பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நிலையாய உணர்வால் உண்மெயில் அன்பை வளர்த்தல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) வாழ்நாளானது என்றும் நிலையாயுள்ள வொன்றுபோல்காட்டி உயிர் நீங்கி விடுவது இயல்பாதலின் அவ்வகை நீங்காது உயிர் நிலைப்பெற வேண்டுவோர் தங்களது வாழ்நாள் உணர்வையும் அன்பையும் உண்மெய்யில் வளர்த்தவேண்டு மென்பது விரிவு.

5.நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

(ப.) நாச்செற்று - வாயடங்கி, விக்குண் - பிராணயிடையூறு, மேல் - தன்னை நோக்கி, வாராமு - வருவதற்குமுன், நல்வினை - துறவறச்செயலை, மேற்சென்று - முநிந்துபோய், செய்ய - செய்வதாயின், படும் - பயமகன்று போமென்பது பதம்.

(பொ.) வாயடங்கிப் பிராண இடையூறு தன்னைநோக்கி வருவதற்குமுன் துறவறச்செயலை முநிந்துச் செய்வதாயின் பயமகன்றுப்போம் என்பது பொழிப்பு.

(க.) கண்பஞ்சடைந்து கடைவாய்வீழ்ந்து பிராணாவத்தை அடைவதற்குமுன் துறவற நெறியைக் கடைபிடித்து ஒழுகுவதாயின் அப்பிராணாவத்தையின் பயம் பட்டுப்போம் என்பது கருத்து.

(வி.) நல்வினையாம் துறவறச்செயலில் வழுவறநின்று புறப்பற்று அகப்பற்று ஒழிக்கும் நிட்டையிலிருப்போருக்கு மரணபயமில்லையாதலின் நாவிழுந்து பிராண இடையூறு வருவதற்குமுன்பு நல்லறமாந் துறவறத்தைக் கடைபிடித்து ஒழுகும் நன்வினைச்செயலில் சதா நிற்றல்வேண்டும் என்பது விரிவு.

6.நெருன லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமெ யுடைத் திவ்வுலகு.

(ப.) நெருன - தன்னையடுத்து, லுளனொருவ - உள்ள வொருவன், னின்றில்லை - இன்றே யில்லாமற்போனான், யென்னும் - என்று கூறும், பெருமெ - தடித்த யாக்கையை, யுடைத்திவ்வுலகு - உலகம் உடைத்தாயுள்ள தென்பது பதம்.

(பொ.) தன்னை அடுத்து உள்ளவொருவன் இன்றே இல்லாமற்போனான் என்று கூறும் தடித்த யாக்கையை உலகம் உடைத்தாயுள்ளது என்பது பொழிப்பு.

(க.) இன்று என்னுடனிருந்தான் இன்றே இறந்தானென்னும் பெருத்த உடலை தோற்றவைத்துள்ளது உலகமென்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோற்றியுள்ள பெருத்த உடலானது இன்று என்னுடனிருந்தான் கிடந்தான் தன்கேள் அலறச் சென்றான் என்னும் நிலையற்றுள்ளதை நிலையென்று எண்ணிக்காம வெகுளி மயக்கங்களை பெருக்கலாகாது என்பது விரிவு.

7.ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

(ப.) கோடியுமல்லபல - பலகோடி மக்களையும், கருதுப - உணருங்கால், ஒருபொழுதும் - முக்காலத் தொருகாலும், வாழ்வ - நிலையாக வாழ்ந்தவரை, தறியார் - கண்டிருக்கமாட்டர்க ளென்பது பதம்.

(பொ.) பலகோடி மக்களையும் உணருங்கால் முக்காலத்து ஒருகாலும் நிலையாக வாழ்ந்தவரைக் கண்டிருக்கமாட்டார்கள் என்பது பொழிப்பு.

(க.) பலகோடி மக்களது வாழ்க்கைகளையும் உய்த்துணர்ந்து நோக்குங்கால் நிலையாக வாழ்ந்திருப்பவர்கள் ஒருவரையுங் கண்டிருக்க மாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) செல்காலம், நிகழ்காலம், வருங்காலமென்னும் முக்காலங்களில் ஒருகாலத்தேனும் பலகோடி மக்களுள் ஒருவரேனும் நிலையாக வாழ்ந்தவரைக் கண்டிரார்களென்பதைக் கருதிப்பார்க்க விளங்கும் என்பது விரிவு.