பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 707


6.நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

(ப.) நெஞ்சிற்றுறவார் - மனக்களங்கங்களை யகற்றாதோர், துறந்தார்போல் - மனக்களங்கமற்ற துறவிகளாம் சமணமுநிவர்களைப்போல், வஞ்சித்து - கபடவேஷமிட்டு, வாழ்வாரின் - சங்கத்திற் சேர்ந்து வாழ்வோர்களினும், வன்கணாரில் - வேறு கொறுறப்பார்வையுடையோ ரிராரென்பது பதம்.

(பொ.) மனக்களங்கங்களை அகற்றாதோர் மனக்களங்கமற்ற துறவிகளாம் சமணமுநிவர்களைப்போல் கபடவேஷமிட்டு சங்கத்திற் சேர்ந்து வாழ்வோர்களினும் வேறு கொறூரப்பார்வை உடையோர் இரார் என்பது பொழிப்பு.

(க.) மனமாசினைக் கழுவாது மனமாசற்றத்துறவிகளாம் அறஹத்துக் களைப் போல் பொன்னாடை புனைந்தும் கரத்தில் ஓடு ஏந்தியும் இல்லறத்தோரை வஞ்சித்தும் பொருள் பறிப்போருமாய் இருப்பராயின் அவர்களைவிட வேறு கொடூரப்பார்வை உடையார் இராரென்பது கருத்து.

(வி.) மனத்தினின்றெழூஉங் குடிகெடுப்பு, வஞ்சினம், பொறாமெ, பொருளாசை முதலியக் களங்கங்களை அகற்றாது இவைகள் யாவையும் அகற்றியுள்ள முநிந்தோர்களாம் சமண முனிவர்களைப்போல் வேஷம்பூண்டு பேதைமக்களை வஞ்சித்துப் பொருள் பரிப்போரினுங் கொடுங்கண்ணுள்ளார் உலகத்தில் வேறும் உளரோ என்பது விரிவு.

7.புறங்குன்றி கண்டனையரேனு மகங்குன்றி
மூக்கிற் குரியா ரிடத்து.

(ப.) புறங்குன்றி - தேகந் தளர்வுறக், கண்டனையரேனு - காணக்கூடியவர்களாயினும், மகங்குன்றி - உள்ள பாவங்களற்றுள்ள, மூக்கிற் - முகத்தால், குரியாரிடதது - ஞானக்கருணைநிலை விளங்குமென்பது பதம்.

(பொ.) தேகங் தளர்வுறக் காணக்கூடியவர்களாயினும் உள்ள பாவங்களற்றுள்ள முகத்தால் ஞானக்கருணைநிலை விளங்கும் என்பது பொழிப்பு.

(க.) துறவிக்கு மூப்பினால் தேகந் தளர்வுறினும் உள்ளக் களங்கமற்ற நிலை ஞான கருணாகரமுகத்தால் விளங்கும் என்பது கருத்து.

(வி.) துறவுபூண்டு சங்கஞ்சேர்ந்தும் தனக்குள்ள வஞ்சகச்செயலானது தனது கொடியப்பார்வையில் விளங்குவதுபோல துறந்தோன் மூப்புநிலை அடையினும் அவனது மனமாச கன்றச் செயலானது கருணை நிறைந்தமுகத்தால் விளங்கும் என்பது கூடாவொழுக்க விரிவு.

8.மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

(ப.) மாந்தர் பலர் - துறவடைந்த மக்களுட்பலர், நீராடி - தேகசுத்தஞ்செய்து, மறைந்தொழுகு - பொன்னாடையுள் மறைந்தும், மனத்தது - தன்மனத்துள்ள, மாசாக - களங்கமறாது, மாண்டார் - மரணமுற்றாரென்பது பதம்.

(பொ.) துறவடைந்த மக்களுட் பலர் தேகசுத்தஞ்செய்து பொன்னாடையுள் மறைந்தும் தன்மனத்துள்ளக் களங்கமறாது மரணமுற்றார் என்பது பொழிப்பு.

(க.) மரணதுக்கத்தைப் போக்கி பிறப்பறுக்கற்கு துறவுபூண்டு தேகசுத்தமட்டிலுஞ் செய்து மஞ்சளாடையுள் மறைந்தும் தன்மனோ சுத்தஞ்செய்யாது, மரணதுக்கத்திற்கு ஆளானார்கள் பலர்கள் என்பது கருத்து.

(வி.) பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகைத் துக்கங்களுள் மரணத்தை ஜெயித்துக் கொண்டால் மற்றும் மூன்றுவகைத் துக்கங்களுந் தானே ஒழிந்து போமென்று எண்ணி துறவற முன்னி, சங்கஞ்சேர்ந்து சமணநிலை பெற்று சகலருங்காண முப்போதுங் குளித்து உடல்சுத்தஞ்செய்து மஞ்சளாடையுள் மறைந்தும் பொன் போன்ற தன்னுள்ளத்தை சுத்தஞ்செய்யாது மரணதுக்கத்திற்காளாவது என்னோவென்னும் இரஞ்சல் விரிவு.