான்றோனென - மேன்மகனெனச் சொல்லக்கேட்ட, தாய் - யீன்றவளுக் கென்பது பதம்.

(பொ.) மைந்தனைப் பெற்றபொழு துண்டாகிய ஆனந்தத்தினும் மற்றவர்களால் அவனை விவேகமிகுத்த மேன்மகனென்று சொல்லக்கேட்ட தாயானவள் அதனினும் மேலாய ஆனந்தங்கொள்ளுவாள் என்பது பொழிப்பு,

(க.) புத்திரனைப்பெற்றபோ துண்டாய வானந்தத்தினும் அவனை விவேகமிகுத்த மேன்மகனென்று சொல்லக்கேட்ட தாயானவள் அதனினும் மேலாய வானந்தங்கொள்ளுவாள் என்பது கருத்து.