பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 649


2.உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளை
கள்ளத்தாற் களவே மெனல்

(ப.) உள்ளத்தா - தன தெண்ணத்தால், லுள்ளலுந் - எண்ணுதலும், தீதே - கொடிதே, பிறன்பொருளை - அன்னியருடையபொருளை, கள்ளத்தாற் - களவினால், கள்வேமெனல் - அபகரிப்போ மென்பது பதம்.

(பொ.) தன்னெண்ணத்தால் எண்ணுதலுங் கொடிதே அன்னியர் பொருளை அபகரிப் போம் என்பது பொழிப்பு.

(க.) அன்னியர் பொருளை அபகரிப்போம் என்று தனதுள்ளத்தில் எண்ணுதலே கொடிது என்பது கருத்து.

(வி.) அன்னியனது பொருளின் மீது பேரவாக்கொண்டு அதனை அபகரிக்க வேண்டுமென்று தனதுள்ளத்தில் எண்ணுதலே மிக்கத் தீதுக்குக் கொண்டு போகும் உள்ளக் கிளர்ச்சியாம் என்பதற்குச் சார்பாய் நாலடி நாநூறு “உள்ளத்தானள்ளா துறுதித்தொழிலராய்க், கள்ளத்தா னட்டார்கழிகேண்மெ - தெள்ளிப், புனற்செதும்புநின்றழிக்கும் பூங்குன்றநாட, மனத்துக்கண் மாசாய்விடும்” என கள்வனுக்குள்ளக் களங்கு பகவனுக்கு விளங்கிப்போம் என்பது விரிவு.

3.களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்.

(ப.) களவினா - அன்னியர்பொருளை அபகரித்தலால், லாகிய - சேர்ந்த, வாக்க - செல்வமானது, மளவிறந் - மென்மேலும், தாவதுபோலக் - பெருகுவதுபோல, கெடும் - அழியுமென்பது பதம்.

(பொ.) அன்னியர் பொருளை அபகரித்ததால் சேர்ந்த செல்வமானது வளர்வது போல அழியும் என்பது பொழிப்பு.

(க.) களவினால் சேகரித்தப் பொருள் காட்சியில் வளர்வது போலவே அழிந்துப் போம் என்பது கருத்து.

(வி.) அன்னியரை வஞ்சித்துக் களவாடும் பொருட்களானது தன் கண்ணிற்குப் பெருகுவதுபோலக் காணினும் அஃது போகும்வழி தோன்றாது அழிந்துபோம் என்பது விரிவு.

4.களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

(ப.) களவின்கட் - அன்னியர் பொருளை யபகரிக்கவேண்டி, கன்றிய - ஊன்றிய, காதல் - ஆசையானது, விளைவி ன்கண் - தனது விருத்தியினிடத்து, வீயா - ஒழியா, விழுமந்தரும் - துன்பத்தைக்கொடுக்குமென்பது பதம்.

(பொ.) அன்னியர் பொருளை அபகரிக்கவேண்டி ஊன்றிய ஆசையானது தனது விருத்தியினிடத்து ஒழியாத் துன்பம் தரும் என்பது பொழிப்பு.

(க.) எப்போது அன்னியன் பொருளை அபகரிக்கும் இச்சையில் ஆழ்ந்து நிற்கின்றானோ அவன் விருத்தி பெறச்செய்யுந் தொழில்கள் யாவற்றினுந் துன்பத்தை அனுபவிப்பான் என்பது கருத்து.

(வி.) கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டுமென்னும் நாணய முயற்சியை விடுத்து அன்னியன் பொருளை அபகரிக்க விரும்பும் பேரவாவுடையவன் செய்யுந் தொழில்கள் யாவற்றினுந் துன்புற்று அலைவான் என்பது விரிவு.

5.அருள்கருதி யன்புடை யராதற் பொருள்கருதிப்
பொச்சப்புப் பார்ப்பார் கணில்.

(ப.) அருள்கருதி - கிருபையை விரும்பி, யன்புடையராதல் - சிவனிலை யடைதல், பொருள் கருதி - அன்னியரதுபொருளை விரும்பி, பொச்சாப்புப் - அழியுநிலையை, பார்ப்பார்கணில் - நோக்குவோரிடத்திராவென்பது பதம்.

(பொ) கிருபையை விரும்பி சிவநிலையடைதல் அன்னியர் பொருளை விரும்பி அழியுநிலையை நோக்குவோரிடத்து இரா என்பது பொழிப்பு